கணவன்
சந்திரிகா அழகாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். நடனத்திற்கு ஏற்ப நவரசங்களும் அவள் முகத்தில் வெளிப்பட்டன. இடையே இழையோடிய மெல்லிய புன்னகையும் வசீகரித்தது. எந்தவிதச் சலனமும் சந்தேகமும் தனக்கில்லை என்பதையும், இது தனக்குக் கைவந்த கலை என்பதையும், அவள் கண்களில் இருந்த தெளிவும் நம்பிக்கையும் காட்டின. அதனால்தானோ என்னவோ ஆறு பேர் ஆடிய நடனத்தில் இவள் முன்னிலை ஏற்றிருந்தாள். பின்னால் ஆடிய சிலர் இவளைப் பார்த்து ஆடியதையும் கவனிக்க முடிந்தது. ஐந்து மணி நேரம் நடந்த நடனப் பள்ளியின் ஆண்டு விழாவில், அடுத்தடுத்து வந்த பல நடனங்களில் சிறப்பாகப் பங்கேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மேடையில் ஆட்சி செய்து கொண்டிருந்தாள் சந்திரிகா.

இடைவேளை வந்தது. வளாகத்தில் இருந்த சிற்றுண்டி விடுதியில் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சந்திரிகா. "செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, என்னடா பாக்குற? அம்மாவைத் தெரியலையா! அம்மாடா செல்லம்" என்று அவள் கொஞ்சியதை பார்த்தவர்களுக்கு மட்டுமே அவள் தாய் என்பது தெரியும். அத்தனை ஒப்பனையில் அதுவரை தாயைப் பார்த்திராததால், குழந்தைகூடச் சற்று தடுமாறியது. ஆனால் தாயின் கொஞ்சும் குரல் கேட்டதும் பொக்கை வாய் காட்டிச் சிரித்தது. என்னதான் மேடையில் ஆட்சி செய்தாலும், குழந்தையில் சிரிப்புக்குத் தாய் என்றுமே அடிமைதானே! மெய்மறந்து குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளை, வடை, டீயுடனும் வந்து இடைமறித்தான் அமுதன். "குழந்தையை குடுத்துட்டு சாப்பிடுடா. 10 நிமிஷம்தான் இருக்கு. ஆடறதுக்கு எனர்ஜி வேணும்ல" என்றபடி குழந்தையை வாங்கிக் கொண்டு வடையைக் கையில் கொடுத்தான். வடையை இரண்டு வாய் கடித்து, அரை கப் டீயைக் குடித்துவிட்டு, "அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. நான் போறேன்" என்று ஓடப்போனாள் சந்திரிகா. அதுவரை சிரித்துக் கொண்டிருந்த குழந்தை, அவள் ஓடியதைப் பார்த்ததும் அழத் தொடங்கியது. இரண்டு அடி எடுத்து வைத்தவள் திரும்பி வந்து, "அழாதேடா, அம்மா வந்துருவேண்டா. அழக்கூடாது என்ன?" என்று குழந்தையை ஒருமுறை அணைத்துவிட்டு மீண்டும் கிளம்பினாள். திரும்பி வரப் போனவளை, "உன்னைப் பாக்க பாக்க அழுதுகிட்டேதான் இருப்பா. கொஞ்ச நேரத்தில சரியாயிடுவா. நான் பாத்துக்கறேன். நீ போடா. நல்லாப் பண்ணு" என்று சொல்லி அனுப்பினான் அமுதன்.

அழுத குழந்தையை விட்டுப் பிரிய மனமில்லாமல், திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே மேடையை நோக்கிச் சென்றாள் சந்திரிகா. இன்னமும் பலமாக அழுத குழந்தையைச் சமாளிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான் அமுதன். "குழந்தைக்கு பசிக்குது போல", "கண்ணைக் கசக்குறா, தூக்கம் வருது போல, தோள்ல போட்டு தட்டுங்களேன்" என்று போவோர் வருவோரெல்லாம் அறிவுரை கொடுக்க, இன்னும் சிலர் அவனைப் பரிதாபமாகப் பார்த்ததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.

குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடந்தான். சற்றே குழந்தையின் அழுகை அடங்கிய பின், மனைவியின் நடனத்தைப் பார்த்து, சிறிதாவது அதை வீடியோவில் பதிவு செய்ய நினைத்து அரங்கத்துக்குள் நுழைந்தான். அவ்வப்போது சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தையைச் சமாளித்துக் கொண்டு முடிந்த அளவு நடனத்தையும் பதிவு செய்து கொண்டான்.

"குழந்தையோட ரொம்ப கஷ்டப்படுறீங்க போல" என்று கேட்டாள் நண்பரின் மனைவி. "பரவால்லே. தினந்தினம் நான் வேலைக்குப் போறப்பல்லாம் அவதானே குழந்தையையும் சமாளிச்சுக்கிட்டு, வீட்டு வேலையையும் பாத்துக்கிறா! எல்லா நாளும் அவ அப்படி செய்யும்போது ஒரு நாள் நான் மேனேஜ் பண்ணினா என்ன ஆயிடும்!" என்று கூறிவிட்டு, மீண்டும் பதிவு செய்யத் தொடங்கினான் அமுதன்.

ஜெயா மாறன்
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com