பழையன கழிதலும்..
"அம்மா அப்போ முடிவா நீ வரலையா?" ஸ்ரீராமின் குரலில் தயக்கம் தெரிந்தது.

"ஆமாம்பா, நான் வரலை. நீங்க போயிட்டுவாங்கோ. குட்லக்" புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி, நிமிர்ந்து ஸ்ரீராமை பார்த்துச் சொன்னாள் புவனா. "நான் பீச்சுக்கு போய் உட்காரப் போறேன்" புவனா என்னதான் சாதாரணமாகப் பேச முயன்றாலும் அவளது முகத்தில் இறுக்கம் தெரிந்தது.

"சரி. அப்போ நீங்க கார்ல போங்கோ, நாங்க டாக்ஸில போறோம்" என்றாள் ரேவதி, ஸ்ரீராமின் மனைவி தன் கைப்பையை எடுத்துக்கொண்டே. "இந்தோ இருக்கு பீச்சு. நான் ஒரு ஆட்டோ பிடிச்சுக்கறேன். நீங்க கார்ல போங்கோ" என்றாள் புவனா.

"சரி. விஷால், பாட்டிக்கு ‘பை’ சொல்லிட்டு கிளம்பு" என்றான் ஸ்ரீராம். டி.வி. பார்த்துக் கொண்டிருந்த ஆறுவயது விஷால் சமத்தாய் எழுந்து பாட்டியைக் கட்டியணைத்து "பை பை பாட்டி" என்று சிரித்தான்.

"பைடா செல்லம். என் அருமை பேரா! என் குலக்கொழுந்தே!" என்று அவன் கன்னத்தைத் தடவி முத்தமிட்டாள் புவனா. ‘குலக்கொழுந்தே' என்ற வார்த்தையில் அழுத்தம் சற்று அதிகமாகவே கேட்கவே, ஸ்ரீராமும் ரேவதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஸ்ரீராமின் முகத்தில் சற்று சலிப்பு தெரிந்தது, ஆனாலும் அவன் ஒன்றும் சொல்லவில்லை. "வரேம்மா" என்றபடி வெளியே நடந்தான். ரேவதியும், விஷாலும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் கிளம்பிய பதினைந்து நிமிடங்களில் புவனாவும் தனது செல்போனையும், பர்சையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். கதவைப் பூட்டிக்கொண்டு லிப்டில் ஏறிக் கீழே வந்தாள்.

வாசலில் அவளைப் பார்த்ததும் செக்யூரிடி "வணக்கம்மா" என்று சலாம் போட்டான். பெசன்ட் நகரில் பீச்சுக்கு நாலு தெரு தள்ளி, ஒரு பெரிய சொகுசு ஆபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ் அது.

"ஒரு ஆட்டோ பாரு செல்வம். பீச்சுக்கு" என்றாள் புவனா.

"இதோம்மா" என்றபடி கேட்டை நோக்கி விரைந்தார் செக்யூரிடி செல்வம். ஐந்து நிமிடத்தில் ஆட்டோ வந்தது.

*****


கடற்கரையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நாலு மணிதான் என்றாலும் லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது. மணலில் மெல்ல நடந்து சற்று வெளிச்சமான இடத்தில் அமர்ந்தாள் புவனா. மயங்கும் மாலைப்பொழுது, இதமான கடற்கரைக் காற்று, கடலலைகள் கரையில் வந்து மோதும் சத்தம், இவையெல்லாம் புவனாவுக்கு ரொம்பவே பிடித்த விஷயங்கள். வாரம் மூணு, நாலு தடவையாவது கடற்கரைக்கு வந்துவிடுவாள். "உனக்கென்னமா, பீச்சுக்குப் பக்கத்துல பங்களா! நெனச்சா கடற்கரைக் காத்து. பெசன்ட் நகர் சொகுசுவாசி நீ, நாங்கெல்லாம் அப்படியா?" பல்லாவரத்தில் இருக்கும் புவனாவின் அக்கா மாயா போனில் பெருமூச்சு விடுவாள். இப்பொழுது செல்வச் செழிப்பில் புவனாவின் குடும்பம் இருந்தாலும், ஆரம்பம் என்னவோ ரொம்பவே கஷ்டம்தான். எதிர்பாராத விதமாக மாரடைப்பில் புவனாவின் கணவர் சிறுவயதிலேயே இறந்துபோக, இரண்டு குழந்தைகளுடன் அனாதையாக நின்றாள் புவனா. கூடப்பிறந்தவர்கள் தங்களால் முடிந்த உதவிகள் செய்தாலும், புவனா சும்மா இருக்கவில்லை. உடனடியாக வேலை தேடினாள். பீ.யூ.சி வரை படித்திருந்ததால் எளிதாக அரசாங்கப் பள்ளியில் வேலை கிடைத்தது. அந்தக் காலம்! யாருக்கும் பாரமாகத் தன் குடும்பம் ஆகிவிடக் கூடாது என்ற வைராக்கியத்தால் அயராது உழைத்தாள் புவனா. படிப்படியாக முன்னேறி, ஓய்வு பெறும்பொழுது தலைமை ஆசிரியையாகி, நல்லாசிரியர் விருதும் பெற்றிருந்தாள்.

குழந்தைகள் ஸ்ரீராமும், ரஞ்சனியும் பொறுப்புணர்ந்து படித்து, ஆளாளுக்குக் கணினித் துறையில் நல்ல வேலையில் அமர்ந்தார்கள். ரஞ்சனி திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறாள், ஸ்ரீராம் இங்கே சென்னையில். பெசன்ட் நகரில் மூன்று படுக்கை அறை அபார்ட்மென்ட், கார், சமையலுக்கு ஆள் என்று எல்லா வசதிகளுடன்.

ஸ்ரீராமும் அவனது மனைவியும் புவனாவை தங்கத்தட்டில் வைத்து தாங்குகிறார்கள் என்றால் அது மிகையல்ல. புவனாவுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, தாய்சொல்லைத் தட்டாத தனயனாய் ஸ்ரீராம். மாமியாருக்கு உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் இன்றுவரை காட்டி எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ரேவதியோ ஊர் மெச்சும் மருமகள். ஆறு வருடத்திற்கு முன் விஷால் பிறக்க வீட்டில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. சண்டை, சச்சரவு, மனஸ்தாபம் என்பது மிக அரிது. இப்படி எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த இந்தக் குடும்பத்தில் யார் கண்பட்டதோ கடந்த ஆறுமாதமாக இறுக்கமான சூழ்நிலை. காரணம் ஒரு கருத்து வேறுபாடு. ஸ்ரீராமும், ரேவதியும் ஒருபுறம், புவனா இன்னொருபுறம். யாரும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை.

*****


ஆறு மாதங்களுக்கு முன் ஒரு வழக்கமான காலைப் பொழுது, ரேவதியும் ஸ்ரீராமும் அன்று லீவு போட்டிருந்தார்கள். விஷால் பள்ளிக்குப் போய் இருந்தான். "விஷால வைச்சுகிட்டு பேச வேண்டாமேன்னுதான் லீவு போட்டோம்" என்று ஆரம்பித்தான் ஸ்ரீராம். ரேவதியும் அவன் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.

"என்ன விஷயம்? சொல்லுப்பா. எதாவது பிரச்சனையா?" பதறினாள் புவனா. "அதெல்லாம் ஒண்ணுமில்லை. நல்ல விஷயம்தான்" என்று அவளை ஆசுவாசப்படுத்தினாள் ரேவதி.

"என்ன சொல்லுங்கோ!"

"நாங்க அடுத்த குழந்தைக்கு ட்ரை பண்ணலாம்னு இருக்கோம்" என்று சிரித்தான் ஸ்ரீராம். அதைக் கேட்டதும் புவனா பூரித்துப் போனாள். "வெரிகுட். நல்ல முடிவு. விஷாலுக்கும் ஆறு வயசாச்சு, உங்களுக்கும் வயசு கூடறது. நானா கேக்க வேண்டாம்னு இருந்தேன். ரொம்ப சந்தோஷமப்பா" என்று ரேவதியை அணைத்துக்கொண்டாள்.

"ஆமாம்மா ரெண்டு குழந்தைங்க வேணும்னு நானும் ஸ்ரீராமும் முதல்லேயே டிசைடு பண்ணியிருந்தோம். இப்போ சரியான டைம்" சிரித்தாள் ரேவதி.

"கண்டிப்பா. விஷாலுக்கும் கூடப் பிறந்தவங்க வேண்டாமா? ஒத்தைக் குழந்தையா ஏன் கஷ்டப்படணும்? கடவுள் புண்ணியத்துல அடுத்தது பொண்ணாப் பிறக்கட்டும். நான் வேண்டிக்கறேன்," புவனாவுக்கு எக்கச்சக்க குஷி, இருப்புக் கொள்ளவில்லை. "சர்க்கரை போடணும் உங்க வாய்க்கு. இரு!" என்று எழுந்தாள்.

"இரும்மா, ஒரு சின்ன விஷயம்" என்று அவளை நிறுத்தினான் ஸ்ரீராம். "இரண்டாவது குழந்தை நாங்க பெத்துக்கப் போறதில்லை. தத்து எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்."

"என்ன!" புவனா அதை எதிர்பார்த்திருக்கவில்லை.

"ஆமாம்மா, அடாப்ட் பண்ணிக்கலாம்னு இருக்கோம்" ரேவதி.

"என்னாச்சுமா? உனக்கு உடம்புக்கு ஏதாவது?" மீண்டும் பதறினாள் புவனா.

"போச்சுடா! ஏம்மா எதுக்கெடுத்தாலும் பதட்டம்? ஏன் கெட்டதையே யோசிக்கற? ரேவதிக்கு ஒண்ணும் இல்லை" என்று அவளை சோபாவில் அமர வைத்தான் ஸ்ரீராம்.

"பின்ன? ஏன் தத்து எடுத்துக்கணும்? புரியல" குழம்பினாள் புவனா.

"ஏன் குழந்தை பெத்துக்க முடியலேனாதான் தத்து எடுத்துக்கணுமா? எங்களுக்கு இன்னொரு குழந்தை வேணும், பெத்துக்கறத விட, ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துக்கலாமே?"

ஸ்ரீராமின் கேள்விக்கு டக்கென்று பதில் சொல்ல முடியவில்லை புவனாவால். "நம்ம குடும்பத்துக்குப் புதுவரவு, ஒரு அப்பா அம்மா இல்லாத குழந்தைக்குப் புதுக் குடும்பம்" ரேவதியின் முகத்தில் மலர்ச்சி.

"ஹ்ம்ம், அது வந்து.." இழுத்தாள் புவனா. "கேக்க நல்லதாம்மா இருக்கு. நடைமுறைக்கு ஒத்துவராது!"

"ஏம்மா? என்ன ஒத்துவராது?" குழம்பினான் ஸ்ரீராம்.

"எப்படி சொல்றது? எனக்கு என்னமோ இது சரியா தோணலை. இதைப்பத்தி அப்புறம் பேசலாமே?" என்று முடித்தாள் புவனா. ஆரம்பத்திலிருந்த குஷி இப்பொழுது இல்லை அவள் முகத்தில், மாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அதற்குமேல் ஸ்ரீராமும் ரேவதியும் பேச்சைத் தொடரவில்லை. புவனாவுக்கு இந்த விஷயத்தை ஜீரணிப்பதற்கும், யோசிப்பதற்கும் கால அவகாசம் தேவை என்பது அவர்களுக்குப் புரிந்தது.

புவனா இப்படித்தான், அவளுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால், வாக்குவாதம் பண்ணமாட்டாள், பேச்சைத் தவிர்த்துவிடுவாள். சிலசமயங்களில் பெரும் சண்டை வராமால் தடுக்க அந்தக் குணம் உதவினாலும், பல சமயங்களில் அடுத்தது புவனாவிடம் அந்த பேச்சை ஆரம்பிக்கவே முடியாது. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி பேச்சை மாற்றிவிடுவாள். அதையேதான் இந்த முறையும் செயல்படுத்தினாள். "அப்பறம் பேசலாமே", "இன்னும் யோசிக்கலப்பா", "என்ன அவசரம்", "எனக்கு ரொம்ப அசதியா இருக்கு", என்று சால்ஜாப்பு சொல்லிப் பேச்சைத் தவிர்த்து வந்தாள். ஸ்ரீராமும், ரேவதியும் ஒரு மாதம் கழித்து மீண்டும் புவனாவை அமரவைத்து பேசினார்கள்.

"யோசிச்சியாம்மா?" என்று ஆரம்பித்தான் ஸ்ரீராம் "நானும் ரேவதியும் அடாப்ஷன் ஏஜென்சிக்குப் போய் விசாரிக்கலாம்னு இருக்கோம்"

"ஆமாம்! எங்க அப்பா அம்மாக்கு சம்மதம். நீங்க என்ன சொல்றேள்? எல்லோரும் குடும்பமா முடிவெடுக்க வேண்டியது முக்கியம்" என்றாள் ரேவதி.

"யோசிச்சேன், எனக்கு என்னமோ இது ஒத்துவரும் போலத் தோணலை" புவனாவின் சிந்தனையில் மாற்றம் எதுவும் இல்லை.

"என்ன காரணம்? சொல்லு."

"அட, எதுக்கு தத்து எடுத்துக்கணும் சொல்லு? உங்களால முடியலேனா சரி. நீங்க ரெண்டு பெரும் ஆரோக்கியமாதானே இருக்கேள்" எதிர்க்கேள்வி கேட்டாள் புவனா.

"அது இல்லம்மா காரணம். நான் அப்பா இல்லாம வளர்ந்தவன், எனக்கு அந்தக் கஷ்டம் தெரியும். ஒரு ஆதரவற்ற குழந்தைக்கு நாங்க அப்பா அம்மாவ இருக்கணும்னு ஆசைப்படறோம்."

"உங்க நல்ல மனசு எனக்குப் புரியரதுப்பா. கேக்க நல்லாதான் இருக்கு, இல்லைன்னு சொல்லல. உனக்கு உதவி செய்யணும்னா சொல்லு, நம்மளால முடிஞ்ச தொகையை ஒரு அநாதை ஆசிரமத்துக்கு நன்கொடையாக் குடுக்கலாம். குடும்பமாப் போய் முடிஞ்ச சரீர உதவிகள பண்ணலாம்." சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தாள் புவனா," அதை விட்டுட்டு தத்து எடுக்கறதெல்லாம்.. வேண்டாம்பா! ஒத்து வராது."

"பைசா குடுக்கறது சரிம்மா. அது ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கறது போல வருமா?"

"என்னப்பா, புரியாம பேசற. என் பேத்தி உன் ரத்தமா இருக்கணும்னு நான் நினைக்க மாட்டேனா? அது நியாம்தானே?"

"அம்மா, அதான் ரெண்டாவது குழந்தையை தத்து எடுக்கறோம், விஷால் எங்க ரத்தம்தானே?" ரேவதி

"அது எப்படிமா? ரெண்டும் ஒண்ணா? ரெண்டு பேரையும் ஒரு சமமா பாக்கமுடியுமா?"

"ஏம்மா முடியாது, எங்களால முடியும்" உறுதியாய் சொன்னான் ஸ்ரீராம்.

"உங்களால முடியும்பா, சொந்த பந்தம்?"

"என்னம்மா சொந்த பந்தம்? ரஞ்சனியை எனக்கு நல்லாத் தெரியும், அமெரிக்கால இருக்கா. ரேவதி அக்காவும், அண்ணாவும் எங்களுக்கு சப்போர்ட்டாதான் இருக்கா. உனக்கும், ரேவதியோட அப்பா அம்மாக்கும் ஓகேன்னா, வேற யாரையும்பத்தி எனக்குக் கவலை இல்லை."

"சரி ஒரு உதாரணத்துக்கு சொல்லேன், நமக்கு தெரிஞ்சு வேற யாரு தத்து எடுத்திருக்கா?"

"எங்க மாமா பையனும் அவன் ஒய்ஃபும் அடாப்ட்தான் பண்ணியிருக்கா" என்றாள் ரேவதி.

"சரி எதோ ஒருத்தரை தெரியும்னே வைச்சுக்குவோம். நம்ம குடும்பத்துக்கு இது ஒத்து வருமா? எந்த குழந்தையோ, யாரு பெத்தாளோ"

"அம்மா! இத்தெல்லாம் ஒரு காரணமா?" எரிச்சல் வந்தது ஸ்ரீராமுக்கு.

அதற்கு மேல் பேச விரும்பவில்லை புவனா.

மாதங்கள் கழிந்தன. ஸ்ரீராமும் ரேவதியும் பலமுறை பேசிப் பார்த்துவிட்டார்கள், அமெரிக்காவிலிருந்து ரஞ்சனியும் போனில் புவனாவிடம் பேசினாள். ஆனால் புவனாவின் முடிவில் பெரிய மாற்றம் இல்லை. ஸ்ரீராம் ரொம்பவே திண்ணமாய் இருந்தான். இன்னொரு குழந்தை என்றால், அது தத்து எடுத்துதான் என்று உறுதியாய் சொல்லிவிட்டான். இழுபறிக்கு ஒரு முடிவாக "உங்க இஷ்டம், என்னிடம் கேக்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டாள் புவனா. இதோ இன்று முதல் முறையாக ஸ்ரீராமும் ரேவதியும் அடாப்ஷன் ஏஜன்சிக்குப் போயிருக்கிறார்கள்.

*****


"சுண்டல், சூடான சுண்டல்" குரல் கேட்டு புவனாவின் சிந்தனை கலைந்தது. வயதான ஒரு பெண்மணி கையில் ஒரு கூடை, பேப்பர், பொட்டலங்களுடன் அவள் பக்கத்தில் நின்றாள்.

"சுண்டல் வாங்கும்மா"

"வேண்டாம்மா" என்றாள் புவனா.

"ஒண்ணு வாங்கிக்கோம்மா, சூடான சுண்டல்" குரலைத் தாழ்த்திக் கேட்டாள் அந்தப் பெண்மணி.

"வேண்டாம்மா" புவனா மீண்டும் மறுக்கவே அவள் ஒன்றும் பேசாமல் நகர்ந்தாள். புவனா தன் செல்போனை எடுத்துத் தனது அக்கா மாயாவுக்கு டயல் செய்தாள். அதற்குள் சுண்டல் பெண்மணி மீண்டும் அவள் பக்கத்தில் வருவது தெரிந்தது.

"அம்மா"

போனைத் துண்டித்துவிட்டு அவளைப் பார்த்தாள் புவனா. "ஏம்மா, வேணாம்னு சொன்னா புரியாதா?" குரலை உயர்த்தினாள்.

"அம்மா, கோபப்படாதீங்க! உங்க பேரு புவனேஸ்வரிதானே? சொந்த ஊரு வத்தலகுண்டு?"

"ஆ..மா..ம்..." குழம்பினாள் புவனா. "நீ?"

"நெனைச்சேன்! அட, நான் செல்லம். செல்லம்மாள்" என்று சிரித்தாள் அந்தப் பெண்மணி. "என்னைத் தெரியலை? சுப்பு வாத்தியார் பொண்ணு. உங்க பக்கத்து வீடு!"

ஆச்சரியத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை புவனாவிற்கு. "செல்லம்..." தடுமாறினாள் "நீயா?"

"ஆமாம்! எத்தனை வருஷமாச்சு பாத்து" என்று கூடையை மணலில் வைத்துவிட்டு புவனாவின் அருகே அமர்ந்தாள் செல்லம். "உக்காரலாமா? உன் பக்கத்துல இந்த சுண்டல்காரி?"

புவனா உடனே அவள் கைகளை பிடித்து இறுக்க அணைத்துக்கொண்டாள். "என்னடி செல்லம் இப்படி கேக்கற? எப்படி இருக்க?"

"பாத்தா தெரியலை?" என்று விரக்தியாய் சிரித்தாள் செல்லம். இருவரும் பேசத் துவங்கினார்கள். நாற்பது வருடக் கதையை நாலு நிமிடத்தில் சொன்னாள் செல்லம்.

செல்லமும் புவனாவும் பால்ய சிநேகிதிகள். வளரும் பொழுது அடுத்தடுத்த வீடு. இருவரது குடும்பங்களும் பரம்பரை பரம்பரையாகப் பழக்கம். செல்லம் கிட்டத்தட்ட புவனாவின் வயது. புவனாவுக்குத் திருமணமாகி ஒரு ஆண்டு கழித்து செல்லத்துக்கும் திருமணம் நடந்தது. எதிர்பாராத விதமாக ஐந்து ஆண்டுகள் கழித்து செல்லத்தின் கணவர் சாலை விபத்தில் இறந்து போக, புவனாவைப் போலவே செல்லமும் கையில் ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு குழந்தைகளுடன் தனிமரமாய் நின்றாள். உதவிசெய்ய கூடப்பிறந்தவர்கள் யாரும் இல்லை செல்லத்துக்கு. பெரிதாகப் படித்திருக்கவில்லை, அதனால் சமையல், வீட்டு வேலை என்று சிறிய வேலைகளைச் செய்தாள். ரொம்பவே கஷ்ட ஜீவனம். அவளது மகன் மஞ்சள் காமாலையில் பத்து வயதில் இறந்து போக, செல்லம் மிகவும் ஒடிந்து போனாள். அவளும், மகளும் என்று குடும்பம் சுருங்கிப் போனது. தினமும் வயிற்றைக் கழுவுவதே கஷ்டமாக இருந்ததால் அவள் பெண்ணையும் படிக்கவைக்க முடியவில்லை, முன்னேறுவதற்கான எந்த வழியும் இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு அவள் மகள் ஆட்டோக்காரர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு மும்பைக்குப் போக, செல்லம் அனாதையானாள். சென்னைக்கு வந்து, இப்பொழுது பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டிருக்கிறாள்.

"என்னடி கொடுமை இது! எப்படி இருந்தவ நீ?" செல்லத்தின் கதையை கேட்டு புவனாவின் கண்கள் கலங்கின.

"என்ன பண்ணறது? உன்னை மாதிரி படிச்சிருந்தா, கொஞ்சமாவது வாழ்க்கைல முன்னேறி இருக்கலாம்."

"ஆமாம்! நீயும் படிக்கணும்னு தான் நினைச்ச, ஆனா முடியலை!"

"நியாபகம் இருக்கா? நாம எட்டாவது முடிச்சப்போ, என்னோட பாட்டியும், உன்னோட பாட்டியும் ஒண்ணா சேந்துகிட்டு, பொட்டசிங்க எதுக்கு படிக்கணும்னு என்ன பிடிவாதம் பிடிச்சாங்க!"

"நல்ல நியாபகம் இருக்கு. உங்க அப்பா உங்க பாட்டி சொன்னத கேட்டுகிட்டு உன் படிப்பை நிறுத்திட்டார்."

"ஆமாம்! உங்க அப்பா பரவாயில்லை, பிடிவாதமா உன்னை மேல படிக்க வைச்சார். நீ பண்ணின புண்ணியம், இல்லேன்னா உன் வாழ்க்கையும் கஷ்டமாகிப் போயிருக்கும்."

"சரியாச் சொன்ன!"

புவனா தன் வீட்டு முகவரியையும், செல்போன் எண்ணையும் ஒரு பேப்பரில் எழுதி செல்லத்திடம் கொடுத்தாள். வார இறுதியில் அவளைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். ஸ்ரீராமிடம் சொல்லி ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணுவதாகச் சொன்னாள். செல்லம் மறுத்தாலும் விடாமல் ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை அவள் கையில் திணித்தாள்.

செல்லத்திற்கு புவனாவை சந்தித்ததில் ரொம்பவும் சந்தோசம். பிரிய மனசில்லாமல் கிளம்பினாள், வியாபாரத்தை கவனிக்க வேண்டுமே.

செல்லம் போன பிறகு, புவனா வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். செல்லத்தை நினைக்க நினைக்க, அவளுக்கு மனசு கனத்தது. இந்த நிலைமையில் அவளைச் சந்திப்போம் என்று புவனா எதிர்பார்க்கவில்லை. செல்லத்தின் நிலையை நினைத்துப் பரிதாபப்பட்ட அதே நேரத்தில், நல்லவேளை நம் அப்பா நம்மைப் படிக்கவைத்தார் இல்லையென்றால் நம் நிலைமையும் இப்படித்தான் ஆகியிருக்கும் என்று அவள் மனம் எண்ணி வியந்தது. புவனாவின் பாட்டி ரொம்பவே பிடிவாதமாக, பெண் குழந்தைகளுக்குப் படிப்பெதற்கு என்று அவளை படிக்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டது நினைவுக்கு வந்தது.

"டேய் விசு! நான் சொல்றத கேளுடா. பெண் குழந்தை அவளுக்கு என்னத்துக்கு படிப்பு?"

"ஏம்மா, படிச்சா என்ன தப்பு?" என்றார் புவனாவின் அப்பா, விஸ்வநாதன்.

"அட! எதுக்கு படிக்கணும் சொல்லு? படிச்சு அவ வேலைக்கா போகப்போறா? காலாகாலத்துல கல்யாணம் பண்ண வேண்டாம்?"

"ஏன் கல்யாணம் தான் பண்ணப்போறேன், வேலைக்குப் போகலேன்னு வெச்சுக்குவோம். படிச்சா என்ன தப்பு?"

"சொன்னா கேளுடா! நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஒத்துவராது"

"போம்மா நீ!"

"சரி நாம சொந்தபந்தத்துல உனக்கு தெரிஞ்சு யாரு பொண்ணை எட்டாவதுக்கு மேல படிக்க வைச்சிருக்கா? சொல்லு!"

"யாரும் படிக்க வைக்கலைதான்! அதுனால என் பொண்ணு படிக்கக்கூடாதா?"

"அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதுடா விசு. ஊரோட ஒத்து வாழ்! புவனா வீட்டுல இருக்கட்டும்"

பாட்டியைச் சொல்லிக் குற்றமில்லை, அவள் அந்த காலத்து மனுஷி. அவளது காலத்தில் பெண்கள் பள்ளிக்கூடத்துக்கே போனது கிடையாது. கிணத்துத் தவளையான பாட்டிக்கு, காலத்தோடு மாற முடியவில்லை. சமுதாயத்தின் புதிய மாற்றங்களை ஏற்க்கமுடியவில்லை. புவனாவின் அப்பா விஸ்வநாதனோ அம்மாவின் பேச்சைக் கேட்கவில்லை. தன் முடிவில் உறுதியாக இருந்து புவனாவை பீ.யூ.சி.வரை படிக்க வைத்தார்.

பழைய நினைவுகளை அசைபோட்ட புவனாவால் தன்னை, தன் பாட்டியோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

"டேய் விசு! நான் சொல்றதக் கேளுடா. பெண் குழந்தை அவளுக்கு என்னத்துக்குப் படிப்பு?" - பாட்டி.
"எனக்கு என்னமோ தத்து எடுக்கறதெல்லாம் ஒத்துவரும் போல தோணலை" - புவனா.
"சரி நாம சொந்தபந்தத்துல உனக்கு தெரிஞ்சு யாரு பொண்ணை எட்டாவதுக்கு மேல படிக்க வைச்சிருக்கா? சொல்லு!" - பாட்டி.
"சரி ஒரு உதாரணத்துக்கு சொல்லேன், நமக்கு தெரிஞ்சு வேற யாரு தத்து எடுத்திருக்கா?" - புவனா.
"அட! எதுக்கு படிக்கணும் சொல்லு? படிச்சு அவ வேலைக்கா போகபோறா?" - பாட்டி.
"அட, எதுக்கு தத்து எடுத்துக்கணும் சொல்லு? உங்களால முடியலேனா சரி. நீங்க ரெண்டு பெரும் ஆரோக்கியமாதானே இருக்கேள்" - புவனா.


பாட்டியின் வார்த்தைகளும், தன் வார்த்தைகளும் ஒன்று போல ஒலித்தவுடன், பொறி தட்டியது புவனாவுக்கு. பாட்டியைப் போலத்தானே இன்று நானும் மாற்றத்துக்கு பயந்து, முன்னேற்றத்துக்கு முட்டுகட்டையாய்....என்ன முட்டாள்தனம்! ச்சே! நொந்துகொண்டாள் புவனா. மாட்டேன், நான் அப்படி இருக்கபோவதில்லை என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவள், அவசரமாக எழுந்தாள். விடுவிடுவென்று மணலில் நடந்து, நடைபாதைக்கு வந்தாள். ஆட்டோ ஒன்றை நிறுத்தினாள். "அடையாறு போப்பா" என்று ஏறிக்கொண்டாள்.

உட்கார்ந்து, செல்போனை எடுத்து ஸ்ரீராமுக்கு டயல் செய்தாள். "சொல்லும்மா" என்றான் ஸ்ரீராம் எதிர்முனையில். "நான் வரேம்பா, ஆபீஸ் அடையாறுலதானே?" என்றாள் புவனா உற்சாகமாக.

ஸ்ரீதர் சதாசிவன்,
நியூஜெர்சி

© TamilOnline.com