லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த அந்தத் தொகுப்பு வீட்டு வளாகத்தில் ஆங்காங்கே மரங்களும் வீட்டுக்கு வீடு தொட்டிகளில் மலர்ச் செடிகளுமாக நல்ல காற்றோட்டத்துடன் மிக ரம்மியமாக இருந்தது. தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாத, எண்ணிப் பன்னிரண்டே ஃப்ளாட்டுகளுள்ள வளாகம். விசாலமான அறைகள். பத்துநிமிட நடை தூரத்தில் அவள் வேலை பார்க்கும் டைடல் பார்க். அவனுக்கும் பைக்கில் கால் மணி தூரத்தில் அலுவலகம். கைக்கெட்டிய தூரத்திலேயே நகரின் பிரபல அங்காடி வளாகம். ("ஊசி முதல் யானை வரை எல்லாம் கிடைக்குமுங்க" இது தரகர். "சொல்றதுக்கில்லை; பெட்ரோல் விலை ஏறுவதைப் பார்த்தால் பேசாமல் வேலைக்குப் போக ஒரு யானையை வாங்க வேண்டி வந்தாலும் வரும்போலிருக்கு" இது கிரிதர்). தரகருக்குக் கொடுத்த பணம் வீணில்லை. வாடகைதான் சற்று அதிகம், ஆனாலும் அலைச்சலிலாமல் வேலைக்குப் போய் வரலாம். லாவண்யா அப்படியே நடனமாடாத குறைதான்.
வெளியே வந்ததும் ஏறக்குறைய கிரிதர் வயதொத்த அடுத்த ஃப்ளாட்காரர் அறிமுகப்படுத்திக்கொண்டார். விக்னேஷ், மனைவி வினயா மகன் சோட்டு அடங்கிய சிங்காரக் குடும்பம் அது. "இடத்தைப் பார்த்தீர்களா? பிடித்திருந்தால் எப்பொழுது வருவீர்கள்?" என விசாரித்தார். இரு குடும்பத்தினரும் சம வயதினராக இருந்ததில் அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி. "வீடு மிகவும் பிடித்தி ருக்கிறது. வரும் வாரம் புதன்கிழமையே குடி வரலாமென்று இருக்கிறோம்" என்றான் கிரிதர். "நாங்கள் ஒரு விசேஷத்திற்காகத் திருச்சி போகிறோம். திரும்பப் பத்து நாளாகும். வந்ததும் சந்திக்கிறோம் என்று மிக நட்புடன் பழகினர். மனதுக்கு நிறைவாக இருந்தது.
குறித்த நாளிலேயே புது வீட்டுக்குக் குடி வந்துவிட்டனர். தினப்படி வாழ்க்கை நல்ல விதமாகப் போய்க்கொண்டிருந்தது. அடுத்த ஃப்ளாட்காரர்களும் திரும்பி விட்டனர். அன்றாடப் பறப்பு, பரபரப்புக்கிடையே அதிகமாக ஒட்டிப் பழக இயலவில்லை.
-2-
நான்கு நாட்கள் நிம்மதியாகப் போயின. அன்று மாலை வீடு திரும்பியதும் சற்று நேரம் தொலைக்காட்சி தரிசனம் முடித்துக் கொண்டு இருவரும் சாப்பிட அமர்ந்தனர். அடுத்த வீட்டிலிருந்து திரும்பத் திரும்ப ஒரிரு பாடல்கள் ஒலிபரப்பாகி அவர்கள் காதுகளைத் துளைத்தன. ஒரு மணி நேரம் இவ்விதம் கழிந்தபின் எதற்கோ விக்னேஷும் வினயாவும் உரத்து வாதம் செய்து சண்டையிட்டனர். வீட்டுக்கு வீடு அவ்வப்பொழுது சிறுசிறு பூசல்கள் நிகழ்வது சகஜம்தானே என்று அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. "தினம் தவறாமல் உப்புமாவாலேயே அடிக்கிறாயே. இதைத்தவிர வேறு எதுவுமே சமைக்க மாட்டாயா?" என ஆரம்பிக்கும் ஒருநாள்.
"ஆமாம், சோட்டுவுக்கு ரெண்டு நாளா ஜலதோஷம். அவனைக் கவனிக்கவே நேரம் சரியாயிருக்கு. ஒருநாள் உப்புமா சாப்பிட்டால் கெட்டுடாது" என்னும் வினயாவின் எதிர்வாதத்துடன் தர்க்கம் நீளும். இவ்விதமே தினமும் உப்புப் போடாததற்கு ஒரு சண்டை, உப்புப் பொறாததற்கு ஒரு சண்டை, உப்புப் போறாததற்கு ஒரு சண்டை என்று ஒரே யுத்த காண்டம் தான். தினம் பாடல் ஒலிபரப்பு ஒரு பத்து முறையென்றால், சண்டை மணிக்கணக்கில் நீண்டது. ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை; ஆனால் இந்தக் கூத்து தினசரி அட்டவணை போட்டுக்கொண்டு செய்வதுபோல் அரங்கேறிக் கொண்டிருந்தது. சுத்த விவஸ்தைகெட்ட குடும்பமாக இருக்கும் போலிருக்கிறதே எனத் தோன்றியது. மிகுந்த சிரமத்துக்குப் பின் அருமையாகக் கிடைத்த இடத்தில் இப்படியொரு பிரச்சனை கிளம்பும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் வழியில் சந்தித்த தரகரைப் பார்த்து "என்ன சார், வீடு என்னவோ நன்றாகத்தானிருக்கிறது. அயல் வீட்டார் கொடுக்கும் தலை வேதனைதான் தாங்க முடியவில்லை. எப்பப் பாரு சண்டைதான். வேலைக்குப் போய்விட்டு வீட்டில் நிம்மதியாக இருந்தோமென்பதே இல்லை" என்று அலுத்துக்கொண்டான் கிரிதர். "விக்னேஷ் தம்பி ரொம்ப நல்லவராச்சே. அவங்களுக்கும் நான்தான் வீடு பார்த்துக் கொடுத்தேன். இதுவரை அவங்களைப்பத்தி ஆவலாதி ஏதும் வந்ததில்லையே?" என வியந்தார் தரகர். "இந்த ஒரு மாசம் பொறுப்பேன். நிலைமை சரியாகாவிட்டால் அசோஸியேஷனில் சொல்லிவிடுவேன்" எனக் கூறிவிட்டு வீடு திரும்பினான்.
-3-
யார் மூலமாவது இந்தச் செய்தி அவர்களுக்கு எட்டியதோ அன்றி இனிமேல் சண்டையிட விஷயமே இல்லையென்ற நிலை வந்து விட்டதோ, திடீரென்று சண்டை ஓய்ந்துவிட்டது; பாடல் ஒலிபரப்பும் நின்று விட்டது. நாட்கள் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தன. அன்று சனிக்கிழமை. வழக்கமான மெகா தொடர்கள் ஒளிபரப்பாகாமல் ஏதேதோ போட்டி நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. பிரபல நகைக் கடையினர் வழங்கும் 'ஜாடியும் மூடியும்' நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிகழ்ச்சித் தொகுப்பாளினி முன்னாள் நடிகை லாஸ்யாஸ்ரீ "இந்த மூன்றாவது ‘போரும் அமைதியும்’ சுற்றில் பங்கேற்கும் தம்பதிகள் எத்தனை சுவாரஸ்யமாகச் சண்டையிடுகிறார்களென்று பார்ப்போம்” என்று பங்கேற்கும் தம்பதியை அழைத்தாள். லாவண்யா கண்ணிமைக்க மறந்து, "ஏங்க, இங்கே வாங்களேன். இந்தப் ப்ரோக்ராமில் யார் வந்திருக்காங்கன்னு பாருங்களேன்" என்று கூவினாள். ஓடி வந்து பார்த்த கிரிதருக்கு ஒரே வியப்பு. ஆம்; அந்தப் பங்கேற்பாளர்கள் அடுத்த ஃப்ளாட் விக்னேஷும் வினயாவும்தான். கொடுக்கப்பட்ட சூழ்நிலையை வைத்துக்கொண்டு இருவரும் மாறிமாறி வாதம் செய்து சண்டையிட்டனர். இறுதிக் கால் நிமிடத்தில் வெகு இயல்பாகச் சமாதானமும் ஆகிவிட்டனர். லாஸ்யாஸ்ரீ, "அடேயப்பா, உங்கள் சண்டையைப் பார்த்து எனக்கே வீட்டுக்குப் போய் என் கணவருடன் இப்படியொரு சண்டை போடலாமா என்று தோன்றுகிறது. முதற்சுற்று ஆடல் பாடலிலும், அடுத்து 'அறிவேன் உன்னை' சுற்றிலும் அசத்தினீங்களேன்னு பார்த்தால், இந்தச் சுற்றிலும் கலக்கிட்டீங்க போங்க. ஆமாம், தினம் இப்படித்தான் வீட்டிலும் யுத்த காண்டம் நடத்துவீங்களா?" என்று பாராட்டும் கிண்டலுமாகக் கேட்டாள். விக்னேஷ் "ஐயோ, இவள் மகா சாது மேடம். இந்த நிகழ்ச்சிக்காகக் கிட்டத்தட்ட ஒரு மாசகாலம் விதவிதமாய்க் காரணங்களைக் கண்டுபிடித்து சண்டைபோட்டு ஒத்திகை செய்தோம். மற்றபடி நாங்க ரொம்ப ஒற்றுமையான தம்பதி" என்றான். "நிஜமாகவே நீங்க ஜாடியும் மூடியும் போல மனமொத்த ஜோடிதான். வாழ்த்துக்கள்" என்றவாறு முதற் பரிசான இருபதினாயிரம் ரூபாயை வழங்கினாள் நடிகை. -4-
கிரிதரும், லாவண்யாவும் ஒருவரை ஒருவர் அசடு வழியப் பார்த்துக்கொண்டு, அடுத்த ஃப்ளாட்டுக்குப் போய் அவர்களை வாழ்த்தினார்கள். "இது ஒத்திகைதான்னு முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? எங்களையும் கலக்கிவிட்டீர்களே" என்றான் கிரிதர். "நம் சினேகிதர்களையெல்லாம் ஆச்சரியப் படுத்தலாமுன்னுதான்" என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறியபடி இனிப்பு வழங்கினாள் வினயா! அம்புஜவல்லி தேசிகாச்சாரி |