1. ராமு சைக்கிளில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தான். ஐந்தில் ஒரு பங்கு தூரத்தை அவன் கடந்தபோது மணி 10.02. பாதி தூரத்தைக் கடந்ததும் அவன் மணி பார்த்தபோது 10.50 ஆகி இருந்தது. அவன் கோயிலை எத்தனை மணிக்கு அடைவான்?
2. ராமுவிடம் ஐந்து பழங்கள் இருந்தன. சோமுவிடம் மூன்று பழங்கள் இருந்தன. ராஜுவிடம் பழங்கள் ஏதும் இல்லை. மிகவும் பசியாக இருந்ததால் மூவரும் அவற்றைச் சமமாகப் பங்கிட்டு உண்டனர். தான் உண்ட பழத்துக்காக எட்டு டாலர் கொடுத்த ராஜு, அதனை இருவரையும் தாங்கள் கொடுத்த பழத்திற்கேற்ப பிரித்து எடுத்துக் கொள்ளும்படிக் கூறினான். அவர்கள் எப்படிப் பிரித்துக் கொண்டிருப்பர்.
3. 1, 4, 5, 6, 7, 8, 9 இந்த எண்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் கூட்டுத்தொகை 1111 வர வேண்டும். முடியுமா?
4. 6 ? 3 ? 5 ? 2 ? 4 = 4. இந்தச் சமன்பாட்டில் வினாக்குறி உள்ள இடங்களில் எந்தக் குறிகள் இருந்தால் மேற்கண்ட விடை கிடைக்கும்?
5. 1, 9801, 9, 9409, 25 ..... அடுத்து வரக்கூடிய எண் எது? ஏன்?
அரவிந்த்
விடைகள்1. ராமு, ஐந்தில் ஒரு பங்கு தூரத்தை அடையும் போது மணி 10.02. பாதி தூரத்தை (ஐந்தில் பாதி) அடையும் போது மணி 10.50. ஆக 48 நிமிடத்தில் அவன் 1 1/2 பங்கு தூரத்தைக் கடந்திருக்கிறான். மேலும் 48 நிமிடத்தில் அவன் மேலும் 1 1/2 பங்கு தூரத்தைக் கடப்பான். அதாவது ஐந்தில் நான்கு பகுதி தூரத்தை அவன் 11.38 (10.50 +48) மணிக்குக் கடப்பான்.
1-1/2 பங்கு தூரத்தைக் கடக்க 48 நிமிடங்கள் ஆகின்றன என்றால், அவன் மீதி 1 பங்கு தூரத்தைக் கடக்க 32 நிமிடங்கள் ஆகும். ஆக 12.10க்கு (11.38 + 32) அவன் கோயிலை அடைவான்.
2. ராமுவிடம் இருந்த பழங்கள் = 5; சோமுவிடம் இருந்த பழங்கள் = 3; மொத்த பழங்கள் = 8.
மூவரும் அதனைச் சமமாகப் பிரித்து உண்டனர் எனில் = 8/3 பழங்களை ஒவ்வொருவரும் உண்டிருப்பர்.
ராமுவிடம் இருந்த பழங்கள் = 5 = 15/3; சோமுவிடம் இருந்த பழங்கள் = 3 = 9/3.
ராஜு உண்டது 8/3 பழங்கள் எனில், ராமு கொடுத்தது = 7/3 ( 15/3 - 8/3) + சோமு கொடுத்தது = 1/3 ( 9/3 - 8/3).
ஆக தாங்கள் கொடுத்த பழத்திற்கேற்ப ராமு ஏழு டாலரும், சோமு ஒரு டாலரும் எடுத்துக் கொண்டிருப்பர்.
3. முடியும். 86 + 74 + 951 = 1111
4. 6 x 3 - 5 x 2 - 4 = 4
18 - (10) - 4 = 4
5. அடுத்து வரக் கூடிய எண் = 9025. எண்கள் 1^2, (1) 99^2, (9801) 3^2, (9) 97^2, (9409) 5^2 (25) என ஒன்று விட்டு ஒன்றாக 1, 99, 3, 97, 5 ஆகியவற்றின் வர்க்கங்களாக அமைந்துள்ளது. ஆகவே வரிசையில் அடுத்து வர வேண்டியது 95ன் வர்க்கமான 9025 தான்