எல்லோருக்கும் உதவு
குழந்தைகளே!

அது ஓர் அடர்ந்த காடு. அதில் ஒரு மாமரத்தில் ஏறிச் சில குரங்குகள் மாம்பழங்களைப் பறித்துத் தின்றும் வீசி எறிந்தும் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த மரத்தின் அடியில் ஒரு கரடி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

குரங்குகள் தூக்கிப்போட்டு விளையாடிய மாம்பழத்தில் ஒன்று திடீரெனக் கைதவறிக் கரடியின்மேல் விழுந்தது. அலறிக்கொண்டு எழுந்தது கரடி. மேலே பார்த்ததும் அதற்குக் குரங்குகளின் விஷமத்தனம் புரிந்தது. கரடிக்குக் கோபம் வந்துவிட்டது. ஓடிப் போய் இரண்டு குரங்குகளைப் பிடித்து நசுக்கியது. அலறிய குரங்குகள்தெரியாமல் தவறு செய்துவிட்டோம், மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிக் கெஞ்சின. ஆனால் கரடி மனம் இரங்கவில்லை. "நான் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏன் தொந்தரவு செய்தீர்கள்? உங்களைச் சும்மா விடமாட்டேன். தண்டிக்கத்தான் போகிறேன்" என்று சொல்லி, இரு குரங்குகளின் வாலையும் ஒன்றோடு ஒன்று சேர்த்துக் கட்டிய பின், காட்டுக் கொடிகளைக் கொண்டு அந்த மரத்திலேயே கட்டிப் போட்டது. பின் காவலுக்குக் கீழே படுத்துக் கொண்டும் விட்டது.



மாலை வந்ததும் கரடி. "இனி என் கண்ணிலேயே படக்கூடாது. தொலைந்து போங்கள்" என்று சொல்லி குரங்குகளை விரட்டிவிட்டது.

சில மாதங்கள் கடந்தன.

ஒருநாள், அன்றைக்கு என்று இரை ஏதும் சரியாகக் கிடைக்காததால் பசியோடு அலைந்து கொண்டிருந்தது கரடி. ஓரிடத்தில் நிறைய கேரட்டுகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததை அது பார்த்தது. மிகுந்த பசியாக இருந்ததால் அப்படியே அள்ளி அள்ளி விழுங்கியது. அது வேட்டைக்காரர்கள் வைத்திருந்த மயக்க மருந்து கலந்த கேரட் என்பதை அது அறியவில்லை. சற்று நேரத்தில் மயங்கிக் கீழே விழுந்தது.

கரடிக்கு மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்ததை உணர்ந்து. "ஒரு கரடி கிடைத்து விட்டது. அது இங்கேயே இருக்கட்டும். வேறு ஏதாவது மிருகங்கள் சிக்குகிறதா பார்ப்போம் வா" என்று கூறிக் கொண்டே இரண்டு வேட்டைக்காரர்கள் அங்கிருந்து செல்வதையும் அது பார்த்தது.

கரடி கையைக் காலை அசைத்தது. உதைத்தது. கத்தியது. அதனால் மேலும் மேலும் பிடி இறுகியதே தவிர தப்பிச் செல்ல முடியவில்லை. சோர்ந்து போய் அப்படியே நின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாகச் சில குரங்குகள் சென்றன. மரத்தில் கட்டப்பட்டிருக்கும் கரடியைப் பார்த்தன. "ஓஹோ, நீதானா அது. மனிதர்களிடம் மாட்டிக் கொண்டாயா? நன்றாக வேண்டும். அன்று நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும், மன்னிப்புக் கேட்டும் நீ மனமிரங்கவில்லை அல்லவா? ஒரு சின்ன விஷயத்திற்காக எங்களைக் கடுமையாகத் தண்டித்த உனக்கு இந்த தண்டனை வேண்டியதுதான்" என்றது ஒரு குரங்கு.

கரடி பதில் பேச முடியாமல் குரங்குகளைச் சோகத்துடன் பார்த்தது.

உடனே குரங்குகளின் தலைவன், "தோழர்களே, நாம் இப்படிப் பிறர் மனம் புண்படுமாறு பேசக்கூடாது. அந்தக் கரடியார் அன்று அறியாமல் தவறு செய்துவிட்டார் என்றால், நாமும் அதையே செய்யலாமா? கரடியாரின் செயலை மன்னிப்போம். வாருங்கள், அவரை விடுவிப்போம். அது மட்டுமல்ல, அன்று நினைத்திருந்தால் கரடியார் உங்களைக் கொன்றிருக்கலாம், ஆனால் அப்படிச் செய்யவில்லை. அந்த நன்றியை மறக்கக் கூடாது" என்றது.

"உண்மை, உண்மை" என்று கூக்குரலிட்டு அதை ஒப்புக்கொண்ட பிற குரங்குகள், ஓடோடி வந்து கரடியாரின் கட்டுகளை அவிழ்த்து விட்டன.

கை கூப்பி மன்னிப்புக் கேட்ட கரடி, "உருவத்தில் நீங்கள் சிறியவர்களாக இருந்தாலும், உள்ளத்தில் பெரியவர்கள். உங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். இனிமேல் நாம் எல்லோரும் நண்பர்கள். எல்லோருமே சேர்ந்து விளையாடலாம், வாருங்கள்" என்று கூறிவிட்டு, அந்த பழுத்த மாமரத்தை நோக்கி நடக்கத் துவங்கியது.

அன்புடன்
சுப்புத்தாத்தா

© TamilOnline.com