மன்னார்குடி ராஜகோபால சுவாமி
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில் ஸ்ரீ ராஜகோபாலன் என்ற அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் சேவை சாதித்து வருகிறார். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஸ்ரீ நம்மாழ்வார் எம்பெருமானை வண் துவராபதி மன்னன், மணிவண்ணன், வாசுதேவன், மணியில் அணிநிற மாயன் என பலவாறாகப் பாடித் துதித்துள்ளார். மேலும் இளவரசு, கோவல குட்டன், மதுரை மன்னன் நந்தகோபன் எனப் பல பெயர்கள் உண்டு. தாயார் பெயர் செங்கமலத் தாயார், செண்பகவல்லி.

இத்தல இறைவன் கிருதயுகத்தில் பிரம்மாவுக்கும், திரேதாயுகத்தில் பிருகு மகரிஷிக்கும், லட்சுமிக்கும், துவாபரயுகத்தில் அக்னிக்கும் கோபில, கோ பிரளய மகரிஷிகளுக்கும், கலியுகத்தில் ராஜசேகர மன்னருக்கும் காட்சி கொடுத்த பெருமைக்குரியவர். இத்தலத்தில் 16 கோபுரங்கள், ஏழு பிரகாரங்கள், 24 சன்னிதிகள், துவாரகையைப் போலவே 9 தீர்த்தங்கள் உண்டு. இத்தலமானது துவாதசாட்சர மந்திர சித்திக்கு உரித்தானது.

நவ புண்ணிய தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. கோவிலை ஒட்டிக் கிருஷ்ண தீர்த்தம், வடபுறம் ஹரித்ரா நதி தீர்த்தம் அமைந்துள்ளன. இந்தப் புண்ய நதி பெருமாளுக்கு மிகவும் பிரீதியானது. கோவிலைப் போலவே ஹரித்ரா நதியும் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பரந்த தீர்த்தம் ஹரித்ரா நதி. இது கங்கை, காவிரி, கல்யாணி, யமுனை, சேது இவற்றைக் காட்டிலும் புனிதமானதென்பர். இங்கு யாகம், ஹோமம் போன்றவற்றைச் செய்தால் விசேஷ பலனை அடையலாம். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் கோபிரளய தீர்த்தத்தில் நீராடுதல் விசேஷமானது. இத்தலத்தில் உள்ள திருப்பாற்கடல் தீர்த்தத்தில் வெள்ளிக்கிழமைகளில் நீராடி சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் தந்தால் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் கைகூடும் என்பர்.

முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க துவாரகையில் யமுனா நதியில் கோபிகைகளுடன் நீராடியது போல் ஹரித்ரா நதியிலும் செய்யவேண்டும் என வேண்ட பகவானும் அவ்வாறே அருள் செய்தார். கோபிகைகளுடன் நீராடி அவசரமாகக் கரையேறி வஸ்திரம், ஆபரணங்களை தரித்த சமயம், கண்ணனுக்கு ஒரு குண்டலமும், ஒரு ஓலை, ஒரு வஸ்திரமும் கிடைத்தமையால் அதையே தரித்துக் கொண்டு வலது கையில் மாடு மேய்க்கும் கோலையும் வைத்துக்கொண்டு ஒரு திருவடியை முன்னாலும் மற்றொரு திருவடியைப் பின்னாலும் வைத்து இடது கையை சத்யபாமா தோளின் மீதும், வலது பக்கம் ருக்மிணிப் பிராட்டியுடனும் சேவை சாதிக்கிறார் ஸ்ரீ ராஜகோபாலன்.

செங்கமலத் தாயார் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். ஆடி மாதம் பத்து நாள் உற்சவம். ஸ்ரீ தாயாரின் திருத்தேர் ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகளால் செய்யப்பட்டது. ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்குப் பங்குனியில் 18 நாள் பிரமோற்சவம் நடக்கிறது. கோயிலுக்கு முன்பாக 180 அடி உயர கருட கம்பம் உள்ளது. ஸ்ரீகலியன் என்பவர் சீனதேசம் போய்த் திரும்பிவந்து பஞ்சு பெருத்த இவ்வூரில் கருட கம்பத்தைக் கட்டி நிமிர்த்தி நாட்டினார் என்பது வரலாறு.

பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் திருநாள் பஞ்சமுக அனுமார் வாகனமும், ஆறாம் நாள் அண்டபேரண்டப் பட்சி வாகனமும் சிறப்பு. பன்னிரண்டாம் நாள் தங்கக் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவது விசேஷம். மன்னையைத் தவிர காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் இந்த விசேஷ வைபவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பதினோராம் நாள் காலையில் நவநீத சேவையில் எம்பெருமான் வெள்ளிக்குடத்தை அணைத்தவாறு வருவது கண்கொள்ளாக் காட்சி. பக்தர்கள் வெண்ணெயை வாங்கி பகவான் மேல் சாற்றிப் பின்னர் பிரசாதமாகப் பெற்றுச் செல்வர்.

முசுகுந்த சக்ரவர்த்தி, சரபோஜி ராஜா உட்பட சோழ, மராத்திய, நாயக்க மன்னர்கள் இத்திருத்தல வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். வழிபட்டுள்ளனர். பராங்குச பரகாலர், கோதை, திருக்கச்சி நம்பி, மணவாள மாமுனிகள் முதலிய ஆச்சாரியர்களும் எம்பெருமானைத் தொழுது போற்றியுள்ளனர். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள சந்தானகோபாலனைத் துதிக்க குழந்தைப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தீராத நோய்கள், ஸ்ரீ ராஜகோபாலரை வணங்கித் துதித்து நீங்க, அவர்களால் செய்து வைக்கப்பட்டவையே தங்க கருட வாகனம் மற்றும் தங்க குதிரை வாகனம். அதுபோல ஆனி மாதத்துப் பௌர்ணமியில் நடக்கும் தெப்போற்சவமும் சிறப்பானது.

மன்னார்குடி ராஜகோபாலப் பெருமான் மீது சங்கீத மும்மூர்த்திகளுள் முத்துசுவாமி தீக்ஷிதரும், தியாகராஜ சுவாமிகளும் கீர்த்தனைகள் இயற்றியுள்ளனர். அவசியம் தரிசிக்க வேண்டிய மகத்தான திருத்தலம் மன்னார்குடி தலம்.

சீதா துரைராஜ்,
கலிபோர்னியா

© TamilOnline.com