பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை!
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில், பல அறிஞர்கள் மனம்போன போக்கில் ஆராய்ந்து குதறி எடு்த்திருக்கும் குயில் பாட்டையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 'வேதாந்தமாகச் சற்றே விரித்துப் பொருளுரைக்க' என்று பாரதி சொன்ன பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதற்குள் வேதாந்தத்தை மட்டுமே தேடி எடுக்க வேண்டும் போலிருக்கிறது என்று தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் உள்ளிட்ட பல அறிஞர்கள், பரமாத்மா-ஜீவாத்மா தத்துவத்தையும், கைவல்ய நவநீதம், சைவ சித்தாந்தம் போன்ற பல்வேறு தத்துவங்களையும் குயில் பாட்டுக்குள் பொருத்திப் பார்க்க முயன்று தோற்றுப் போயிருப்பதையும் சொன்னோம். “எல்லோரும் வேதாந்தத்துக்குள் இதை அடைக்க மிகுந்த சிரமப்பட்டு, பொருந்தாத முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள்” என்பது நமது பேராசிரியர் வாக்கு.

இந்த ஆய்வுகளின் தன்மைக்கு ஒரு 'மாதிரி' காட்டவேண்டுமானால், தெபொமீ செய்து, கல்கத்தா தமிழ்ச் சங்கம் வெளியிட்ட The Koel's Song என்ற ஆய்வை எடுத்துக் கொள்ளலாம் என்று நாகநந்தி குறிப்பிட்டார். இதன் இறுதியில் அவரே சொல்கிறார். (இவை யாவும் அவருடைய குரல் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டவை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்) எல்லோருடைய ஆய்வும் இப்படித் திசைதப்பி அங்குமிங்குமாக அலைக்கழிய முழுக் காரணமும் தெபொமீ செய்த குறும்புதான். தெபொமீ ஆய்வுப்படி, 'குயிலே பரமான்மா. உலகு ஒடுங்கிய நாத வடிவமே கரிய சிறிய குயில். சக்தி உபாசகரான கவிஞர், அதைப் பெண்வடிவாகக் காணுகிறார்.' இந்தக் கருத்து உண்மையேயானாலும், 740 அடி நீளம் கொண்ட குயில் பாட்டின் 704வது அடியில்தான் 'விண்டுரைக்க மாட்டாத விந்தையடா விந்தையடா' என்று, குயிலைப் பெண்வடிவமாகக் கவிஞன் காண்கின்றான். அதுவரையில், குயிலைப் பறவையாகத்தான் கருதிக் கொண்டிருக்கிறான் என்பது நினைவில் நிறுத்தப்பட வேண்டியது; ஆய்வாளர் தவறவிட்டிருக்கும் ஒன்று. எனவே, பாடலின் பெரும்பகுதியில் கவிஞன் குயிலைப் பெண்ணாகக் கருதவில்லை என்பதே உண்மை.

'குயிலை நீலி என்பதும், விந்தை என்பதும், அவள் விந்தகிரிச் சாரலில் வந்து பிறந்திருந்தாள் என்பதும் சக்தி வழிபாட்டுக் குறியீடுகளே' என்பதும் தெபொமீயின் ஆய்வில் சொல்லப்படுகிறது. அதாவது, விந்தை என்பது 'ஸ்ரீவித்யா' என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகக் கண்டு, அதை இதில் பொருத்த முயல்கிறார் என்பதை உணர, வாசகனுக்குப் பயிற்சி வேண்டும். இதை ஆய்வாளர் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்! பிறகு, 'உபநிஷத்துகளிலும் பரமான்மா பறவை என்ற குறியீட்டால் சுட்டப்படுகிறது' என்ற கருத்தையும் கூறியுள்ளார். மிகச்சில உபநிடதங்களில், மிகச்சில இடங்களில் 'பறவை' என்பது ஒரு குறியீடாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்றாலும், அது, இந்தக் குயில் பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குயில் என்ற பறவையோடு எவ்வகையில் தொடர்புள்ளது என்பதை கவிஞன் வாக்கிலிருந்தே அகச் சான்றாக ஆய்வாளர் காட்டவில்லை. அதுவே இதன் அடிப்படை பலவீனத்தை அவர் உணர்ந்திருந்தமையை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. இந்த இடங்களில் ஆய்வாளர் எதுவுமே சொல்லாமல் மற்றமற்ற சான்றுகளை அடுக்குவதிலேயே குறியாக இருப்பதிலிருந்து, தன் வாதத்தில் உள்ள சிக்கல்களை உணர்ந்து, அவற்றைச் சுற்றி வளைத்து, அந்தச் சிக்கல்கள் வாசகனுடைய கண்ணுக்குத் தெரிந்துவிடாமல் மறைக்கும் வண்ணமாக, விரைந்து பல்வேறு திக்குகளில் இலக்கற்றுப் பயணிக்கும் அம்புகளை ஒரு கூட்டில் திணித்து வாசகன் முன்னால் கடைவிரிக்க முயல்வதே காட்டிக் கொடுத்துவிடுகிறது என்பதையெல்லாம் பேராசிரியர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

தெபொமீயின் வேகப் பாய்ச்சலை, அவருடைய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் காட்டி விளக்கினார். 'மாஞ்சோலை என்பதே சம்சாரமாம் காடுதான். வேடர்கள், ஐம்புல வேடர்களே. கவிஞனே ஜீவான்மா. குயில், கவிஞனை நோக்கிப் பேசுவது, பரமான்மா, ஜீவான்மாவைக் கடைத்தேற்ற மேற்கொள்ளும் அருளின் வெளிப்பாடே. கணத்துக்குக் கணம் மாறும் மனோவிகாரங்களே குரங்கு. காமரசத்தின் விளைவாக மாறும் உடல் விழைவுகளே மாடு. கவிஞன் அவற்றின்மேல் வீச முற்படும் வாள், ஞான வாளே. இறுதியில் குயிலும் கவிஞனும் இணைவது, ஜீவ-ப்ரம்ம ஐக்கியமே' என்ற ரீதியில் தெபொமீ அவர்கள் விவரித்திருக்கும் ஒவ்வொரு குறியீட்டையும், சரியான குவிமையத்தில் வைத்துக் காட்டி, எவ்வாறு அந்த முடிவுகள் பொருத்தமற்றவை என்பதை விளக்கமாகச் சொன்னார் ஆசிரியர்.

இப்படிச் சடசடசடவெனத் தனது முடிவுகளை வேகமான வாக்கியங்களில் கொட்டிக் கவிழ்த்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் 'ஏகாரத்தோடு' ஓர் ஆய்வாளன் முன்வைக்கும் போதெல்லாம் வாசகன் எச்சரிக்கையடைய வேண்டும் என்று வலியுறுத்துவார் ஆசிரியர். 'ஐம்புல வேடர்களே', 'வெளிப்பாடே' 'ஞான வாளே' என்றெல்லாம் வாக்கியத்துக்கு வாக்கியம் ஏகாரத்தில் முடிகிறது என்பதை மேற்படிப் பகுதியில் பார்க்கலாம். இதற்குத் தமிழில் தேற்றேகாரம் என்று பெயர். (ஒன்றுமில்லை, 'இது அதுதான்' என்று அழுத்தந் திருத்தமாக ஒலிக்கச் செய்யப் பயன்படும் ஏகாரத்துக்கு தேற்றேகாரம் என்று பெயர். It is more assertive than affirmative). இப்படி ஆய்வாளர், தன்னுடைய கருத்துகளையும் முடிவுகளையும் காரண காரியம் சொல்லாமல், அல்லது தெளிவான வார்த்தைகளால் சொல்லாமல் மேம்போக்காக விளக்குவதுபோல் நடித்தபடி, அதிவேகமாக, அழுத்தந் திருத்தமாகச் சொல்லும் உத்தி. இதற்குப் பனிச்சரிவு உத்தி என்பது எங்களுடைய உள்வட்டாரத்தில் வழங்கி வரும் செல்லப் பெயர். An avalanche of assertions. 'எப்போதெல்லாம் ஓர் ஆய்வாளனோ அல்லது எழுத்தாளானோ இப்படி வேகவேகமாக நகருகிறானோ, அப்போதெல்லாம் விழிப்புடன் இருங்கள்' என்பது ஆசிரியர் எங்களுக்குச் சொல்லித் தந்த பாலபாடம். சிலசமயங்களில் தன் நடையின் பனிச்சரிவில் தானே அகப்பட்டுக்கொண்டு வெளிவர முடியாமல் திக்குமுக்காடிப் போகும் ஆய்வாளர்களும் ஏராளமானவர். இப்படி யாராவது அடுக்கினால், முதலில் நிதானியுங்கள். பிறகு தனித்தனிக் கருத்தாக எடுத்து, நீங்களே அதனை, அந்த ஆய்வாளர் தீட்டும் சித்திரம் அல்லது முடிபுக்குள் பொருத்திப் பாருங்கள். நான்கைந்து வாக்கியங்களையும் முடிபுகளையும் எடுத்துப் பொருத்திப் பார்த்தாலே போதும், சொல்பவர் உணர்ந்துதான் சொல்கிறாரா, அல்லது அது உள்ளீடற்ற வாதமா என்பது புரிந்துவிடும். இவ்வாறான நடையை ஆய்வாளர் மேற்கொள்கிறார் என்றால், அவரே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதைக் காட்டிவிடும். இந்த எச்சரிக்கை, இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் பலசமயங்களில் எதிராளியின் உளப்பாங்கைக் காட்டும் கண்ணாடியாகப் பயன்பட்டிருக்கிறது.

Then, he addresses the Vedantins என்று தெபொமீ குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டி, 'ஆன்ற தமிழ்ப்புலவீர்' என்று பாரதி அழைத்திருக்கவும், 'வேதாந்திகளை விளித்துக் கவிஞர் சொல்கிறார்' என்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார் என்றால், அவருடைய உள்ளத்தை எந்த உணர்வு பெரிதும் ஆட்கொண்டிருந்தது என்பதைத் துல்லியமாக உணரலாம். பாரதி அழைப்பதுவோ 'தமிழ்ப் புலவர்களை'; ஆனால் ஆய்வாளர் கண்ணுக்குப் படுவதோ 'வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க' என்ற பகுதி மட்டுமே; 'ஆன்ற தமிழ்ப் புலவீர்' என்ற விளியன்று' என்று ஆசிரியர் சொல்கிறார். இதற்கு மேல், அவருடைய உரையின் சாரத்தை அவரே சொல்லும் தொனியில் சொல்கின்றேன். கேளுங்கள்.

இதற்குள்ளே ஏதோ ஒரு வேதாந்தக் கருத்துதான் பொதிந்திருக்கிறது என்ற முன்முடிவு (prejudice) ஆய்வாளர்கள் அனைவரிடமும் விரவிக் கிடக்கிறது. குவிமையத்தை, 'ஆன்ற தமிழ்ப்புலவீர்' என்ற விளிக்கு மாற்றி அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால்தான், இந்தக் குயில் பாட்டின் விசித்திரமான கதையமைப்புக்குப் பொருள் விளங்கும். குயில் பாட்டின் கதை அமைப்பு, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று. ஓர் இளைஞன் புதுச்சேரியிலுள்ள ஒரு மாந்தோப்பில் குயிலொன்று கூவிக்கொண்டிருப்பதைக் கேட்கிறான். 'குக்கு என்று குயில் பாடும் பாட்டினிலே தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே' என்று கவிதையில் குறிப்பிடுவதுபோல், அந்தக் குயிலின் பாட்டில், 'ஏதோ ஓர் அடர்த்தியான பொருள்மிக்க செய்தி' கவிஞனுக்குப் புலப்பட்டிருக்கிறது.

அந்தச் செய்திதான் என்ன? இதற்கு விடை காண வேண்டும். எனவே, அடுத்த இதழில், குயில் பாட்டின் மர்மக் களங்களை விரைவாகப் பார்ப்போம்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com