செய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும்
எங்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். எங்கள் மைத்துனர் ஸ்பான்சர் செய்து சில வருடங்களுக்கு முன்புதான் அமெரிக்கா வந்து செட்டில் ஆனோம். இந்தியாவில் நல்ல வேலையில் இருந்த என் கணவருக்கு இங்கே வேலை எதுவும் அமையல்லை. அவ்வப்போது கன்சல்டன்சி போலச் செய்து கொண்டிருக்கிறார். எனக்கு, நல்லவேளை, ஒரு நிரந்தர வேலை கிடைத்து சுமாராகக் குடும்பம் போய்க்கொண்டிருக்கிறது. பையன் இந்தியாவில் எஞ்சினியரிங் படிக்கிறான். அவன் படிப்பால் எந்தச் செலவும் இல்லை. பெரிய பெண் இங்கேதான் படிப்பேன் என்று அடம் பிடித்து இங்கே உள்ள கல்லூரியில் படிக்கிறாள். அது மிகப்பெரிய தவறாக இப்போது எனக்குப் படுகிறது. அவளுக்குப் படிப்பைவிட இந்த ஊர் கலாசாரத்தில் மிகுந்த மோகம் ஏற்பட்டுவிட்டது. அதனால் ஏற்படும் செலவுகள் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அவள் தோழிகள், தோழர்கள் போல வாழ்க்கை நடத்த ஆசைப்படுகிறாள். படிப்பில் கவனம் சிதறிவிட்டது. சனி, ஞாயிறு ஆனால் 'sleep over' என்று சதா நண்பர்கள் வீட்டுக்குப் போக ஆசைப்படுகிறாள். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அவள் அப்பா கன்சல்டன்ஸி விஷயமாக அடிக்கடி வெளியிடங்களுக்குப் போய்விடுவதால் நான் மட்டுமே கண்டித்து வேண்டாதவளாகப் போய்விடுகிறேன். எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால் இந்த ஊர் கலாசார வழக்கங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை; புரிந்து கொள்ளவும் பிடிக்கவில்லை.

மற்ற சிநேகிதிகளுடன் என்னுடைய வேதனையைப் பகிர்ந்து கொண்டால், "டீன் ஏஜர்ஸ் இந்த ஊரில் இப்படித்தான் இருப்பார்கள். நீ லேட்டாக இந்த நாட்டில் செட்டில் ஆனதால் உனக்கு ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாக இருக்கிறது. கொஞ்ச நாளில் அட்ஜஸ்ட் ஆகி விடும்" என்று அறிவுரை கூறுகிறார்கள். எனக்கு அதுபோல அட்வைஸ் தேவையில்லை. என் பெண்களும் நானும் எதிரிகளாக மாறிக்கொண்டு வருகிறோம். பெரியவளை ஏதாவது சொன்னால் அவளுடன் சின்னவளும் சேர்ந்து கொண்டு என்னை எதிர்க்கிறாள். அவர்களுடைய உடை, நடவடிக்கை எதுவுமே எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. அழகாக ஸ்லோகம் சொல்லிக் கொண்டு, விதவிதமாக பெயிண்டிங் செய்து கொண்டு, பாட்டுக் கற்றுக்கொண்டு இருந்தவளுக்கு, இப்போது எதிலும் ஈடுபாடு இல்லை. போன வருடம் இந்த வாழ்க்கை நமக்குச் சரிப்பட்டு வரவில்லை, திரும்பிப் போய்விடலாம் என்று தீர்மானித்தோம். ஆனால் 2 பெண்களும் போர்க்கொடி தூக்கி அழுது ஆர்ப்பாட்டம் செய்யவே, அந்த எண்ணத்தைக் கைவிட்டோம். நான் எதைக் கேட்டாலும், "நீ ஒரு அம்மாவா?", "I hate you" என்று என்னைத் திட்டி, hysterical ஆக அழுது, தன் ரூம் கதவைப் பூட்டிக்கொண்டு விடுகிறாள். எனக்கும் முடிவதில்லை. நானும் திருப்பிச் சத்தம் போடுகிறேன். சிலநாள் சாப்பிடாமலேயே 24 மணி நேரம் ரூமுக்குள் இருந்திருக்கிறார்கள். கடைசியில் காம்ப்ரமைஸ் செய்து நான்தான் 'எப்படியோ போய்த் தொலையட்டும்' என்று விட்டுக்கொடுத்து விடுகிறேன்.

போனமாதம் ஒரு பையனை வீட்டுக்கு அழைத்து வந்தாள். அவன் நம் ஊர்க்காரன் இல்லை. அவனை தன் அறைக்குள் அழைத்துக்கொண்டு போய் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தாள். நான் பல்லைக் கடித்துக்கொண்டு பேசாமல் இருந்தேன், அவன் எதிரில் எங்கள் சண்டையை ஆரம்பிக்க வேண்டாம் என்று. அவன் போன பிறகு அவனைப் பற்றி விசாரித்தேன். கொஞ்சம் துருவிக் கேட்டதில் அவளுக்குக் கோபம் வந்து விட்டது. "என்னை நம்ப மாட்டேன் என்கிறாய். என் வயதில் பெண்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று உனக்குத் தெரியாது. நீ ஒரு இந்திய முட்டாள்" என்று திட்டினாள். எனக்கு பொங்கிக்கொண்டு வந்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஒருவேளை நான் over-protective ஆக இருக்கிறேனா? அவள்மேல் நம்பிக்கையில்லாமல் பேசுவதால்தானே பொரிந்து கொட்டுகிறாள்" என்று நானே என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால், அவள் தினம் லேட்டாக வர ஆரம்பித்தாள். சாப்பிட மாட்டாள், ஒழுங்காக. எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வலுக்கத்தான் செய்தது.

திடீரென்று என்னிடம் நட்பாக இருக்கத் தொடங்கினாள். வீட்டு வேலையை என்னிடமிருந்து பிடுங்கிச் செய்ய ஆரம்பித்தாள். சரிதான், மாறிவிட்டாள் என்று நினைத்து நான் மிகவும் சந்தோஷப்பட்டு பாசத்தைப் பொழிய ஆரம்பித்தேன். போன வாரம், "அம்மா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் vacation போகிறார்கள். ஜூலை 4ம் தேதி வீக் எண்டில். நான் கொஞ்சம் பணம் வைத்திருக்கிறேன். இன்னும் 500 டாலர் தேவைப்படுகிறது. கொடுக்கிறாயா?" என்று கேட்டாள். எனக்கு அந்தத் தொகை பெரிய தொகை. நாங்கள் எந்த வசதிகளையும் அனுபவிக்காமல் இரண்டாவது பெண்ணுக்காகச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். எதற்கு அவ்வளவு expensive vacation என்று மென்மையாகக் கேட்டேன். அவள் ஏதோ ஆயிரம் காரணங்கள் சொன்னாள். அவளுடைய 5, 6 தோழிகள் பேரையும் சொன்னாள். எனக்கே பாவமாக இருந்தது. 'சரி, பார்க்கலாம்' என்று பாசிடிவ் ஆக பதில் சொன்னேன். ஒரு தழுவல், ஒரு முத்தம் கிடைத்தது. நெகிழ்ந்து போய்விட்டேன்.

நான் சாதாரணமாக வேலையை விட்டு வந்தால், சமையல் வேலையெல்லாம் முடித்து சாப்பிட்டு விட்டுத்தான், மேலே தூங்கப் போவேன். நேற்றைக்கு ஏதோ வேண்டி மேலே சென்றால் பக்கத்து ரூமில் இதுகள் இரண்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். "இரு இப்போதே போய் நான் அம்மாவிடம் சொல்கிறேன். நீ யாரோடு வெகேஷன் போகிறாய் என்று" என்று சொல்லி, சின்னவள் ஏதோ பயமுறுத்திக் கொண்டிருந்தாள். பெரியவள் அதற்கு கூக்குரலிட்டாள். நான் பொறுக்க முடியாமல், கதவைத் திறந்து சின்னவளைத் தரதரவென்று கீழே அழைத்துக் கொண்டு போய் விவரம் கேட்டேன். அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் எல்லாவற்றையும் சொல்லி விட்டாள். வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்த பையனுடன் இவள் தனியாகப் போவதற்குத் திட்டமிட்டு ரிசார்ட் எல்லாம் புக் செய்து வைத்திருக்கிறாள். எனக்கு மிகவும் அதிர்ச்சி. என் கணவரைக் கூப்பிட்டு ஒரு குரல் அழுது தீர்த்தேன். அவரும் அவளைக் கூப்பிட்டு, இந்த வெகேஷன் கிடையாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். தன்னுடைய விடுமுறை வீணான ஏமாற்றம் ஒரு பக்கம், தான் பொய் சொல்லி மாட்டிக்கொண்டது மறு பக்கம், அந்த பாய் ஃப்ரெண்டுக்கு நிலைமையை எடுத்துச் சொன்னால் அவன் வேறு யார் பின்னாலாவது ஓடி விடுவானோ என்ற பயம் ஒரு பக்கம். எல்லாம் சேர்ந்து, அவள் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. நான் அருகில் போகவே முடிவதில்லை. கதவை உள்ளே பூட்டிக் கொள்ளக் கூடாது என்று அந்த 'லாக்'கை மட்டும் முன் ஜாக்கிரதையாக எடுத்து விட்டேன்.

வீட்டிலே ஒரு வெறுமை. ஓர் அம்மா என்ற முறையில் எங்கே தவறு செய்தேன்? பெற்ற குழந்தையைக் கண்டிப்பது தவறா? பாதுகாக்க நினைப்பது தவறா? இந்த ஊரில் வந்து செட்டில் ஆனதே நம் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும்; நல்ல எதிர்காலம் வேண்டும் என்றுதானே! அவளை வெளியே அனுப்பவே பயமாக இருக்கிறது. திரும்பி வர மாட்டாளோ, ஏதேனும் அவசர முடிவு எடுத்து விடுவாளோ என்று பயமாக இருக்கிறது. தாய்-மகள் உறவு முறிந்து போய்விட்டது என்று நினைக்கிறேன். மிகவும் அன்னியமாகத்தான் என்னை அவள் பார்க்கிறாள். எப்படி இந்த நிலைமையைச் சீர் செய்வது? தயவு செய்து உதவுங்கள்.

இப்படிக்கு

................

அன்புள்ள சிநேகிதியே,

நம்புங்கள், நான் சொல்வதை. தாய்-மகள் உறவு முறிந்து போகவில்லை. போகாது. இது ஒரு தற்காலிகக் கட்டம். ஆனால் மிகமிக முக்கியமான கட்டம். விடலைப் பருவத்தின் முரண்பாடுகளைச் சந்திக்காத பெற்றோர்களே இருக்க முடியாது. தன் திட்டம் எல்லா வகையிலும் பொய்த்துவிட்டது (நீங்கள் அழகாக அவள் நிலைமையை அலசியிருக்கிறீர்கள்) என்று தெரிந்த எந்தப் பெண்ணும் சிரித்துக் கொண்டு இயல்பாக இருக்க முடியாது. குற்ற உணர்ச்சி கோபத்தையும், கொந்தளிப்பையும்தான் முதன்மைப்படுத்திக் கொண்டு வரும். நீங்கள் அவ்வப்போது அவள் நிலைமை வெளிப்படையாக இல்லாமல் அரசல் புரசலாகக் கண்காணித்துத்தான் வர முடியுமே தவிர அவள் எதிரில் போய் நின்று உங்கள் நியாயத்தை எடுத்துச் சொல்ல முடியாது. ஒரு தாயின் கடமையையோ, பாசத்தையோ பறைசாற்ற முடியாது. எரிமலை அடங்க நிச்சயம் நேரம் வேண்டும். அவள் செய்தது சரியில்லையென்றாலும், அவள் மனம் வெந்து போயிருக்கிறது. Give Her the Space. அவள் பொய் சொன்னதால் நீங்கள் அனுமதிக்கவில்லை. உண்மையைச் சொல்லியிருந்தாலும் அனுமதித்திருக்க மாட்டீர்கள். So, children take a chance by lying.

என்னுடைய அனுபவத்தில் இது போன்ற கலாசார ரீதி என்று நினைத்து, சிறுவயதினர் பாதை மாறி நடக்கும்போது, அவர்களுடன் அந்தப் பாதையிலேயே நடந்து பிறகு தங்கள் பாதைக்குக் கொண்டு செல்லும் உபாயம் அந்தச் 'சிநேகிதம்' என்ற உறவுக்குத்தான் தெரியும். அங்கே தாயோ, தந்தையோ தங்களை சிநேகிதர்களாக உருவகப்படுத்தி அவர்களுடைய குழந்தைகளின் ஆசாபாசங்களை இனம் கண்டுகொண்டு, அதிர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அவர்களுடைய அந்தரங்கத்தில் புகுந்தால்தான் அங்கே பொய்மை இருக்காது. உறவு வலுப்படும். பெற்றவர்கள் என்று நம்மை அடையாளம் காட்டுவதைவிட, நண்பர்கள் என்று நாம் புரிய வைத்தால்தான், அவர்களுடைய உலகிற்கு நம்மைக் கொண்டு செல்வார்கள். This is a challenging task. இல்லையென்று சொல்லவில்லை. பெற்றவர்களாகிய நாம் "இதைச் செய்; அதைச் செய்யாதே!" என்று சொல்லியே பழகிவிட்டோம். நம் குழந்தைகள் இப்படி வருவார்கள் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு, அந்தக் கட்டத்துக்குள்ளேயே அவர்களை வளர்க்கப் பார்க்கிறோம். அங்கேதான் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறிப் போகின்றன. "செய்யாதே" என்ற சொல்தான் செய்யத் தூண்டும் உத்வேகத்தைப் பலருக்குக் கொடுக்கிறது என்பது நம்மில் பலருக்குப் புரிவதில்லை. எங்கெல்லாம் பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுவில் சிநேகிதம் என்ற உறவு பலப்படுகிறதோ, அங்கெல்லாம் பிரச்சனைகள் சுலபமாகச் சமாளிக்கப்படுகின்றன. எனக்கு இதுபோன்ற ஒரு 'கேஸ்-ஸ்டடி' நினைவுக்கு வருகிறது. மிக அருமையாகச் சமாளித்து இருந்தாள் அந்தத் தாய். எனக்கும் அதில் சிறு பங்கு இருந்தது. அதைப்பற்றி அடுத்த இதழில் விவரிக்கிறேன்.

நீங்கள் ஒரு நல்ல தோழியாக மாறிப் பாருங்கள். அவளுடைய கண்ணோட்டத்தில் உங்கள் உலகத்தைப் பாருங்கள். உங்களுக்கும் சில விஷயங்கள் புரிபடும்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com