அஸ்வின், அஷோக்
வால்ட் டிஸ்னியின் குறும்பான மிக்கி மௌஸ், பக் பன்னி தொடங்கி, எலியைப் பூனையொன்று விடாமல் துரத்தும் டாம் அண்ட் ஜெர்ரி வரையில் விலங்குகளைப் பயன்படுத்தும் கார்ட்டூன்களைப் பார்த்தாயிற்று. யூனிகார்ன், காப்லின், தேவதைகள், ஒட்டடைக் குச்சியில் பறக்கும் சூனியக்காரிகள், குள்ளர்கள் என்று இங்கிலாந்தின் கற்பனையுலகப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தாயிற்று. மனிதத் தலையும் குதிரை உடலுமாக சென்டார்கள், பறக்கும் குதிரைகள், பாம்புக் கூந்தல், கோரைப்பல், வாள் நகம் கொண்ட கார்கான்கள் என்று கிரேக்கக் கற்பனைகளைக் கார்ட்டூனில் தரிசித்தாயிற்று. டோரா, நரூத்தோ, ப்ளீச் என்று ஜப்பானிய 'யேனிமே'க்களுக்கு அடிமையாகிவிட்டதும் உண்டு.

இவற்றையெல்லாம் பார்த்து வந்த அஸ்வின் ஸ்ரீவத்ஸாங்கம் மற்றும் அஷோக் ராஜகோபாலுக்கு ஓர் ஆசை: கற்பனைச் செழுமை மிக்க இந்திய இதிகாச புராணங்களில் வருபவற்றை மிகுபுனைவு (fantasy) வரைபடப் புதினங்களாகத் (Graphic Novels) தரவேண்டும் என்பதே அது. அந்தக் கதைகளுக்கு ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் உயிரூட்ட, உலகெங்கிலுமுள்ள மக்கள் ரசிக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்கள். அப்படிப் பிறந்ததுதான் 'Neelakshi, the Blue-eyed One' (நீலவிழியாள் நீலாட்சி).

ஆசைக்கும் சாதனைக்கும் இடையில் நிற்பது முயற்சி. முயற்சிக்குத் தூண்டுகோலாக அனுபவம் அமையலாம். பெங்குவின் இந்தியா பதிப்பித்த 'Witchsnare' என்ற Gamebook (இதில் வாசகர்கள் தாம் படிக்கும் வீரசாகசக் கதை மேற்கொண்டு எப்படிப் போகவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்) ஒன்றை எழுதிய அனுபவம் அஷோக்குக்கு உண்டு. இந்தப் புத்தகத்தின் களம் புராதன இந்தியா. அவரது அடுத்த நாவலான 'Ajith the Archer' என்பதன் களமும் அதுவே.

அஸ்வினும் அஷோக்கும் இணைந்து 'Dynast' என்ற படநாவல் வரிசையை முதலில் உருவாக்கினார்கள். அஸ்வின் தனது பதின்ம வயதுகளிலேயே டைனாஸ்டைக் கற்பனை செய்திருந்த போதும் அதை உலகுக்குத் தருவது பகற்கனவாகவே இருந்து வந்தது. Shatterday Comics பதிப்பகத்தின் தயாரிப்பில் உள்ள அது இன்னும் இரண்டு மாதங்களில் வெளிவரப் போகும் உற்சாகத்தில் இருக்கிறார் அவர். தமிழ்க் கலாசாரம் கொண்ட அனிஹீம் என்ற கற்பனையான ஊரில் கதை நடக்கிறதாம். அங்கே ஒரு அம்மன் கோவில்கூட உண்டாம்! தமிழ்ப் பழமொழிகளின் வாசம் அதன் கதாபாத்திரங்களின் பேச்சில் வீசும். வேட்டி, புடவையை ஒத்த ஆடைகளை அணியும் அவர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்.

அஸ்வின், அஷோக்கின் அடுத்த படைப்புதான் நீலாட்சி. இதில் அசுரர்களும் தேவர்களும் அமிர்தம் எடுப்பதற்காகப் பாற்கடலைக் கடைந்த நமது புராணக் கதை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது சமகால கிராஃபிக் நாவல்தான். சான் ஃபிரான்சிஸ்கோவில் வசிக்கும் நீலா என்ற தமிழ்ப் பெண்ணைச் சுற்றிக் கதை நடக்கிறது. பாதாளம், சொர்க்கம் என்ற இரண்டு உலகங்களுக்குள்ளும் அவள் பிரவேசிக்க நேர்கிறது. மாய மந்திரம் நிரம்பிய விறுவிறுப்பான இந்தக் கதையில் உலக அமைதி, ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் போன்ற லட்சியங்களும் பின்னிப் பிணைந்துள்ளன.

"நீலாட்சியை நாயகியாக வைத்து இன்னும் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. 'நீலாட்சி-அமுதத்தைத் தேடி' என்பது 64 பக்கப் படக்கதை. படங்கள் உலகத் தரத்தில் இருக்கும்" என்கிறார் அஸ்வின். "படங்கள் வழியே கதை சொல்வதில் ஒரு குட்டிப் புரட்சியையே உண்டாக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புறோம். அதனால் ஜூடித் டொண்டோரா என்ற மிகத் திறன்வாய்ந்த ஓவியரையும், ரோலண்ட் பில்க்ஸ் என்ற வண்ணப் பூச்சாளரையும் எங்கள் அணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் அஷோக். ஜூடித், ரோலண்ட் இருவருமே கிராஃபிக் நாவல் துறையில் மிகப் பிரபலம்.

வேலை தொடங்கி, முதல் சில பக்கங்கள் தயாரான உடனே Kickstarter.com என்ற சிறுநிதி திரட்டும் இணையதளத்தில் நீலாட்சியை அறிமுகப்படுத்தினார் அஸ்வின். ஆரம்பநிலைத் தேவையான 3000 டாலரைப் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதை வைத்துப் படம் வரையும் வேலையை முடித்து விடலாம். அடுத்த கட்டம், படத்துக்கு வண்ணம் தீட்டுதல். முதல் கட்டத்தின் வெற்றி அடுத்த கட்டத்துக்கான நிதியையும் kickstarter வழியாகவே பெறலாம் என்ற எண்ணத்தை இவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 24 பக்கங்களுக்கு மேல் கோட்டோவியம் தயார். அதில் 15 பக்கங்களுக்கு வண்ணமேற்றியாகி விட்டது. வேலை எதற்காகவும் நிற்கவில்லை. சில பதிப்பாளர்கள் இதை வெளியிட ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த ஆண்டில் நீலாட்சியின் சாகசங்களை வாசகர்கள் படிக்கப் போவது நிச்சயம்.

ஐந்திலிருந்து முந்நூறு டாலர் வரை நன்கொடையாளர்கள் தந்துள்ளனர். தவிர வேறு வகைகளிலும் பலர் உதவ முன்வந்துள்ளனர். சில கடைகள் தம் வாசலில் நீலாட்சி சுவரொட்டிகளை வைத்துள்ளன. தோழி மது மேனன் அறிமுக அனிமேஷன் வீடியோ ஒன்றைத் தயாரித்துள்ளார். பத்மினி ராமன் நீலாட்சியின் கழுத்திலிருப்பதைப் போலவே அமைதிப் பதக்கம் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஃபேஸ்புக் குழுவினர் பலரும் நன்கொடை தந்து உதவியுள்ளனர்.

மேற்படி பதக்கம், புத்தகப் பிரதி, டி ஷர்ட், ஓவியப் பிரதி என்று பல்வேறு வகையான அன்பளிப்புகளை அஸ்வின் நன்கொடையாளர்களுக்குத் தரப்போகிறார். அவர்களது பெயர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திலும், படக்கதைப் புத்தகத்திலும் பதிப்பிக்கப்படும்.

அமெரிக்கப் வாசகர்களிடையே இந்தியக் கதைகளைப் பரவலாக்கி இந்தியக் கற்பனை வளத்துக்குப் பெருமை சேர்க்கக் கிளம்பியுள்ளார்கள் அஸ்வினும் அஷோக்கும். அவர்களோடு பணி செய்யும் குழுவினரைப் பற்றி அறிய

ஹாலிவுட்டிலும் பரபரப்பூட்ட 'நீலாட்சி'க்கு தென்றலின் வாழ்த்துகள்!

மதுரபாரதி
தகவல்: நீலாட்சி குழுவினர்

© TamilOnline.com