செல்லம் ராமமூர்த்தி
பவானியில் பிறந்து, ஓசூரில் வாழ்ந்து வரும் திருமதி செல்லம் ராமமூர்த்தி (வயது 61), தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். தற்போது நியூஜெர்சியிலுள்ள தமது மகள் வீட்டுக்கு வந்துள்ளார்.

ராஜ் டி.வியின் 'அகட விகடம்' நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்டவர். பட்டிமன்றப் பேச்சுக்களின் காரணமாக 'பாரதி கண்ட புதுமைப் பெண்' என்ற பட்டம் பெற்றவர். ஓசூர் மக்கள் இவரை 'ஐயர் மாமி' என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவர் அரசியல்வாதியல்ல; ஆனால் இன்றும் ஓசூரில் இவர் பிரபலமான முன்னாள் கவுன்சிலர்.

பவானியில் பிறந்து, வளர்ந்த செல்லம் சேலம் சாரதா கல்லூரியில் பீ.யூ.சி. படிப்பை முடித்தார். அங்கு, ஆசிரியர் புலவர் திரு. குழந்தை அவர்கள் தந்த ஊக்கத்தால் தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றார். டி.வி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்த திரு. ராமமூர்த்தியுடன் இளவயதிலேயே திருமணம் நடந்தேறியது. பணி நிமித்தமாக இத்தம்பதியர் ஓசூர் சென்றனர்.

அது 1979ம் வருடம். செல்லம் மாமியிருக்குமிடத்தில் "தட்டிக் கேட்க ஆளில்லைன்னா, தம்பி சண்டப் பிரசண்டன்" என்ற வாக்கிற்கே இடமில்லை. பிறருக்கு உதவி புரியும் குணம் அதிகம் கொண்ட இவர், எங்கு தப்பு நடந்தாலும் அங்கு தைரியமாகச் சென்று நீதி கேட்பாராம். தாம் வசித்த ஓசுர் டி.வி.எஸ். நகரில் இதர பெண்மணிகளைச் சேர்த்துக்கொண்டு சாலைகளைக் கூட்டிச் சுத்தம் செய்தல், கடையில் பொருட்கள் வாங்கும்போதோ, பொதுவிடத்தில் மக்கள் நிற்கும்போதோ அவர்களை வரிசையில் நிற்கச்செய்தல் போன்ற இவரது செயல்களைப் பார்த்து அம்மக்கள் இவரைப் பெண்கள் தொகுதியில் போட்டியிடக் கூறியுள்ளனர். கணவர் ராமமூர்த்தியும் தனது ஆதரவைத் தெரிவிக்கவே, 1996ம் ஆண்டு ஓசூரில் வார்டு கவுன்சிலர் பதவியை வென்றார் செல்லம்.

ஐந்து ஆண்டுகள் கவுன்சிலராகப் பணிபுரிந்த செல்லம் மாமி செய்த சாதனைகள் பலப்பல. ஓசூரிலுள்ள அந்திவாடி பகுதியில் நுகர்வோர் பங்கீட்டுக் கடை இல்லாததால் மக்கள் ரயில்வே கேட் தாண்டி வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. செல்லம் அந்த அந்திவாடி சேரி மக்களிடம் சென்று அரசாங்கத்திடம் என்னென்ன உதவிகள் பெறலாம் என்பதை எடுத்துக் கூறி, அவர்களது கண்களைத் திறந்ததோடு பல உதவிகள் புரிந்துள்ளார். இவரது தனி முயற்சியால் அங்கு நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது. இதனால் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு ஆளாகி, இரண்டு நாள் அரசாங்கப் பாதுகாப்பும் இவருக்கு அளிக்கப்பட்டது. அதே அந்திவாடி கிராமத்திலுள்ள அரசு துவக்கப் பள்ளியில் இரவு நேரத்தில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டறிந்து, அதனைத் தடுக்கக் குழு ஒன்றை அமைத்து, டி.வி.எஸ். நிறுவனத்தின் ஆதரவோடு அவற்றைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

இளம் வயதினர், அதிலும் பெண்கள் அதிகம் நடமாடும் முக்கியச் சாலை ஒன்றில் திறக்க இருந்த மதுபானக் கடையை அந்த ஊர் மக்களிடம் கையொப்பம் வாங்கி, மனு ஒன்றைத் தயார் செய்து, அப்போதைய துணைக்கலெக்டர் கணேசன் அவர்களிடம் மனு கொடுத்தாராம். மதுபானக் கடை ஏலம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், துணைக்கலெக்டர் இதனை விசாரித்து, தக்க நேரத்தில் தடுப்பு உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் கொண்ட மதுபானக் கடை ஏலதாரர் தனது வருமானம் கைவிட்டுப் போகக் காரணம் செல்லம் மாமியே என்று மிரட்ட, அதற்கும் அஞ்சவில்லையாம். செல்லமா, கொக்கா!

காலை, மாலை என்றில்லாமல் இவர் வீட்டுக்கு எப்பொழுதும் பல பெரியோரும் குழந்தைகளுமாக வந்து போவார்களாம். தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு, போதை, புகையிலை பழக்கமுள்ளவர்களுக்கு என்று பலருக்கும் கவுன்சலிங் செய்வதோடு, ஆன்மீக மேம்பாட்டுக்கும் தம் பங்கைச் செய்து வந்திருகிறார் செல்லம் மாமி.

கடந்த 13 வருடங்களாக வீடு வீடாகச் சென்று பகவத் கீதை பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். 30 ஆண்டுகளாக இவரது இல்லத்தில் 'ராதா கல்யாண' வைபவம் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. தமது 5 வருட கவுன்சிலர் காலம் முடிந்த பின்னர், பல அரசியல் கட்சிகள் இவரைத் தத்தமது கட்சி வேட்பாளராகப் போட்டியிடக் கோரிய போதும், இவர் மறுத்து விட்டார். தாமே சுயேச்சையாக நிற்க முடிவு செய்து களத்தில் இறங்கினாராம். அதில் வெற்றி காணவில்லை. ரோட்டரி சங்கத்தின் இன்னர் வீல் கிளப்பின் தலைமைப் பொறுப்பை வகித்த செல்லம் அவர்களுக்கு அரசியல் வட்டாரத்திலும் நல்ல பெயர் உண்டு.

கர்நாடக சங்கீகத்தில் வல்லுநரான செல்லம் மாமிக்கு மிகவும் பிடித்த பாடல் "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..." சாம்பார், கத்திரிக்காய்க் கூட்டு, பொறியல், மிளகுக் கூட்டு போன்ற சமையல் வகைகளில் மாமி வெளுத்து வாங்குவாராம். பிடித்த கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், மு. மேத்தா. இவரே ஒரு கவிஞரும் கூட. ஒரு சமயம் இவர் இல்லத்துக்கு வருகை தந்த ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் இவரிடம் புதுக்கவிதைகள் எழுத வேண்டாம், மரபுக் கவிதைகளையே எழுத வேண்டும் என்று கூறியதாகவும், அதை இன்றுவரை பின்பற்றி வருவதாகவும் கூறுகிறார்.

"வந்தாரை வாழ வைக்கும் ஓசூர்" எனத் தாம் வாழும் நகரத்துக்குப் பெயர் சூட்டுகிறார் மாமி. நேர்மையோடும் கட்டுப்பாடோடும் இருந்தால் ஓசூரில் சோடை போக முடியாதாம்.

பதவிப் பிரமாணம் எடுத்து, அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, மக்களுக்கு சேவை செய்வேன் எனச் சபதம் எடுத்த அந்தத் தருணம் தன் வாழ்வில் மறக்க முடியாதது என்கிறார். அதேபோல் தம்மை நொந்து நூலாக்கிய விஷயம், அவர் வீட்டிற்கு எதிரே இருந்த அடர்ந்த மரங்களை அரசியல் செல்வாக்குக் கொண்ட ஒருவர் வெட்டிவிட முடிவு செய்ததுதான். எத்தனை போராடியும் மனுக்கள் கொடுத்தும் அந்தப் பச்சை மரங்கள் வெட்டப்பட்டபோது இவர் பட்ட வேதனையைப் பற்றிக் கூறும்போதே குரல் தழுதழுக்கிறது. இதனால் இவரது கணவர் மனம் வாடி, நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாராம். தனது மூத்த மகள் வசிக்கும் மஸ்கட்டில் வேப்ப மரங்கள் தழைத்தோங்கி நிற்க, தாம் வாழும் இந்தியாவில் மரங்கள் வெட்டப்படும் அவலத்தைக் கூறிக் குமுறுகிறார் செல்லம் மாமி.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..." என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட திருமதி செல்லம் ராமமூர்த்தி, சமுதாயத்துக்குப் பயனுள்ளவராகப் பலகாலம் வாழவேண்டும். இளந் தலைமுறையினருக்கு உள்ளுந்துதலாக அமையவேண்டும்.

காந்தி சுந்தர்

© TamilOnline.com