இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள் சாண்டியேகோ இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியிலிருந்து திரு. சேகர் விஸ்வநாதன் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார். "சிதார் பண்டிட் ரவிசங்கரின் தொண்ணூற்று ஒன்றாவது பிறந்த நாளை ஒட்டி அவரையும், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா, ஆர்.கே. ஸ்ரீகண்டன், டாக்டர். என். ரமணி ஆகிய இசைக் கலைஞர்களையும் கௌரவிக்கப் போகிறோம். நீங்களும் அந்த விழாவில் பேச முடியுமா?" என்று கேட்டார். கரும்பு தின்ன கூலியா? கடந்த நான்கு வருடங்களாக அங்கே இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி நாலு நாள் கொண்டாட்டமாக இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்துகிறது. அந்த நாட்களில் பங்கேற்பதை என்னைப் போன்ற இசைக் கலைஞர்கள் மிகவும் கௌரவமாக நினைக்கிறோம் என்பது தான் உண்மை.
இந்த வருடம் நிர்மலா சுந்தரராஜன், சுபாஷிணி பார்த்தசாரதி இருவரும் பதம், ஜாவளி சொல்லிக் கொடுத்தனர். ஷஷாங்கின் புல்லாங்குழல் இசை, பட்டாபிராம பண்டிட், ரங்கநாத சர்மா, த்வாரம் லட்சுமி ஆகியோரின் பாட்டு, கணேஷ், குமரேஷ் வயலின், லாவண்யா அனந்த் நடனம், புர்பயன் சட்டர்ஜியின் சிதார் இசை முதலானவை ரசிகர்களை இருக்கையை விட்டு நகரவிடாமல் செய்தன. இந்தியாவிலிருந்தும், அமெரிக்க மாகாணங்களில் இருந்தும் மிகத் தரமான பக்கவாத்தியக் கலைஞர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.
இந்த வருட விழாவின் சிகரம் என்றால் டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் பாட்டுக்கு ரவிகிரண் பக்க வாத்தியமாகச் சித்ரவீணை வாசித்தது; ரவி கிரணின் பாடல்கள், இசையில் திருமதி சாவித்ரி ஜகன்னாத ராவின் வடிவமைப்பில் நடந்த பால ராமாயணம், சீதா கல்யாணம் நாட்டிய விருந்து என்று வரிசையாக சொல்லிக் கொண்டு போகலாம்.
க்ளீவ்லாண்ட் சுந்தரம், திருவையாறு கிருஷ்ணன் மற்றும் நானும் மேடையில் அமர்ந்திருந்த இசை ஜாம்பவான்களைப் பற்றி ஓரிரு நிமிடங்கள் பேசியபின் குரு ரவிசங்கரை கௌரவிக்கும் வகையில் இதற்கென்றே மும்பையிலிருந்து பறந்து வந்த சங்கர் மஹாதேவனின் இசையைக் கேட்க ஆடிட்டோரியத்தில் கூட்டம் அம்மியது. என் கணவர் டாக்டர் பென்னெட்டிடம் உங்களுக்கு இந்த விழாவில் மிகவும் பிடித்த விஷயம் என்ன என்று கேட்டேன். ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல், "தொண்ணூற்றியோரு வயதான ஆர்.கே. ஸ்ரீகண்டனின் பாட்டும், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த ஏறக்குறைய அறுபது இளசுகள் வெகு அழகாகப் பாடியதும் தான். அவர்களைத் தயார் செய்த வெங்கடாசலம், ரேவதி சுப்ரமணியனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என்றார்.
கீதா பென்னெட் |