மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை இசை விழா
ஜனவரி 29, 2011 அன்று லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை இசை விழா நடந்தது. காலையில் ராமருக்கும், சத்குரு தியாகராஜருக்கும் தீபாராதனை காட்டியபின் நிகழ்ச்சி துவங்கியது. கிருஷ்ணா சம்பத் வரவேற்புரை வழங்கினார். லாஸ் ஏஞ்சலஸ் இசை ஆசிரியர்களும், சீடர்களும் தியாகராஜரின் ஸ்ரீ கணபதினியில் தொடங்கிப் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடினர். சக்தி சுந்தரின் பேஸ் கிளாரினெட் இசையுடன் கச்சேரி ஆரம்பித்தது. இசை ஆசிரியர்கள் கான சரஸ்வதி, சுபா நாராயணன், ஏ.எஸ். முரளி, பத்மா குட்டி, பாபு பரமேஸ்வரன், கல்யாணி வீரராகவன், கல்யாணி சதானந்தம், கே.ஆர். சுப்ரமணியம், சங்கரி செந்தில் குமார், வசந்தா பட்சு, திருவையாறு கிருஷ்ணன், டெல்லி சுந்தர்ராஜன், கீதா பென்னட், இந்து நாகா ஆகியோர் அவர்களது சீடர்களுடன் பங்கேற்று தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், அன்னமாசாரியார், சதாசிவ பிரம்மேந்திரர், கான சரஸ்வதி உட்படப் பலரின் கிருதிகளைப் பாடி சபையோரின் பாராட்டுதலைப் பெற்றனர். பாபு பரமேஸ்வரன் சிஷ்யர்களின் கீ-போர்டு, கான சரஸ்வதி சிஷ்யர்களின் கருவியிசை, கீதா ராகவன்-வசந்தா பட்சுவின் வீணை இசை, அவ்யையின் கீ-போர்டு, ஆஷ்ரிதா-ஆஷிகாவின் புல்லாங்குழல் இன்னிசை என அனைத்தும் மிக இனிமை.

ரசிகப் பெருமக்களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றனர் ஹரி அசூரி, ஜெய கிருஷ்ணன், ஆனந்த் சந்தானம், இந்து நாகா, சங்கீதா ஆகியோர். இசைவிழா இயக்குனர் கான சரஸ்வதி தன் மகள் சங்கீதாவுடன் ரேவதி ராகத்தில் நாராயணன் மீது பாடிய பாடல் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது.

ஸ்ரீனிவாசன், நீலகண்ட குண்டப்பா, ராஜீவ் மிருதங்கம், கடம் வாசித்து நிகழ்ச்சியை சோபிக்கச் செய்தனர். ரவீந்திரன் வரதராஜன் அவர்கள் மலிபுகோவில் சார்பில் இசை ஆசிரியர்களுக்கும் கலைஞர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அருண் சங்கர நாராயணன் நன்றி கூற, கணபதி-ராமர் மங்களத்துடன் இசைவிழா நிறைவடைந்தது.

இந்த ஏழாம் ஆண்டு விழாவைச் சிறப்பாக நடத்திய இயக்குனர் கானசரஸ்வதி, தன்னார்வத் தொண்டர்கள் அருண் சங்கர நாராயணன், கிருஷ்ணா சம்பத், முரளிதரன், சிவ தேவா, சங்கீதா ஆகியோர் பாராட்டத் தகுந்தவர்கள்.

தமிழ்ச்செல்வி

© TamilOnline.com