நிவேதா சந்திரசேகர் சங்கீத அரங்கேற்றம்
ஏப்ரல் 9, 2011 அன்று நிவேதா சந்திரசேகரின் கர்னாடக சங்கீத அரங்கேற்றம் சிகாகோவில் நடந்தது. 'குருப்ரம்மா' என்ற பைரவி விருத்தத்துடன் ஆரம்பித்த விரிபோனி வர்ணம் வரப்போகும் கிருதிகளுக்குக் கட்டியம் கூறியது. தொடர்ந்தது தீட்சிதரின் பிரபல 'வாதாபி கணபதிம்'. பின்னர் வந்த விஜயஸ்ரீ ராகத்தில் அமைந்த 'வர நாரதா' பாடலில் துரிதகதியில் அமைந்த பிருகா பிரயோகம் ரசிகர்களைக் கவர்ந்தது. 'தனம்தரும்' என்ற அபிராமி அந்தாதி விருத்தத்தை தொடர்ந்து, நிவேதாவின் தாத்தா மீனாட்சிசுந்தரம் அய்யர் அமைத்திருந்த 'அன்னையே முன்னையே அபயம் என்றுன்னையே' என்ற சகானா ராகப்பாடல் மனதை உருக்கியது. சுவாதித் திருநாளின் 'சாரசாட்ச' பந்துவராளி ராகக் கீர்த்தனையில் ராக ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரம் பாடினார். ஸ்யாமா சாஸ்திரிகளின் 'நினுவினா' (ரீதிகௌளை) வெகு சுகம்.

காம்போதி ராக ஆலாபனைக்குப் பின் லண்டன் ராஜகோபால் ஸ்ரீரங்கநாதர் மீது எழுதிய விருத்தத்தைப் பாடி, 'ஓ ரங்கசாயி' என்ற பல்லவியை எடுத்தவுடன் அரங்கத்தில் கரகோஷம் எழுந்தது. தொடர்ந்து, ரசிகர்களின் விருப்பமாக நீலமணி ராகத்தில் அமைந்த 'என்ன கவி பாடினாலும்' என்ற பாடலை நிவேதா ராக பாவங்களுடனும், அர்த்த பாவங்களுடனும் உருகிப் பாடியது, கண்ணில் நீரை வரவழைத்தது. தொடர்ந்து வந்தது சுகமான ராகம் தானம் பல்லவி சாவேரி ராகத்தில். "தில்லை ஈசன், மலரடி என்றும் துணையே" என்ற திருச்சி சுவாமினாதய்யர் அமைத்த பல்லவியை கண்ட ஜாதி திஸ்ர த்ரிபுட தாளத்தில் நேர்த்தியாக எடுத்தார். அதில் ராகமாலிகையாக, மோகனம், ஆபோகி, நாட்டைக்குறிஞ்சி, பூர்வி கல்யாணி, மத்யமாவதி ராகங்களைத் தொடுத்து அழகுக்கு அழகு சேர்த்தார். பின்னர் வந்த 'பஜே மிருதங்க' என்ற மராட்டி அபங், ரசிகர்களைக் கட்டிப் போட்டது. அடாணாவில் 'புமியதனில் ப்ரபுவான' என்ற திருப்புகழ் பாடி மங்களத்துடன் கச்சேரியை நிறைவுசெய்தார்.

நிவேதாவின் அரங்கேற்றம் அவரது குரு திருச்சி ரமேஷ் அவர்கள் மேற்பார்வையில் சிறப்பாக நடந்தேறியது. அவரது நாதத்வீபம் அறக்கட்டளை மூலம் நிவேதாவுக்கு கர்னாடக சங்கீத டிப்ளமோ பட்டத்தை ரமேஷ் வழங்கினார். லண்டன் ராஜகோபால் வரவேற்புரை வழங்க, டாக்டர் நந்தகுமார் சிறப்புரை ஆற்ற, அனுபமா அறிவுப்புகள் செய்ய, நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. ஜெய்சங்கர் பாலன் வயலினிலும், நெய்வேலி நாராயணன் மிருதங்கத்திலும் பக்கம் வாசித்தனர். நிவேதாவின் குரு மரியாதையும், நன்றி உரையும் அனைவரையும் நெகிழச் செய்தது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com