சிகாகோவில் யோக சங்கீதம்
தத்தபீடம் ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் 69வது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஜூன் மாதத்தில் சுவாமிகள் அமெரிக்கா வரவிருக்கிறார். இந்த விழாவையொட்டி, 'யோக சங்கீதா' அமைப்பு சங்கீத வித்வான் திருச்சி கே. ரமேஷ் அவர்களின் கச்சேரியை சிகாகோவில் ஸ்ரீ ஷீரடி சாயி பாபா கோயிலில் ஏப்ரல் 16, 2011 அன்று நடந்தது.

சுவாமிகளின் 'ஜயஜய கணபதி' (ஹம்சத்வனி) என்னும் கீர்த்தனையைப் பாடி ஸ்வரம் பாடியதும் கச்சேரி களை கட்டியது. பிறகு தியாகராஜரின் பவப்ரியா ராக 'ஸ்ரீ காந்தநீ' கீர்த்தனை விறுவிறுப்பாக அமைந்தது. ஹம்சநாதத்தில் ஸ்ரீ தியாகராஜரின் 'பண்டுரீதி' கீர்த்தனை, நிரவல், ஸ்வரம் எல்லாம் பிரமாதம்.

பின்னர் வந்த, சுவாமிகளின் வர்ணரூபிணி ராகத்தில் அமைந்த 'நமாமி வேத மாதரம்', வரமு ராகத்தில் 'சங்கரம் சங்கரம்', ஆரபி ராகத்தில் 'இந்திரேசா கோவிந்தா' ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றன. 'பரமபுருஷ' எனும் ஷீரடி சாயி பாபா பஜன் ரசிகர்களை உடன் பாட வைத்தது. சிகாகோ டாக்டர். பிரசாத் ராமச்சந்திரன் (வயலின்), மாஸ்டர் ஆத்ரேயா நாதன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசிக்க, திருச்சி ரமேஷின் சிஷ்யை குமாரி நிவேதா சந்திரசேகர் உடன் பாடினார்.

யோக சங்கீதம் குறித்து மேலும் அறிய: www.yogasangeeta.org

சியாமளா ஜயராமன்,
சிகாகோ

© TamilOnline.com