ப்ரியா ஷங்கர் நடனம்
ஏப்ரல் 17, 2011 அன்று பிளசண்டன், கலிபோர்னியா அமடார் தியேட்டரில், நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி வழங்கிய ப்ரியா ஷங்கரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 'The Way She Moves' என்ற இந்தக் கலை நிகழ்ச்சி ராஜஸ்தானில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடந்தது. மாலை 4.00 மணி அளவில் ஆரம்பமான நிகழ்ச்சியில் ப்ரியா ஷங்கரின் சிற்றுரையுடன் இந்தியாவின் ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் அவலம் பற்றிய செய்திப் படம் காண்பிக்கப்பட்டது. பின்னர் ப்ரியா, அஞ்சனாவின் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ப்ரியா இந்நிகழ்ச்சியை மூன்று நாடுகளுடன் சேர்ந்து ஒருங்கிணைத்து நடத்தினார்.

தொடர்ந்த மெலிசாவின் ஸ்பானிய நடனம் கண்களைக் கொள்ளை கொண்டது. தொடர்ந்த ஜிம்பாப்வே நடனம் மிகச் சிறப்பு. தலையில் தண்ணீர் நிரம்பிய பானையைச் சுமந்த நான்கு பெண்கள் தாளம் தப்பாமல் வேகத்துடன் அனாயசமாக ஆடினர். அதற்கு ஆண்கள் கொண்ட குழு வாசித்த வாத்தியம் அருமை. தொடர்ந்து ப்ரியாவின் தாயார் டாக்டர் கமலா ஷங்கர் சிறப்பு விருந்தினர்களைப் பற்றிப் பேசினார். நான்ஸி ஓ'மேலி (மாவட்ட அரசு வழக்குரைஞர்) சில வார்த்தைகள் பேசினார். தொடர்ந்து 'என்ன தவம் செய்தனை' பாடலுக்கு மிக நளினமாக ஆடினார் ப்ரியா. இறுதியில் நடந்த துர்கா தேவி மீதான தில்லானா நிகழ்ச்சியின் சிறப்பம்சம். நிகழ்ச்சியைச் சிறப்பாக வடிவமைத்திருந்த ப்ரியா ஷங்கர் பாராட்டுக்குரியவர். ப்ரியாவின் குரு இந்துமதி கணேஷ் 'நிருத்யோல்லாஸா'வின் நிறுவனர்.

கீதா பாஸ்கர்

© TamilOnline.com