பத்தாம் தமிழ் இணைய மாநாடு
2011 ஜூன் 17 முதல் 19 வரை பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பத்தாம் தமிழ் இணைய மாநாடு நடக்கவுள்ளது. இம்மாநாட்டின் கருத்தரங்கத்தில் வழங்கவும், கருத்தரங்க மலரில் வெளியிடவும் 64 கட்டுரைகள் ஏற்கப்பட்டுள்ளன. இம்மாநாட்டின் அமர்வுகளுக்குப் பேராசிரியர்கள் அனந்தகிருஷ்ணன், ஹெரால்டு ஷிப்மேன், கு. கல்யாணசுந்தரம், வாசு அரங்கநாதன் ஆகியோர் தலைமையேற்கவுள்ளார்கள். தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, பிரான்சு, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பேராசிரியர்களும் மாணவர்களும் கணினி மற்றும் தமிழ்த் துறைகளிலிருந்து மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இத்துடன் டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் மாணவர்களுக்கான திருக்குறள் போட்டியை இம்மாநாட்டோடு இணைத்து நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், இம்மாநாட்டில் பதிவு செய்து கலந்துகொள்வதற்கான வழிமுறைகளையும் காண: www.tamilinternetconference.org. கணினியில் தமிழ் பயன்பாடு, தமிழ்க் கணினித் துறையில் நடந்துள்ள முன்னிலை ஆராய்ச்சிகள், தமிழ் இணைய தளங்கள்/வலைப்பூக்கள் போன்றவை பற்றித் தெரிந்து கொள்ளவும் உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் பேராளர்களைச் சந்தித்துப் பயன்பெறவும் இம்மாநாடு வழி செய்கிறது என்று இதனை அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

டாக்டர் வாசு ரங்கநாதன்,
பென்சில்வேனியா

© TamilOnline.com