ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம்
பிப்ரவரி 18, 2006 அன்று சனிக்கிழமை சான் ஓசெ CET மையத்தில் நடைபெற்ற ஜனனி ஸாயி ஸ்ரீதரனின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

'மஹாகணபதிம்' (நாட்டை) பாடலுடன் தொடங்கியது நிகழ்ச்சி. தொடர்ந்து புஷ்பாஞ்சலி. நடேச கெளத்துவத்தில் பாடலுக்கேற்றப்படி சிறந்த முகபாவம். ஜதிஸ்வரத்தில் சுறுசுறுப்புடன் தாளகட்டு, தீர்மானம் யாவும் பார்க்க நல்ல விறுவிறுப்பு.

அடுத்து வர்ணம். சிறந்த தாளகதியுடன் 'மாவலியின் வலிமை உன் தாளால் அளந்த திருமால்', 'சீனிவாசன் பெருமை சொல்லதாமோ' ஆகிய இடங்களில் மாறிமாறி பிரதிபலிக்கும் முகபாவத்தைக் கொணர்ந்த போது அவையோர் கரவொலி எழுப்பத் தயங்கவில்லை.

'சத்ய சாயி' தாலாட்டுப் பாடலில் 'ஷீரடி க்ஷேத்ர சாயிதேவா, பரமேசா, பர்த்தீசா' எனப் பாடி உருகித் தாலாட்டியது தத்ரூபம். அன்னமாசார்யா பாடலில் அனுமனின் அற்புதங்களைக் குதித்து ஓடிச் சித்தரித்து அழகுடன் அபிநயத்துக் கைதட்டலைப் பெற்றார். ஜாவளியில் பாடலுக்கேற்றபடி மிடுக்கு, துடுக்கு, அலட்சிய பாவம் யாவும் அடுத்தடுத்து ஜனனி காண்பித்தது கனஜோர்.

தில்லானாவை அடுத்து மங்களம். துரிதகதியில் ஆடும்போது முகபாவத்திலும் அக்கறை செலுத்தி ஆடியது அழகு. சத்யசாயி மங்களம் பாடி முடித்தது நிகழ்ச்சிக்கு மிக்க எடுப்பு.

குரு இந்துமதி அவர்களின் சிறந்த பயிற்சி, மாணவியின் அயராத உழைப்பு, இயைந்து ஒலித்த பக்கவாத்தியங்கள் (வயலின், மிருதங்கம், புல்லாங்குழல்) பாடலுடன் சேர்ந்து நிகழ்ச்சியைச் சிறப்புறச் செய்தன.

சீதா துரைராஜ்

© TamilOnline.com