உள்ளது ஒரே மதம்-அது அன்பெனும் மதம்; உள்ளது ஒரே மொழி-அது இதயத்தின் மொழி; உள்ளது ஒரே ஜாதி-அது மனித ஜாதி; உள்ளது ஒரே கடவுள்-அவர் எங்கும் நிறைந்தவர். - ஸ்ரீ சத்ய சாயி பாபா
இப்படி ஒருவரை இவ்வுலகம் கண்டதில்லை என்று வியக்கும்படி வாழ்ந்தார் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. குடிதண்ணீருக்கும், பள்ளிக்கூடத்துக்கும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்த ஒரு சராசரி இந்திய குக்கிராமத்தில் பிறந்தார். 85 ஆண்டுகளுக்குப் பின் அவர் பூதவுடல் மறையும்போது, அதே புட்டபர்த்தியில் பன்னாட்டுத் தரத்தில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ நிலையங்கள்; தென்னகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு தாகம் தீர்த்த குடிதண்ணீர்த் திட்டங்கள். உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான சாயி மையங்கள், அவை நடத்தும் அறப்பணிகள், பள்ளிகள், மருத்துவ சேவைகள், ஆன்மீக நிகழ்ச்சிகள். வெள்ளம், புயல், பூகம்பம் என்று ஏற்பட்டால் அங்கே சாயி தொண்டர்களை முதலில் காணலாம்.
ஆனாலும், மீடியாவுக்கும் சொத்துக் கணக்குச் சொல்வதுதான் பெரிதாக இருந்தது. "என் மாணவர்கள்தாம் எனது மிகப்பெரிய சொத்து" என்று பாபா எப்போதும் கூறி வந்தார். ஏனென்றால் சாயி கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மிகச் சிறப்பான கல்வியோடு, ஒழுக்கம், உண்மை, கருணை, சேவை போன்ற மனிதப் பண்புகளையும் சேர்த்துப் பெற்றார்கள். மீடியாவுக்கு அவர் செய்த அற்புதங்களைப் பற்றிப் பேசுவது முக்கியமாக இருந்த்து. "நான் செய்யும் அற்புதங்கள் என் இயல்பின் மிகச் சிறிய அம்சம்" என்றும், "மனிதனில் உயர் மாற்றத்தைக் கொண்டுவருவதே நான் செய்யும் மிகப் பெரிய அற்புதம்" என்றும் விளக்கினார். அற்புதங்கள் அவரது இயல்பாக இருந்தது. அற்புதங்களால் ஈர்க்கப்பட்ட மனிதர்களை அவர் தன்னலமற்ற சேவை மற்றும் தியாக மனப்பான்மை கொண்ட அற்புதர்களாக மாற்றினார்.
முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன் ஒரு கட்டுரையில் கூறுகிறார், "ஒருமுறை நான் ஊரில் இல்லாத சமயம் வேலையில் எனக்கு எதிரான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட போது மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது. அப்போது மன நிம்மதிக்காகத் திருப்பதி தரிசனத்துக்குப் போய்விட்டு தம்பதியாகக் கோவிலை விட்டு வெளியில் வரும்போது, கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் பேர் என் காலில் விழுந்து வணங்கினர். செய்வதறியாது திகைத்துப் போய்விட்டேன்." மறுநாள் புட்டபர்த்தியில் தனிமையில் தனது கஷ்டங்களை பாபாவிடம் கொட்டிவிடுகிறார் சேஷன். அப்போது பாபா விபூதி வரவழைத்து அவரது மார்பில் தடவி விட்டபின் கூறினாராம், "அவர்களெல்லாம் சீப் கமிஷனர்கள். நீதான் சீஃப் கமிஷனர். நானல்லவா உனக்கு இந்தப் பதவியைத் தந்திருக்கிறேன். நான் இருக்கும்போது உன்னை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது. நேத்து திருப்பதில என்னாச்சு பாத்தியா, மக்களுக்கு உன்மேல் இருக்கற மரியாதையை?" என்று. வெளியுலகுக்கு இரும்பு மனிதராகத் தெரிந்த சேஷனுக்கு தார்மீக தைரியத்தைக் கொடுத்தவர் சாயி பாபா. இதைச் சொல்லும் அதே நேரத்தில், அறம் வழுவாத ஒருவனைச் சராசரி இந்தியன் எவ்வளவு மதிக்கிறான் என்கிற உண்மையையும் திருப்பதி சம்பவம் காண்பிப்பதைச் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.
மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களுக்கும் பணக்காரர்களுக்கும்தான் பாபா அருள் புரிந்தாரா? அவரை நன்கு அறியாதவர்கள் அப்படித்தான் நினைத்தனர். இங்கே நான் மலேசியா சேகரின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனுபவத்தைச் சொல்லியாக வேண்டும். ஏனென்றால் இதில் எனக்கும் ஒரு சிறிய பங்கு உண்டு.
சேகர் ஏதோவொரு குற்றத்துக்குத் தண்டனையாகச் சென்னை புழல் ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார். மாதம் இரண்டு முறை அங்கே சென்று சாயி இளைஞர்கள் சத்சங்கம் நடத்தி வருகிறார்கள். அவர்களோடு நானும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். குடும்பம், சமூகம், வேலை என்று எல்லாவற்றையும் விட்டு நீங்கிச் சிறையில் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகித் துன்புறும் அவர்களுடன் ஓரிரு மணிநேரம் செலவிடுவது எங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. "நீங்கள் எங்களோடு செலவிடும் இரண்டு மணி நேரம் எங்களுக்கு மிக மகிழ்ச்சியான பொழுது" என்று அவர்களும் கூறுவார்கள். அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், 'சாயி சகோதரர்கள்' என்று அழைத்து, பஜனை பாடுவது, உயர்ந்தோரின் கதைகளைக் கூறுவது, குறள், கீதை இவை கூறும் வாழ்நெறிகளைப் பேசுவது என்று எங்களுக்கும் அது மிக மகிழ்ச்சியான பொழுதாகத்தான் இருந்தது.
இவ்வாறு ஓராண்டு கழிந்திருந்திருக்கும். 2010ஆம் ஆண்டும் மே மாதம். பத்து நாள் சேவைக்காக நான் புட்டபர்த்திக்குச் சென்றிருந்தேன். ஒரு வியாழக்கிழமை காலை. பாபாவின் ஆஸ்ரமமான பிரசாந்தி நிலையத்தின் உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய பிள்ளையார் இருக்கிறார். அவரருகே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது கட்டம் போட்ட சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்த ஒருவர் என்னை அணுகி, "சாயிராம், என்னைத் தெரிகிறதா?" என்றார். நான் விழித்தேன். "நான்தான் சாயிராம், சேகர்" என்றார்! நினைவுக்கு வந்துவிட்டது. அதற்கு ஒரு மாதம் முன்னால் அவரைப் பார்த்தபோது அவர் சிறையில் இருந்தார். "ஓ! சேகர் சாயிராம். நீங்கள் இங்கே எப்படி...." நான் வார்த்தை வராமல் திணறினேன்.
"சாமி என்னை விடுதலை செய்துவிட்டார்" என்றார் சேகர். அவர் கண்கள் நிறையக் கண்ணீர். எதுவும் பேசத் தோன்றாமல் முதலில் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன். அவர் தன் கதையைக் கூறினார்.
"நீங்களெல்லாம் புழலுக்கு வந்து சாயி சத்சங்கம் நடத்தத் தொடங்கியபோது எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. இரண்டு மணி நேரம் பாட்டும் கதையுமாக நன்றாகப் பொழுது போகிறதே என்பதற்காக அங்கே வந்தேன். அங்கே வந்து சாமியின் படத்தைப் பார்த்த உடனே எனக்கு அவர்மீது மிகுந்த அன்பு தோன்றிவிட்டது. மிக நெருக்கமானவராக உணர்ந்தேன்." உண்மைதான், ஜெயில் வளாகத்துக்குள்ளே பூக்கும் மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து மாலை கட்டிப் போடுவார் சேகர். அதுமட்டுமல்ல, நாங்கள் போகாத ஞாயிறுகளில் அவர் பாபாவின் படத்துக்கு முன்னால் உட்கார்ந்து ஜபித்துவிட்டு, கற்பூரம் காட்டுவார். சில மாதங்களிலேயே அவரிடம் பாபா தான் செய்வதாகக் கூறும் 'உயர்மாற்றத்தின்' (transformation) அடையாளங்களைக் காண முடிந்தது.
"ஒருநாள் ராத்திரி இரண்டு மணி இருக்கும். 'சேகர் நீ இங்கே இருந்தது போதும். வெளியே போக வேண்டியதுதான்' என்று கூறிய அந்தக் குரல் சாமியினுடையது என்று எனக்குத் தெரிந்தது. நான் உடனே எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தேன், யாரையும் காணவில்லை. எனக்கு சாமி கூறிய சொல்லில் முழுமையான நம்பிக்கை உண்டு. நிச்சயம் நான் விடுதலையாகிவிடுவேன் என்று புரிந்தது. உடனேயே நான் மனதுக்குள் 'சாமி, எனக்கு விடுதலை ஆனவுடன் முதலில் புட்டபர்த்திக்கு வந்து உன்முன் மண்டியிடுகிறேன்' என்று கூறிக்கொண்டேன்." இது நடந்தபோது சேகரின் பத்தாண்டு தண்டனையில் ஐந்தாண்டுகளே நிறைவடைந்திருந்தன. இவர் கூறியதை யாருமே ஏற்கவில்லை, இவரது வக்கீல் உட்பட.
விரைவிலேயே இவரது வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் பரிசீலனைக்கு வந்தது. அதில் சேகர் அதுவரை அனுபவித்த சிறைவாசம் போதும் என்று கூறி விடுவிக்கப்பட்டார். சேகருடன் அதே வழக்கில் தண்டனை பெற்ற மற்ற இருவர் விடுதலை பெறவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இப்படிப் புழல் சிறைவாசிகளிடம் மட்டுமே நான் கண்ட மனமாற்றமும், அத்தகையவர்களிடம் பாபா விளையாடிய அற்புதங்களும் பலப்பல.
விபூதி அல்லது சங்கிலி, மோதிரம் உண்டாக்கித் தருவது மிகச் சிறிய அற்புதமே. "அவை என்னுடைய விசிடிங் கார்டுகள். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை" என்கிறார் பாபா. ஆனால், பல லட்ச ரூபாய் செலவாகும் அறுவை சிகிச்சைகள் புட்டபர்த்தியிலும் பெங்களூரிலும் இருக்கும் சத்திய சாயி சூப்பர் ஸ்பெஷால்டி மருத்துவ மனைகளில் இலவசமாகவே வழங்கப்படுவது அற்புதம். அவரது பெயரில் அனந்தபூரிலும், பெங்களூரிலும், புட்டபர்த்தியிலும் நடக்கும் வெவ்வேறு கல்வி நிலையங்களில் பட்ட மேல்படிப்பு வரை இலவசமாகவே வழங்கப்படுவது அற்புதம்.
"சென்னையின் ஒரு நல்ல பள்ளியில் குழந்தையை UKG சேர்க்க வேண்டுமானால் ஒன்று அல்லது இரண்டு லட்சம் வரை ஆகலாம். அப்படி இருக்கும்போது உங்கள் பள்ளியில் உயர் வகுப்பு வரையில் நீங்கள் எப்படி இலவசமாகக் கல்வி தருகிறீர்கள்?" என்று நான் திரு. குமாரசாமியிடம் கேட்டேன். குமாரசாமி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ சத்ய சாயி விழுக்கல்வி நிறுவனத்தின் (Sri Sathya Sai Institute of Educare) கரஸ்பாண்டெண்ட். "பகவான் பாபா புட்டபர்த்தியில் உள்ள கல்விக்கூடங்களில் இலவசமாகத் தருகிறாரே, நாமும் அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சாயி அன்பர்கள் அதற்குப் பெரிதும் உதவினார்கள். இது சாத்தியமாயிற்று" என்று கூறினார் குமாரசாமி. இந்தக் கல்வி நிலையம் தமிழ் நாடு மாநில சத்ய சாயி அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதாகும். இங்கே தனது மகனைப் படிக்க வைத்த திருமதி தெய்வானை வேலு, "என் மகன் ஒரு நாள் என்னிடம் 'சுவாமி சொல்லியிருக்காரும்மா, பொய் பேசக்கூடாதுன்னு; இனிமே நான் பொய் சொல்ல மாட்டேன்' என்று சொன்னான். அதுபோலவே அவன் பொய் பேசுவதையே விட்டுவிட்டான்" என்று மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார்.
'நான் கடவுள்' என்று அவர் சொல்லிக் கொள்வதை அவரது அன்பரல்லாதவர்கள் விமர்சிப்பதுண்டு. அவர்கள் பாபா கூறுவதை முழுமையாகக் கேட்டதில்லை. "நான் கடவுள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீங்களும் கடவுள்தான். அதை நீங்கள் உணரவில்லை. உங்களது அறியாமைத் திரையை அகற்றி, நீங்களும் நானும் ஒன்றே என்பதை உணர்த்தவே நான் வந்திருக்கிறேன்" என்று அவர் பலமுறை கூறியதுண்டு.
ஸ்ரீ ரமண மகரிஷி, ஷீரடி சாயி பாபா, அரவிந்தர் போன்ற பல மகான்களுடனும் ஞானிகளுடனும் பழகிய கவியோகி சுத்தானந்த பாரதியார் பாபாவிடம் ஈர்க்கப்பட்டார். அவர் சென்னையில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பாபாவின் பேச்சைத் தமிழில் மொழிபெயர்த்தார். கவியோகியார் பேசும்போது "நான் சுவாமியின் அவதார மகிமையை உலகெங்கும் பறந்து சென்று ஒரு கிளியைப் போலப் பரப்ப விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். அதற்கு பாபா, "கிளி நிறையப் பறந்தாகிவிட்டது. கூட்டில் உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும்" என்று ஒரு யோகியின் கடமையை நினைவூட்டியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை என்னிடம் நினைவு கூர்ந்தவர் இதை நேரில் பார்த்த, 85 வயதான சென்னை பக்தர் திரு. எம்.ஜி. சுப்ரமணியம். இவர் என்னுடைய தந்தையார் என்பது உபரி தகவல்.
பாபாவின் சிறுவயதில் புட்டபர்த்திக்கு வந்த ஒரு திகம்பர சாமியாரிடமும் (உடையணியாதவர்) இவ்வாறு நறுக்கென்று பேசியதுண்டு. அவரை நான்கு பேர் ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். சத்யநாராயணா (பாபவின் இளைமைக்காலப் பெயர்) அப்போதே கிராமத்தில் தெய்வீகச் சிறுவனாகப் பிரபலம். எனவே சாமியார் சத்யாவைப் பார்க்க வந்தார். இளம் சத்யா தைரியமாகக் கூறினான், "நீங்கள் ஆடையணிவதில்லை என்றால் ஏன் ஊருக்குள் வந்து மக்களுக்குச் சிரமம் தருகிறீர்கள். உங்களை நான்கு பேர் சுமக்கவும் வைக்கிறீர்கள். எல்லாவற்றையும் துறந்தவர் என்றால், காட்டுக்குள் போய்த் தவம் செய்யுங்கள்" என்று கூறியிருக்கிறான் சிறுவன். காட்டுக்குள் போனால் எனக்கு யார் உணவு தருவார்கள் என்று அவர் கேட்க, அதற்கு, "கவலைப்படாதீர்கள், உங்களுக்கான உணவு உங்களைத் தேடி வரும்" என்று அப்போதே உறுதி அளித்தவர் சாயி பாபா.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலனைச் சந்தித்தேன். அவர் கூறினார், "என்னை ஆசிரியர் சாவி தினமணி கதிரில் சாயி பாபாவைப் பற்றி ஒரு தொடர் எழுதச் சொன்னார். எனக்கு அப்போது பாபாவின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் அதற்காகப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். சுமார் 300 புத்தகங்கள், உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் எழுதியவை, படித்திருப்பேன். இவ்வளவு பேர் இவ்வளவு அனுபவங்களை எழுதியிருக்கிறார்களே என்று அசந்து போய்விட்டேன். பிறகுதான் நம்பிக்கை வந்தது. அந்தத் தொடரை எழுதினேன்" என்றார். காஞ்சி மகா பெரியவரின் அருளுரைகளை ஏழு பகுதிகளாக 'தெய்வத்தின் குரல்' என்றும், ராமகிருஷ்ணர்-விவேகாநந்தர் வரலாற்றை 'அறிவுக்கனலே, அருட்புனலே' என்றும் வெகு அற்புதமாக எழுதியுள்ள ரா. கணபதி அவர்களும் பாபாவின் அருளால் ஈர்க்கப்பட்டார். 'சுவாமி' என்று அவரைப் பற்றி எழுதியுள்ளார். இனம், மொழி, மதம், நாடு என்னும் பேதமில்லாமல் உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருகிறார்கள். தமது அனுபவங்களைக் கணக்கற்ற நூல்களில் பதிவு செய்துள்ளார்கள்.
தன்னை வணங்கச் சொல்லி பாபா வற்புறுத்தியதில்லை. "நான் ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிக்க வரவில்லை. எல்லோரும் அவரவர் மதத்தில் கொண்ட நம்பிக்கையை ஆழப்படுத்துவதே எனது பணி" என்று ஒருமுறை பாபா கூறினார். டான் மரியோ மஸோலனி என்ற இத்தாலியப் பாதிரியார் தனது 'A Catholic Priest Meets Sai Baba' என்ற நூலில் எழுதியுள்ளதை இங்கே ஒப்பு நோக்கலாம்: "12 ஆண்டுகளாக ஒருவர் சாயி பாபாவின் போதனைகளை என்னைப் போலப் படித்து வந்தால், பாபாவின் லட்சியம் ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிப்பதல்ல, மனிதப் பிரக்ஞையை மேலே உயர்த்துவதுதான் என்பதைத் தொடர்ந்து காணமுடியும். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றால் நிரம்பிய வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழ வழிகாட்டுவதன் மூலம் அவர் இதைச் செய்கிறார். அவரவர் மதத்தின் அடிப்படை உண்மைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும்படி தனது ஆஸ்ரமத்துக்கு வருவோரை அவர் கூறுகிறார். அவரிடம் வருகின்ற பலர் மத நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். நான் பார்க்கும் உண்மையான அற்புதம் என்னவென்றால் அவர்களுக்கு மீண்டும் தமது மதத்தைக் கடைப்பிடிக்க ஓர் ஆவல் ஏற்பட்டிருப்பதாகப் பலர் என்னிடம் கூறியதுதான்."
பெரும் எண்ணிக்கையில் புட்டபர்த்திக்குப் பல நாடுகளிலிருந்து வந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடும் கிறிஸ்தவர்களைப் பார்க்கலாம். பௌத்தர்கள் புத்த பூர்ணிமையை இங்கே கொண்டாடினார்கள். அவர் தரிசனம் தரும் குல்வந்த் அரங்கிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்களைக் காண முடியும். சாயி பஜனையில் கண்டிப்பாக ஒரு பாடலாவது எல்லா மதங்களையும் போற்றுவதாக இருக்கும். 'கோவிந்த போலோ' என்று தொடங்கும் பாடலில், 'அல்லா, சாயி, ஏசு, நானக், ஜொராஸ்டிரர், மஹாவீரர், புத்தர் என்று எந்தப் பெயரை வேண்டுமானாலும் சொல்லுங்கள். இவை எல்லாம் வாழ்வுக்கு ஆதாரமாக நிற்பவை. பரமானந்தத்துக்கான வாயிலின் திறவுகோல்கள்' என்று வருகிறது. "ஆயிரமாயிரம் மொழிகளில் ஆயிரமாயிரம் பெயர்களில் இறைவனின் மகிமை எங்கெங்கும் கொண்டாடப்படட்டும்" என்று அறிவித்தவர் பாபா. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது அவரது பெருநோக்கு. அவருடைய பிரசாந்திக் கொடியில் எல்லா மதங்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
பாபா தோற்றுவித்த அறக்கட்டளைகளில் ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.என். பகவதி, தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்ரவர்த்தி போன்றவர்கள் அறங்காவலர்களாக இருக்கிறார்கள். பாபாவின் வழிகாட்டுதலின் கீழ் சற்றும் பிசகாத நேர்மையோடு பணியாற்றிப் பழகியவர்கள் என்பதோடு தனிப்பட்ட முறையிலும் தமக்கான மரியாதை கொண்டவர்கள். பாபா தனக்கென்று எதையும் வைத்துக் கொண்டவரில்லை. மதுரையைச் சேர்ந்த சுப்ரமணியம் செட்டியார் மிகுந்த பக்தியோடு பாபாவுக்கென்று தங்கத் தேர் ஒன்றைச் செய்துகொண்டு வந்த போது பாபா கூறினார், "இங்கும் சரி, வேறெங்கும் சரி, பகவானுக்கு நீங்கள் தரவேண்டியது தூய அன்பு ஒன்றே. தங்க ரதம் அல்ல.... யாராவது இந்த ரதத்தை வாங்கிக் கொண்டால், அந்தப் பணத்தைக் கொண்டு நான் இன்னும் அதிக கிராமங்களுக்குக் குடிநீர் வசதி செய்வதில் மகிழ்ச்சி அடைவேன்" என்று கூறினார். அதை விலைக்கு வாங்கிக்கொண்டனர் ஜப்பானிய பக்தர்கள். அந்தப் பணம் குடிநீர்த் திட்டத்துக்கே போனது.
ஆனால் சாயி அறக்கட்டளைக்குத் தரப்படும் பணம், 'புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்றில்லாமல், மிகத் திறம்பட அதற்கான நோக்கத்துக்கே முழுவதும் செலவழிக்கப்படும் என்கிற நிச்சயம் இருந்ததால், நன்கொடை கேட்டு விண்ணப்பம் இல்லாமல், விளம்பரம் இல்லாமல் சாயி அன்பர்கள் தம்மால் இயன்றதை அனுப்பி வைத்தார்கள். சாயி மையங்களிலும் உறுப்பினர் கட்டணம் கிடையாது. பொதுச்சபையில் நிதி கேட்கக்கூடாது என்பது சட்டம். இன்ன பணி செய்யப்போகிறோம் என்று அறிவிக்கலாம், விருப்பப்பட்டு எதைத் தருகிறார்களோ அதற்குள் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பது நியதி. மாநிலங்கள் பலவற்றில் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் அவை அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்கப்பட்டன.
பத்திரிகைகள், டிவி என்று எதன்மூலமும் தனது சமூக சேவைகளையோ, ஆன்மீகப் பணிகளையோ சாயி பாபா விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. பரபரப்பூட்டும் செய்திகளையே அவை நாடின என்பது அவரது கருத்தாக இருந்தது. பொதுவாக அவரும் அவரது உலகளாவிய நிறுவனங்களின் நிர்வாகிகளும் தமது பணிகளை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல்தான் செய்து வந்தனர். ஏன், 85 வருடங்களாக அவர் இவ்வளவு செய்தார் என்பதை மீடியா வெளிச்சம் போட்டுக்காட்டியதே இல்லை. ஆனால், இவ்வளவு பெரிய அன்பர் கூட்டம் கொண்ட அவர் மார்ச் 28 அன்று மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டபோது ஊடகங்களால் அதற்கு மேலும் அவரைத் தவிர்க்க முடியவில்லை. அன்று தொடங்கி ஏப்ரல் 24ம் நாள் அவர் உடலை நீத்த வரையில் பல்வேறு ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சேனல்கள் தினந்தோறும் பலமணி நேரம் அவரைப்பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்தன. அவரது மகாசமாதிச் சடங்குகளை இந்தியாவின் எண்ணற்ற சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. உலகெங்கிலுமிருந்து புட்டபர்த்தி என்ற அந்தச் சிறிய ஊரின் பெருமகனை இறுதிச்சடங்கைக் காண லட்சக்கணக்கானவர்கள் கூடிவிட்டனர். அவர்களில் சச்சின் டெண்டுல்கர், சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்றவர்களும் உள்ளடங்குவர்.
பாபாவை பகவான் என்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் அவர் நமக்குத் தந்து சென்றுள்ள 'கீதா வாஹினி', 'ஞான வாஹினி', 'தியான வாஹினி' போன்ற எண்ணற்ற நூல்கள் நல்ல வழிகாட்டிகளாக அமையும். புராணங்களில் ஆர்வம் உள்ளவர்கள் 'ராம கதாரச வாஹினி', 'பாகவத வாஹினி' போன்றவற்றைப் படித்துச் சுவைக்கலாம். இவற்றை www.sssbpt.org என்ற தளத்தில் பெறமுடியும். அதுதவிர அவரது வாழ்க்கை, உபதேசம், சேவைகள் போன்ற பலவற்றை www.radiosai.org தளத்தில் காண முடியும்.
ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும், அவரை அவதாரம் என்று ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட, அவரது சமுதாயப் பணியைப் பெரிதாக மதிக்கிறார்கள் என்பது அண்மையில் தெரிய வந்தது. 'தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்' என்றும், 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்' என்றும் சான்றோர் வகுத்து வைத்தபடிப் பார்த்தால், அவர் விட்டுச் சென்றவை கோடிக்கணக்கான மக்களின் துயர் தீர்க்கும் நிறுவனங்களும், அவற்றுக்குத் தன்னலமில்லாமல் உழைக்கச் சித்தமாக உள்ள தொண்டர் படையும்தான். தன்னைப் பற்றிய விமர்சனங்களைப் பற்றிச் சாயி பாபா கருத்துக் கூறியதோ அல்லது விமர்சித்தவர்களைப் பழித்துக் கூறியதோ கிடையாது. "என்னை வெறுப்பவர்களையும் நான் நேசிக்கிறேன், விலக்கி வைப்பதில்லை, அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்" என்றுதான் கூறி வந்திருக்கிறார்.
பாபாவின் கண்களில் நிரம்பிய கருணையும், உதடுகளில் ததும்பிய புன்னகையும், இதயத்தில் ததும்பிய அளவற்ற அன்பும் நம் எல்லோரிடமும் குடிகொள்ளுமானால், உலகம் சொர்க்கமாகிவிடும்.
மதுரபாரதி
*****
மேற்கோள்கள்: நம்பிக்கை இருக்குமிடத்தில் அன்பு இருக்கும்; அன்பு இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்; அமைதி இருக்குமிடத்தில் சத்தியம் இருக்கும்; சத்தியம் இருக்குமிடத்தில் ஆனந்தம் இருக்கும்; ஆனந்தம் இருக்குமிடத்தில் இறைவன் இருப்பான். - ஸ்ரீ சத்ய சாயி பாபா
தினத்தை அன்போடு தொடங்குங்கள்; தினத்தை அன்பிலே கழியுங்கள்; தினத்தை அன்பினால் நிரப்புங்கள்; தினத்தை அன்புடன் முடியுங்கள்; இதுதான் கடவுளை அடையும் வழி. - ஸ்ரீ சத்ய சாயி பாபா
அன்பு நிரம்பிய செயல் தர்மம்; அன்பு நிரம்பிய சொல் சத்தியம்; அன்பு நிரம்பிய எண்ணம் அமைதி; அன்பு நிரம்பிய பரிவு அகிம்சை. - ஸ்ரீ சத்ய சாயி பாபா
இறைவன் ஒருவனே தந்தை, நாம் எல்லோரும் உடன்பிறந்தோர் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள். - ஸ்ரீ சத்ய சாயி பாபா
கல்லிலிருந்து செடியாக, செடியிலிருந்து விலங்காக, விலங்கிலிருந்து மனிதனாக மேலே வளர நீங்கள் ஒவ்வொருவரும் மிகவும் போராடி வந்துள்ளீர்கள். மீண்டும் மிருக நிலைக்குத் தாழ்ந்து விடாதீர்கள். அன்பின் புதிய பேரொளி வீசி, தெய்வ நிலைக்கு உயருங்கள். - ஸ்ரீ சத்ய சாயி பாபா
உங்களை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் உங்களுக்குள்ளும் நீங்கள் காண முடிந்தால், அதுதான் ஞானம் எனப்படும். - ஸ்ரீ சத்ய சாயி பாபா
ஒரு யானையின் மேல் கொசு உட்கார்ந்தால் எப்படியோ அப்படித்தான் நான் செய்யும் அற்புதங்களும். இவை என் மொத்தச் செயல்பாட்டில் அற்பமான இடமே பெறுகின்றன. அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசும் மக்களின் அறியாமையை எண்ணி நான் எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன். எனது மிகப் புனிதமான குணம் அன்பே. அந்த பிரேமை அளவிட முடியாதது. - ஸ்ரீ சத்ய சாயி பாபா |