பேராசிரியர் நினைவுகள்: கூப்பிடுங்கள் ஷெர்லக் ஹோம்ஸை!
பேராசிரியர் நாகநந்தி 'செந்தமிழ் தேனீ' என்ற தலைப்பில் பாரதியைப் பற்றி ஒரு தொடர் சொற்பொழிவு தொடங்கியிருந்தார். பாரதிதாசனுடைய 'புதுநெறி காட்டிய புலவன்' என்ற பாடலில் பாரதியைக் குறித்து பாரதிதாசன் அள்ளிக் கொட்டியுள்ள அர்ச்சனைப் பூக்களிலொன்று இந்த 'செந்தமிழ் தேனீ'. அப்படித் தொடங்கியது, ஒரு சில சொற்பொழிவுகளுக்குப் பின்னால் நின்றுபோனது. பேச்சாளர்களுக்கு, அதுவும் பல கூட்டங்களில் தொடர்ந்து பேசும் பேச்சாளர்களுக்கு, சொற்பொழிவுகளை நடத்தும் அமைப்பு, மேடைக்குச் சொந்தம் கொண்டாடும் அந்த அமைப்பின் தலைவர், மேடைத் தரகர்கள் என்ற பல அடுக்குகளை அடிக்கடி கடக்கவேண்டியதிருக்கும். சமயத்தில், சில சமரசங்கள் தேவைப்படும். ஆசிரியரோ சமரசத்துக்குச் சற்றும் இணங்காத முரட்டுப் பிடிவாதக்காரர். ஆகவே, செந்தமிழ் தேனீ தொடக்க நிலையிலேயே நின்று சில ஆண்டுகள் கடந்திருந்தன.

பிறகு சுபமங்களாவில் பாரதியைப் பற்றி அவதூறான, பொய்யான ஆதாரங்களைக் கொண்ட கட்டுரை ஒன்று வெளிவந்தது. எல்லாக் கருத்துகளுக்கும் இடம் கொடுக்கும் கோமல் சுவாமிநாதன், அந்தக் கட்டுரைக்கும் இடம் கொடுத்தார். 'இந்தக் கட்டுரைக்கு பதில் சொல்ல வேண்டும். நின்று போயிருக்கும் செந்தமிழ்த் தேனீ' தொடர் மீண்டும் நடைபெறவேண்டும். நான் மேடை அமைத்துத் தருகிறேன். பேசுகிறீர்களா?' என்று கோமல் கேட்டுக் கொண்டதற்கு இணங்கத் தொடங்கியதுதான் சென்ற இதழ்களில் குறிப்பிட்டிருந்த சுபமங்களா சொற்பொழிவுத் தொடர். ஆசிரியர் அதற்கு, 'பாரதி பா இயல்' என்று தலைப்பு கொடுத்திருந்தார்.

'பாரதி பா இயல்' உரையின் களத்தை மிக விரிவாக அமைத்துக்கொண்டார் ஆசிரியர். கவிதையை எழுதும் அணுகுமுறையும், அதை ரசிக்கும் அணுகுமுறையும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மாதிரியாக அமைந்து வந்திருக்கின்றன. ஆனால், ஒரு கவிதையை அணுகவேண்டிய அடிப்படைக் கூறுகளைத் தொல்காப்பியம் வரையறுத்திருக்கிறது. 'மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே' என்றே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கவிதையின் ஒவ்வொரு அடியை மட்டுமல்லாமல், ஒவ்வொரு சீரும் அல்லது சொல்லும் மட்டுமல்லாமல், அதன் அசை எனப்படும் சிலபிள் பகுதியையும், அதைவிடவும் சிறியதாகிய ஒலிக்குறிப்பைக்கூடத் தவறவிட்டுவிடக்கூடாது. அப்படி 'நோக்குவதுதான்' ரசனையின் அடிப்படை. 'ஆதிபகவன் முதற்றே உலகு' என்று சொல்வாரானால், 'அது எதுக்கு அங்க ஒரு ஏகாரம்? முதற்றே என்று ஏன் சொல்லவேண்டும்? முதலது என்று சொன்னாலே போதுமே! அப்படி இருக்கும்போது, இங்கே, கூடுதலாக ஓர் 'ஏ' (முதற்றே) சேர்க்கப்பட்டிருக்கிறதே, என்ன காரணம் என்பது வரையில் சிந்திப்பதுதான் கவிதையை ரசிக்கும் அணுகுமுறையின் அடிப்படைக் கூறு என்பது மிகமிகப் பழங்காலத்திலிருந்தே நம் மண்ணில் நிலவிவரும் சிந்தனை. கவிதைகளைப் படிக்கும்போது never miss a word, not even a syllable என்று ஆங்கிலத்தில் சொல்வது வழக்கம். ஒரே ஒரு சொல்லைக்கூடத் தவறவிட்டுவிடாதே. சொல் மட்டுமல்ல; அதன் சிறு பகுதியான அசை (syllable) கூட கவனத்துக்கு உரிய ஒன்றே என்று சொன்னால், அசையின் சிறு பகுதியான மாத்திரையைக்கூட தவறவிட்டுவிடக் கூடாது என்பது தமிழில் ரசனைக்கு விதிக்கப்பட்ட நெறி.

அருமையான இந்தத் தொடரில் ஆசிரியர் அலசிய செய்திகள் ஏராளம். கவிதையில் esoteric language, enigmatic language என்பதையெல்லாம் பற்றி சபையே சிரிப்பால் குலுங்கும்படி விவரித்ததைச் சொல்ல இடம் போதாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பற்பல வாக்கியங்களை மிக வேகமாகப் பேசுவது ரமண மகரிஷியின் சம காலத்தவராகிய சேஷாத்ரி சுவாமிகளுடைய வழக்கம். கேட்பவர்களில் யாருக்கும் ஒன்றும் புரியாது. ஆனால் புரியவேண்டியவருக்குக் கச்சிதமாகப் புரிந்துவிடும். 'ஓ! நேற்று இப்படிச் செய்தோமே, அதை இப்படிக் குறிப்பிடுகிறாரா? இந்தச் செயலின் விளைவு இன்னபடி இருக்கும் என்பதைத்தான் சொல்கிறாரா' என்று, சுற்றி நிற்கும் பெருங்கூட்டத்தில் ஒரே ஒருவர் புரிந்துகொண்டுவிடுவார். அந்தந்தத் துறையில் பயிற்சி உள்ளவர்களுக்கே புரியக்கூடியதான மொழி. வைணவ நூல்களில் 'பரிபாஷை' என்று சொல்வார்கள். சைவ சித்தாந்த நூல்களைப் படிப்பதானால், பசு, பதி பாசம் தொடங்கி தாடலை நெறியையும் அதையும் கடந்த சொற்பயிற்சி, சைவ சித்தாந்திகள் மட்டுமே பயன்படுத்தும் தனிப்பட்ட மொழிப் பயிற்சி எல்லாமும் தேவைப்படும். இவையெல்லாம் எஸோடரிக் பிரிவில் அடங்கும். Enigmatic இன்னும் விரிவான பரப்பு. வேத வேதாகமங்களில் சொல்லப்படுவதைப் போன்ற குறியீட்டு மொழி அது. பஞ்சதந்திரக் கதைகள், பாரதியின் நவதந்திரக் கதைகள் போன்றனவற்றில் இந்த வகையின் சாயல் ஆங்காங்கே தென்படும். என்றாலும் இவற்றை முற்ற முழுக்க எனிக்மாடிக் வகையில் சேர்த்துவிட முடியாது.

குயில் பாட்டுக்கும் இந்தப் பீடிகைக்கும் என்ன சம்பந்தம்? சொல்கிறேன். குயில் பாட்டின் கதைச் சுருக்கத்தை மார்ச் 2011 இதழில் சொல்லியிருந்தேன். 'செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின் மேற்கே சிறுதொலைவில் மேவும் ஒரு மாஞ்சோலை' என்று, கதைக்களத்தின் பூகோளக் குறிப்பைத் தெள்ளத் தெளிவாகவே பாரதி, பாடலின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறான். குயில் பாட்டை இயற்றிய காலகட்டத்தில் பாரதி வாழ்ந்ததும் அங்கேதான். அங்கே ஒரு குயில் கூவிக் கொண்டிருப்பதை ஓர் இளைஞன் காண்கிறான். எப்படிக் காண்கின்றான்? 'பட்டப் பகலினிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான்'. தூங்கிக் கொண்டிருக்கும்போது உண்டான கனவில்லை இது; விழித்துக் கொண்டிருக்கும்போதே, கவிஞர்களுக்கே ஏற்படக்கூடிய 'கண்விழித்துக் காணும் கனவு' என்பதையும் பாரதி தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறான்.

இப்படிப்பட்ட conscious-dream state வகையில் இயற்றப்பட்டதுதான் கீட்ஸ் எழுதிய Ode to a Nightingale. கீட்ஸும் இப்படிப்பட்ட அரைமயக்க நிலையில்தான் பாடலைத் தொடங்குகிறான். ஏதேனும் கள்ளைப் பருகி, இந்த அரைமயக்க நிலையை முழுமயக்க நிலையாக்கிக் கொள்ள மாட்டேனா என்று யோசிக்கிறான். மறுகணமே, 'Away! away! for I will fly to thee, Not charioted by Bacchus and his pards, But on the viewless wings of Poesy' என்று திசை மாறுகிறான். பேக்கஸ் மதுபானத்துக்கான தேவதை. 'சிறுத்தைகள் பூட்டிய பேக்கஸின் ரதத்தில் ஏறி உன்னை அடையத் தேவையில்லை. நீ போ! பறந்து போ! நான் வந்து உன்னை அடைகிறேன்.... மதுவை அருந்தியல்ல... என் கவிச் சிறகை விரித்தபடி' என்றவாறு தொடங்கி, திடும் என்று forlorn என்ற சொல்லோடு ஒரு பாடலை முடித்து, அடுத்த பாடலில், அந்தச் சொல்லே உன்னைவிட்டு என்னைப் பிரிக்கும் சாவுமணிபோல ஒலிக்கிறது. 'Forlorn! the very word is like a bell//To toll me back from thee to my sole self!' என்று திசைமாறி, 'அது நனவிடைத் தோயும் தோற்றமா அல்லது கண்விழித்தே கண்ட கனவா? அது இருக்கட்டும். நான் இப்போது தூங்குகிறேனா, விழித்துக் கொண்டிருக்கிறேனா?' என்று முடிப்பான். பாடலின் எடுப்பையும் முடிப்பையும் இணைத்துப் பார்த்தால், குயில் பாட்டு அதன் சாயலில் இருப்பதைப்போல் தோன்றுகிறது. இந்த வகையில் சிலர் ஆய்ந்திருக்கின்றனர். கீட்ஸ் இயற்றிய இந்தப் பாடலின் தாக்கம்தான் குயில் பாட்டு என்று ஆய்ந்து முடித்தவர்கள் உண்டு.

ஆனால். சிக்கல் அத்தோடு நின்று விடுகிறதா? கீட்ஸின் பாடலில் ஓர் இளைஞன் கவிஞர்களுக்கே உண்டான, தனக்குள்ளேயே அமிழ்வதனால் ஏற்படும் கிறுகிறுப்பில், நைட்டிங்கேலின் பாடலைக் கேட்கிறான். பிறகு ஒரு நிமிஷம், திராட்சை மதுவை அருந்தி, கள் மயக்கம் உண்டானால், இந்தப் பறவையின் ஆனந்த உலகத்தைப் போய் அடைய முடியுமோ என்று ஒரு கணம் நினைக்கிறான்; மறுகணமே, தன் கற்பனைச் சிறகுகளே போதுமானவை என்று தன் மனத்தையே புள்ளாக்கிச் சிறகு விரித்து வானில் பறந்து நைட்டிங்கேலுடன் திரிகிறான். பிறகு திடுமெனக் கனவு கலைந்து எழுகிறான். பாடல் முடிந்துவிடுகிறது. அங்கே குயிலும் மனிதனும் மட்டும்தான் இருக்கின்றனர். குயிலுக்கும் மனிதனுக்கும் இடையே காதல் இல்லை; குரங்கில்லை; மாடில்லை; குயிலுக்கு மனிதன் பேரிலும், குரங்கின் பேரிலும் மாட்டின் பேரிலும் தனித்தனியாகக் காதல் ஏற்படுவது போன்ற தோற்றமில்லை. உண்மையில், (அதாவது, குயில் பாட்டில் காணப்படும் விவரங்களின் அடிப்படையிலான உண்மையில்!) குயில், குரங்கோடும், மாட்டோடும் காதல் மொழி பேசுவதெல்லாம் முற்பிறப்பில் குயில், குயிலி என்ற வேடர் குலத் தலைவனுடைய மகளாக இருந்தபோது, அவளை அடைய விரும்பிய குரங்கனும் மாடனும் தற்போது பேயாகத் திரிவதனால், அவை இந்த மனிதனைக் குழப்புவதற்காக ஏற்படுத்திய மாயத் தோற்றங்கள் என்ற முடிச்சே பாடலின் இறுதிப் பகுதியில்தான் அவிழ்கிறது.

எனவே, இங்கே கீட்ஸின் பாடலில் இல்லாத பற்பல குறியீடுகள் உள்ளன. அவை தற்செயலாக அமைந்தவையா, அல்லது கவிஞன் திட்டமிட்டே, அழுத்தந் திருத்தமாக ஒரு குறிப்பைத் தன் மனத்துக்குள் வைத்து, அவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமானதும் அதே சமயம் ஒரு மின்னலைப் போன்ற கடகடகடவென்ற நடையிலே, வாய்விட்டுப் படித்தால் மூச்சு முட்டிப் போகும் வேகத்திலே பாடி முடித்திருக்கிறானா? இது இப்படிப்பட்ட மாயத் தோற்றத்துக்காகவும், ஓசையின்பத்துக்காகவும் மட்டுமே செய்யப்பட்ட கற்பனையா, அல்லது, பாடலின் இறுதியில் பாரதி சொல்வதைப்போல், 'ஆன்ற தமிழ்ப் புலவீர்! கற்பனையே ஆனாலும் வேதாந்தமாகச் சற்றே விரித்துப் பொருள் உரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ!' என்பதைப் போல ஏதோ ஒரு மையக் கருத்தின் வேறுவேறு குறியீடுகள் அல்லது அடையாளங்களா? இது, வாசகனைத் திணறத்தான் அடிக்கிறது. கீட்ஸ் இப்படிப்பட்ட சவால் எதையும் விடவில்லையே!

பாடலின் இறுதியில் அமைந்திருக்கும் இந்த மூன்றடிகள், பெரும்பேரறிஞர்களையெல்லாம் திணற அடித்திருக்கின்றன. குயில் பாட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகள், ஆர்.எஸ். தேசிகன், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் (இரண்டும் கல்கத்தா தமிழ்ச் சங்க வெளியீடுகள்), சுப்பு ரெட்டியார், மின்னூர் சீனிவாசன் என்று மிக நீளமானவை. ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு விளக்கத்தையும், தத்துவத்தையும் சொல்லி, இதுதான் அது என்று ஓஓஓஓங்கி அடிக்கும். ஆய்வாளர் எவ்வளவுக்கெவ்வளவு ஓங்கி அடிக்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருடை ஆய்வு முடிவின் பேரில் அவருக்கே நம்பி்கையில்லை என்பதுதான் பொருள்! தெபொமீ அவர்களுடைய ஆய்வை எடுத்துக் கொண்டாலே தலை சுற்றும். குயிலே பரமான்மா; இளைஞன் ஜீவான்மா என்று தொடங்குவார். நான்கு பக்கம் கழியும். இந்தப் பிறப்பிலும் மானிடப் பெண்ணாகப் பிறந்த குயிலை, மாடும் குரங்குமான பேய்கள் வந்து, உருவம் மாற்றிப் பறவையாக்கும் கட்டம் வரும்போது சிக்கல் வந்துவிடும். இப்படி பரமாத்மாவை (ஆசை, கோபம், பொறாமை போன்றனவற்றின் குறியீடுகளான) குரங்கன், மாடன் பேய்கள் வந்து நிலைமாறிப் போகச் செய்ய முடியுமா என்பதல்லவா சிக்கல்! உடனே, குயில் ஜீவாத்மா ஆகும்; இளைஞன் பரமாத்மா ஆகிவிடுவான். இன்னும் நான்கு பக்கங்கள் தாண்டினால், மறுபடியும் குயில் பரமாத்மா; இளைஞன் ஜீவாத்மா! மண்ட காயுது இல்ல? அட நீங்க வேற! கைவல்ய நவநீதத்தையே எடுத்து வைத்துக்கொண்டு ஒருவர் குயில் பாட்டை அதற்குள் பொருத்திப் பார்க்க முயன்றிருக்கிறார். கே. மீனாட்சிசுந்தரம் என்றொருவர் எம்.ஃபில். ஆய்வாக வேறுவகையில் ஆய்ந்திருக்கிறார். யாருக்கும் இந்தக் குயில் முடிச்சு அவிழவில்லை.

"Mistrust the obvious, Watson" என்று ஷெர்லக் ஹோம்ஸ் சொல்வதாகச் சில கனான் டாயில் நாவல்களில் வரும். அப்படி, எல்லா ஆராய்ச்சி வித்தகர்களும் கவனிக்காமல் விட்டுவிட்ட, வெளிப்படையான திறவுகோலைக் கவி, பாடலிலே நான்கு முறை ஒலிக்கச் செய்திருக்கிறான். வெளிப்படையாக, திரும்பத் திரும்ப ஒலிக்கும் இந்தப் பகுதியை எந்த ஆய்வாளரும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. காரணம், பரமாத்மா-ஜீவாத்மாவில் தொடங்கி, கைவல்ய நவநீதம் வரையில் அவரவர்கள் சிண்டைப் பிய்த்துக்கொள்ளச் செய்திருக்கும் குயில் பாட்டின் திறவுகோல், பாட்டுக்குள் ஒலிக்கும் நிஜமான குயிலின் பாட்டிலேயே கிடக்கிறது! ஆனால் இப்பகுதி, அவரவர்கள் அடைந்த முடிவுக்குப் பொருந்தாத காரணத்தால், 'தெரிந்தே கண்டுகொள்ளாமல்' விட்டுவிட்டிருக்கிறார்கள். எந்த ஆய்விலும் குயில் பாடும் பாட்டுக்குப் பொருள் காணும் முயற்சியே இல்லை.

ஹரி கிருஷ்ணன்

தொடரும்...

© TamilOnline.com