சிங்கவரம் ஸ்ரீரெங்கநாதர் ஆலயம்
செஞ்சி நகரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள சிங்கவரத்தில், நூற்றைம்பது அடி உயரமுள்ள ஒரு குன்றில் ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீமஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார் என்பதால் இக்கோவில் ஆதிவராகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் விக்ரகம் பல்லவர் காலப் பாணியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இதர கோபுரம், மண்டபம் போன்றவை விஜயநகரப் பாணியை ஒத்திருக்கின்றன. இதன் பாரம்பரிய கட்டடப் பணி, மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. (இவர் விஜயநகர மன்னர். செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கொள்ளிடத்திற்கும், நெல்லூருக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை ஆட்சி செய்தவர்)

மூலவரான ஸ்ரீரங்கநாதர் பாம்பணை மீது துயில்கிறார். இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இருபத்து நான்கு அடி நீளச் சிலை. இது திருவரங்கத்திலுள்ள சிலையைவிடப் பெரியது. இச்சிலையின் தனித்தன்மை என்னவென்றால் இவர் தலையை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டிருப்பதுதான். மூலவர், நாலுகால் மண்டபம், இதர சிறு சிலைகளும் அதே கல்லில் செதுக்கப்பட்டவைதான்.

செஞ்சியின் ராஜபுத்திரத் தலைவனான ராஜா தேசிங்கின் குலதெய்வம் சிங்கவரம் ஸ்ரீரங்கநாதர். போரில் சதாத்துல்லாகானை எதிர்த்துப் போரிடலாமா என்று தேசிங்கு ஸ்ரீரங்கநாதரிடம் ஆலோசனை கேட்க, ரங்கநாதர் அதற்கு வேண்டாம் என்று ஆலோசனை சொல்ல, தேசிங்கு, ராஜபுத்திர வீரனானதால் என்ன ஆனாலும் சரி என்று போர்க்களம் செல்ல முடிவு செய்கிறார். அதனால் துயரத்தில் மூழ்கிய மூலவர், தன் தலையைத் திருப்பிக் கொண்டுவிட்டதாக ஒரு கதை இருக்கிறது. ரங்கநாதர் சொன்னது போலவே போரில் ராஜா தேசிங்கு உயிர் துறந்தான்.

இக்கோவில் செஞ்சிக் கோட்டையுடன் சுரங்கப் பாதை மூலம் இணைக்கப்ட்டுள்ளது. யார் கண்ணிலும் படாமல் தெய்வ வழிபாட்டிற்காக தேசிங்கு மட்டும் போய்வர அந்தப் பாதை பயன்பட்டதாம். இந்தக் கோவிலில் மிக அபூர்வமான பல பஞ்சலோகச் சிலைகள் உள்ளன. காஞ்சி காமகோடி பீடம் பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலுக்கு வருகைதந்தபோது, இங்கு வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள், அங்குள்ள அரச மரத்தின் முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானிக்குமாறு அறிவுரை கூறியதாகக் கோவிலின் தலைமை அர்ச்சகர் கூறுகிறார். ஒருகாலத்தில் கணக்கற்ற முனிவர்கள், ரிஷிகள் அங்கு இருந்ததால் அவ்விடம் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

ஸ்காட் வாரிங் கூறுகிறார்: "விஷ்ணு செஞ்சி பிரபலமாகி அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஏராளமான யாத்ரீகர்கள் கூடும் இடமாக உள்ளது. தென்னிந்தியாவில் செஞ்சி, முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது." பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து ரங்கநாதர் கோவில் தென்னிந்தியாவின் முக்கியமான ஆன்மீக மையமாக இருந்தது தெரியவருகிறது. ஆனால் இக்கோவில் அநேகமாக மறக்கப்பட்டுவிட்டது பரிதாபகரமானது.

விருத்தாசலம் ஸ்ரீ விருத்தகீரீஸ்வரர் ஆலயம்
தமிழ்நாட்டில் புராதனமானதும் புகழ்பெற்றதுமான கோவில்களில் ஒன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகாவில் இருக்கும் ஸ்ரீ விருத்தகீரீஸ்வரர் ஆலயம். இக்கோவில் இறைவனுக்கு வடமொழியில் விருத்தகிரீஸ்வரர் என்றும் தமிழில் பழமலைநாதர் (பழையமலைசிவன்) என்றும் பெயர். (பண்டைக் காலங்களில் இதன் பெயர் திருமுதுகுன்றம்) பிரிக்கப்படாத தென்னாற்காடு மாவட்டமாக அது இருந்தபோது, அதன் ஆட்சியாளராக நான் இருந்தவரை, ஒவ்வொருமுறை விருத்தாசலம் போகும் போதும் அக்கோவிலுக்குப் போவேன்.

இத்திருக்கோவில் அருணகிரிநாதர், குருநமசிவாயர், குமாரதேவர், சிவப்பிரகாசர், ராமலிங்க வள்ளலார், சொக்கலிங்க அடிகளார் ஆகியோரால் பாடப்பட்டுள்ளது. மேலும் பல தேவாரப் பாடல்கள் இத்தலத்தின் மீது பாடப்பட்டுள்ளன. சுந்தரர் தேவாரத்தில் பழமலைநாதரைப் புகழ்ந்து பாடிய வரிகளில் "ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே, மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே" என்று பாடியுள்ளார். இப்பதிகத்தைப் பாடுகையில் திருமுதுகுன்றத்தின் மணிமுத்தாறு நதியில் அவர் வைத்த பொன், ஈசனருளால் திருவாரூரில் உள்ள கமலாலயத் திருக்குளத்தில் கையில் கிடைத்ததாம்!

இங்கு இறைவன் பெயர் பழமலைநாதர். அம்மனின் பெயர் பெரியநாயகி. சிவபெருமானின் நாயகிகளுக்கு இரண்டு சன்னதி இருப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு. விருத்தாம்பிகைக்கும், பாலாம்பிகைக்கும் என இரு சன்னதிகள். பாலாம்பிகை என்பது, முதுமையாக இருப்பதெல்லாம் ஒருகாலத்தில் இளமையாக இருந்தது என்பதைக் குறிப்பிடுகிறது. விருத்தாம்பிகை என்பது இளமையாக இருப்பதெல்லாம் ஒருநாள் முதுமையாகிவிடும் என்பதைக் குறிப்பிடுகிறது.

மணிமுத்தாறு நதியின் கரையில் கட்டப்பட்டுள்ளது இவ்வாலயம். மிகவும் உயரமான சுற்று மதில் சுவர்களைக் கொண்ட நான்கு வாயில்களும், நெடிதுயர்ந்த கோபுரங்களும் சூழ்ந்து அலங்காரத்துடன் உள்ளன இவ்வாலயத்தின் பிரகாரங்கள். இதற்கு உள்புறமாக கருவறையைச் சுற்றி இரண்டாவது மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது உள்பிராகாரம். கோவில் கட்டடக் கலை அழகு நிறைந்ததாக உள்ளது. மேற்குக் கோபுரவாசல் அருகே உள்ள மண்டபம் மிகவும் கவர்ச்சிகரமானது. இதன் இருபுறங்களிலும் சக்கரங்கள் உள்ளன. (இது ஒரிசாவில் உள்ள கொனார்க் கோவிலை நினைவுறுத்துகிறது). இந்த மண்டபம் கடவுளின் ரதம் என்று அழைக்கப்படுகிறது. மண்டபத்தின் கூரையின் உள்புறம் பகுதி, பகுதியாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் அதன் இருபத்து நான்கு தூண்களிலும் கண்ணைக் கவரும் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

விபாஜி முனிவரால் இந்தக் கோவில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். வன்னிமரம் தலவிருட்சம். கோவில் நிர்மாண வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது வேலை செய்தவர்களுக்கு தினக்கூலியாக முனிவர் வன்னி இலைகளைக் கொடுப்பது வழக்கமாம். அன்றைய தினம் அவரவர் செய்த வேலைக்குத் தகுந்த கூலியாக அவை மாறிவிடுமாம். அத்தகைய மகிமை பொருந்திய அவரது திருவுருவச் சிலை, கோவில் உட்புறத்தில் உள்ள வன்னிமரத்தடியில் அமைந்துள்ளது.

சோழ, பாண்டிய, விஜயநகர ஆட்சிக்காலத்திய கல்வெட்டுகள் நிறைய உள்ளன. கோவில் மண்டபங்கள், கோபுரங்கள், சுற்றியுள்ள பிரகாரங்கள், ஆகியவற்றை உத்தம சோழனின் தாயார் கீர்த்தி வாய்ந்த செம்பியன் மாதேவியும், ராணி கண்டராதித்த சோழனின் மனைவியும் 10ம் நூற்றாண்டில் புதிதாகக் கட்டியதையும், சிலவற்றைப் பழுது நீக்கியதையும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அவ்வப்போது இதர அரசர்களும் பரந்த அளவில் பழுதுநீக்கும் பணிகளைச் செய்திருக்கின்றனர். பிற்காலத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் சிறப்பாக இப்பணியை செய்துள்ளனர்.

இங்குள்ள ஆலயத்தில் இருபத்தெட்டு ஆகமங்களுக்கான (நியமங்கள்) தனிக்கோவில் உள்ளது. இந்த இருபத்தெட்டு சைவசித்தாந்த ஆகமங்களும் இருபத்தெட்டு லிங்க வடிவமாக இங்கு உள்ளன. இப்படி ஆகமங்கள் இருப்பது இந்தக் கோவிலில் மட்டுமே. பிரதான திருவிழா மாசி மாதத்து மாசிமகம் அன்று கொண்டாடப்படுகிறது. அன்று நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூணுகிறது. 1983ல் நான் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோது இக்கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டது எனக்குக் கிடைத்த பெரும்பேறு.

ஆங்கிலமூலம்: கரியாலி ஐ.ஏ.எஸ்.
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

('நினைவலைகள்' முற்றுப் பெற்றது)

© TamilOnline.com