அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டில் முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். அதே காட்டுக்கு வேட்டையாடுவதற்காக மன்னன் ஒருவன் தனது படை வீரர்களுடன் வந்தான். தீவிர வேட்டையில் அவன் வழிதவறினான். தனது வீரர்களைப் பிரிந்ததாலும், வெளியேறும் வழி தெரியாததாலும் கவலையுடன் அவன் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தான்.
வழியில் முனிவர் ஒரு மரத்தடியில் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். ஓடோடிச் சென்று அவர் கால்களில் வீழ்ந்து வணங்கியவன், தான் அந்தக் காட்டை விட்டு வெளியேற வழிகாட்டுமாறு வேண்டிக் கொண்டான். முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அதனால் மன்னனின் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை.
பலமுறை மன்னன் கத்தியும் முனிவர் கண் விழிக்கவில்லை. அதனால் மன்னனுக்குக் கோபம் வந்தது. இரண்டு கைகளாலும் முனிவரது தலையைப் பிடித்து உலுக்கி, அவரது தவத்தைக் கலைத்தவன், தனது வாளை உருவிக் கொண்டு அவரை வெட்டப் போனான்.
கண் விழித்தார் முனிவர். தனது தவ ஆற்றலால் நடந்ததை உணர்ந்து கொண்டார். உடனே மன்னனை நோக்கி "நண்பனே, நாட்டுக்குச் செல்ல வழி தேடுவதை விட்டு, நரகத்திற்குச் செல்ல வழி தேடுகிறாயே!" என்றார்.
உடன் நிதானத்துக்கு வந்த மன்னன் யோசித்தான். ஆத்திரப்பட்டு முனிவரைக் கொல்ல இருந்த தனது செயலை எண்ணி வருந்தினான். கையிலிருந்த வாளைத் தூர எறிந்தவன், முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கி, தன் தவறை மன்னிக்குமாறு வேண்டினான்.
அவனை எழுப்பிய முனிவர் புன்சிரிப்புடன், "மன்னா, உனது நாட்டுக்கு மட்டுமல்ல; சொர்க்கத்துக்குச் செல்லும் வழியையும் கூட நீ நன்கு அறிந்திருக்கிறாயே!!" என்று கூறியதுடன், மன்னனின் நாட்டுக்குச் செல்லும் வழியையும் காட்டினார்.
முனிவர் சொன்னது சரிதானே. கோபம்தானே பல குற்றங்களுக்குக் காரணமாக அமைந்து, நரகத்துக்கு வழியாக அமைகிறது!
சுப்புத்தாத்தா |