அதுக்காக, எல்லாம் அதுக்காக!
காலை 5:30. ஒரு நாளுமில்லாத திருநாளாக அவ்வளவு காலையிலேயே சுறுசுறுப்பானது கோவிந்தராஜன் வீடு. கோவிந்தராஜன் மனைவி ராதை மகன் கிருஷ்ணனையும் மகள் வைஷ்ணவியையும் எழுப்பியபடி சமையலறை நோக்கி ஓடினார். "மணி ஆயுடுத்து, எழுந்திரிங்கோ. சீக்கிரம் வேலையெல்லாம் முடிக்கணும். அது மதியம் 2:30 மணிக்கு வந்துடும். சீக்கரம்!"

"நான் இன்னிக்கி சீக்கிரம் போயிட்டு 2:30 மணிகுள்ள வரணும், தெரியுமோல்லியோ. இன்னும் காப்பிகூட போடலையா?" கோவிந்தராஜன் ராதையிடம் பாசம் பொழிந்தார்!!

"பால்காரன் 6 மணிக்குத்தான் வருவான்!" பதிலுக்குப் பாசம் பொழிந்தாள் ராதை.

"அவன் நாலரை மணிக்கே வந்துட்டான். அவனுக்கும் ரெண்டரை மணிகுள்ள எல்லா வேலையையும் முடிச்சிட்டு அது வரதுக்குள்ள ஆத்துக்குப் போக வேண்டாமா?" கோவிந்தராஜனின் தாயார் தகவல் சொன்னார்.

எதோ சொல்லவந்த ராதையை, முகம் கழுவி வந்த வைஷ்ணவி, "பாட்டி போரும்! இன்னிக்கி எல்லாரும் பிஸி, அது வரதுக்குள்ள எல்லா வேலையையும் முடிக்கணும். அதனால நீயும் அம்மாவும் 'நண்பேண்டா'ன்னு அப்பறமா இன்னொரு நாள் பாசத்தை பொழிங்சுகோங்க, இப்போ அப்பாவுக்கு ஆபீசுக்கு டிபன் ரெடி பண்ணுங்கோ" என்று திருவாய் மலர்ந்தாள்.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுதந்திரத் தியாகி தேசிகன் "ஏண்டா கோவிந்தா, வைஷ்ணவி 8 மணிக்குக் குறைஞ்சு எந்திரிக்க மாட்டா. இது என்ன என்னிக்கும் இல்லாத கூத்தா அஞ்சரை மணிக்கே சுறுசுறுப்பா இருக்கா. காலேஜ்ல எதாவது விசேஷமா?"

"அது இன்னிக்கு ரெண்டரைக்கு வருதோல்லியோ? அதாம்ப்பா" விடையளித்தார் மகன்.

"ஆமா!" அலுத்துக்கொண்டார் தேசிகன்

6:30 மணி. "தாத்தா இப்போ நீ அவசரமா குளிச்சு என்ன பண்ணப் போற?" காலேஜ் பக்கமே தலை வைக்காத கிருஷ்ணன், அவசரமாகக் குளியலறைக்குள் நுழைந்தான்.

"அதான் நாலு நாளா 24 மணி நேரமும் தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ் சேனல்ல மாத்தி மாத்தி அது எப்படி இருக்கும், நமக்கு என்ன பாதிப்பு வரும், நாம எப்படி தயாரா இருக்கணுன்னு ரிடயர் ஆனவாள வச்சிண்டு பேசியே கொல்ராளே! வேற நியூஸே இல்லியா இவாளுக்கு?" அலுத்துக்கொண்டார் சுதந்திரத் தியாகி. மற்றவர்கள் பம்பரமாகச் சுழ்ன்றனர்

7:30 மணி. "டிவில பிரைம் மினிஸ்டர் அதுபத்திப் பேசப் பேசறார். வாங்கோ" வாஞ்சையாக அழைத்தார் கோவிந்தராஜன்.

பிரதமர் அதுபற்றிப் பேசினார், மக்கள் அமைதி காக்க வேண்டினார்; அதன் முடிவு எப்படி இருந்தாலும் துணிவாக ஏற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

"செக்யூரிட்டிக்கு என்ன பண்ண போறம்?" சுதந்திரத் தியாகி.

"அதெல்லாம் 2 நாள் முன்னாடியே 'No Fly Zone' அறிவிச்சுட்டா. மிலிடரிய செக்யூரிட்டிக்காக அமிச்சிருக்கா. No problem" ராணுவ மந்திரிபோல் பதிலளித்தார் கோவிந்தராஜன்.

டிவியில் அதுபற்றி மீண்டும் கூடிப் பேச ஆரம்பித்தனர்.

8:30 மணி. கோவிந்தராஜன் அரைமனதுடன் டிவி முன்னிருந்து எழுந்து, வெந்ததைத் தின்றுவிட்டு அலுவல் செல்லத் தயாரானார். "டிரைவர், இன்னிக்கி அரைநாள்தான், வாங்க போலாம்" என்றார். சீறிச் சென்றது ஹோண்டா அக்கார்ட்.

கிருஷ்ணன் தன் நண்பன் ஜமாலை ரெண்டரை மணிக்கு அழைக்கப் புறப்பட்டான்.

9.30-13.30: மகளிர் அணி சமையல் அறையில் கூடிற்று.

"சமையல் மட்டும் போறாது. நொறுக்க எதாவது வேணும் - சிப்ஸ், முறுக்கு, பக்கோடா - எது வேணும்?" ராதை பரபரப்பானார்.

"அம்மா சித்தியும், மாமியும் வர்றா" வைஷ்ணவி செல்ஃபோனை அணைத்து குதூகலமானாள்.

"அவருக்கு கேப்பைக் கஞ்சி பண்ணி வச்சுருங்கோ" மாமியாரின் வாஞ்சை.

வீ ட்டு வேலை செய்யும் சாவித்திரி இன்று சீக்கிரமே வந்துவிட்டார். "இன்னிக்கு சாயந்தரம் வரமாட்டேன். அதனால துணி, பாத்திரம் எல்லாம் இப்போவே போட்டுருங்க", சாவித்திரிக்கும் ரெண்டரை மணிக்கு முன்பாக வீடு போய்ச் சேரவேண்டுமே!

கிருஷ்ணன் நண்பர்கள் ஜமால், விக்டர், அன்பு ஆகியோருடன் வந்து டி.வி. முன் அமர்ந்து அதுபற்றிப் பேச ஆரம்பித்தனர். என்ன நடக்கும், எப்படி இந்தியா சமாளிக்கப் போகிறது போன்று பல திசைகளில் பேச்சு போயிற்று.

கோவிந்தராஜன் 1 மணிக்கு அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்ததில், அவரைத் தவிர இன்னும் இரண்டு ஜீவன்கள் - அவர் எப்போ போவார் என வழிமேல் விழிவைத்துப் பார்த்து கொண்டிருந்தார்கள். "கிளம்புங்க" என அன்பாக அனுப்பிவிட்டு, அவசரமாக டிரைவரை அழைத்தார். "சீக்கிரம் கிளம்புங்க".

பொதுவாக ஒரு மணிநேரம் எடுக்கும் டிராபிக் இன்று 35 நிமிடம்தான். சாலைகளில் மயான அமைதி.

கோவிந்தராஜன் வீடு நண்பர்கள், சொந்தக்காரர்கள் என நிரம்பி வழிந்தது.

நீல ஜெர்சி அணிந்து அதற்குத் தயாரானார்கள் நண்பர்கள்.

மதியம் 14.15. தன் தமையன் மகன் 10 வயது கணேஷை அழைத்து "போய் தோப்புகரணம் போடுட்டு வா" என்றார். சந்தோஷமாக ஓடினான் கணேஷ்.

"எல்லாரும் அவரவர் இடத்தில் ஒக்கருங்கோ! எல்லோருக்கும் ஒரு ராசி இடம் உண்டு. அங்கே உக்காந்தாத்தான் அது வெற்றி தரும்" என ஒரு 'பகுத்தறிவு' சொற்பொழிவு ஆற்றினார்.

ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே.... பாட்டி பக்தியோடு ஜபம் செய்யத் தொடங்கினார்.

அது ஆரம்பமானது; 'அது'தான் இந்திய பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

"ஆஞ்சநேயா! ஜாகிர் கான் ஒடம்புல புகுந்துண்டு, ஒரு நாலு விக்கெட் எடுத்துடுப்பா" வேண்டுதல் பலமாக வைக்கப்பட்டது.

ஜாதி, மதம், மொழி பேதம் பாராமல் சுதந்திரத்திற்குப் பிறகு 'ஒரே இந்தியா'வாக ஒற்றுமையாக இந்தியர்களை இணைத்த கிரிக்கெட்டை மனதிற்குள் மெச்சிக்கொண்டார் தியாகி தாத்தா!

அகிலா,
நேபர்வில், இல்லினாய்ஸ்

© TamilOnline.com