ர.சு. நல்லபெருமாள்
முதுபெரும் எழுத்தாளரும், தமிழின் குறிப்பிடத்தக்க சில படைப்புகளை எழுதியவருமான ர.சு. நல்லபெருமாள் (81) ஏப்ரல் 21, 2011 அன்று காலமானார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்த அவர் ஒரு வழக்கறிஞர். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் பல சிறுகதை, நாவல்களை எழுதினார். குறிப்பாக பத்திரிகையில் தொடராக வெளிவந்த அவரது 'கல்லுக்குள் ஈரம்' நாவல் குறிப்பித்தக்க ஒன்று. 1966ல் கல்கி பொன்விழா ஆண்டில் அந்த நாவலுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. அந்த நாவலைப் படித்துத்தான் தான் போராளி ஆனதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அந்தக் கதையைத் தழுவியே கமல், 'ஹே ராம்' படத்தைத் தயாரித்ததாகவும் கூறப்பட்டதுண்டு. அவரது 'நம்பிக்கைகள்' நாவலுக்கு 1983ல் கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது கிடைத்தது. 1991ல் 'உணர்வுகள் உறங்குவதில்லை' என்ற நூலை எம்.ஏ. சிதம்பரம் அறக்கட்டளையினர் சிறந்த நூலாகத் தேர்வு செய்து பரிசு வழங்கினர். ஆன்மீக தத்துவங்கள் குறித்து ஆய்வு செய்து அவர் எழுதிய 'பிரும்ம ரகசியம்' குறிப்பிடத்தக்க ஒன்று. இதுதவிர 'தூங்கும் எரிமலைகள்', 'எண்ணங்கள் மாறலாம்', 'சங்கராபரணம்', 'பாரதம் வளர்ந்த கதை', 'இந்தியச் சிந்தனை மரபு', 'மாயமான்கள்', 'மயக்கங்கள்', 'மருக்கொழுந்து', 'மங்கை', 'திருடர்கள்', 'நம்பிக்கைகள்' போன்ற இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட நூல்களையும், பல சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியிருக்கிறார்.



© TamilOnline.com