சண்டையைச் சங்கீதமாக மாற்றும் மனம் வேண்டும்
அன்புள்ள சிநேகிதியே,

எனக்குத் திருமணமாகி 9 வருடங்கள் ஆகின்றன. எனக்கு ஒரே தம்பி. அவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவன் பெங்களூரில் இருக்கிறான். எனது பெற்றோர் கோவையில் இருக்கின்றனர், தனியாக. எனக்குத் திருமணம் ஆகுமுன்பே என் பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டு வாக்குவாதம் செய்வர். இப்பொழுதும் தனிமையில் இருவரும் மிக மோசமாகச் சண்டை போட்டுக் கொள்கின்றனர். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலமுறை அவர்களிடம் பேசியும் அவர்கள் மாறுவதாக இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர். எங்கள் குடும்பத்தில் உறவினர்கள் அவ்வளவு நெருக்கம் இல்லை. என் அப்பா யாரையும் நம்புவதில்லை, கடவுளைத் தவிர. ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களுக்குக் கூட மனஸ்தாபம் வருகிறது. ஒருவர், மற்றொருவர் மாறப்போவதில்லை என நினைக்கின்றனர். பலமுறை அவர்கள் பேசாமல் இருந்திருக்கின்றனர். பேசிக்கொண்டாலும் கடுமையான வார்த்தைகள்தாம். என்னிடமும், தம்பியிடமும் இதுபற்றித் தற்செயலாகச் சொல்வார்கள். என் அம்மா பலமுறை தொலைபேசியில் அழுவார். அப்பாவும் தன் வேதனையைச் சொல்வார். அப்பா இதய நோயாளி. அம்மாவுக்கும் ரத்த அழுத்தம் இருக்கிறது. எனக்கு அவர்களைப் பற்றி மிகவும் கவலையாக உள்ளது. இங்கே வரச் சொன்னாலும் அவர்கள் வருவதாக இல்லை. அம்மாவுக்குக் கால்வலி இருப்பதால் அவர் அவ்வளவு வெளியே செல்ல முடிவதில்லை. வீட்டிற்குள்ளேயே இருப்பதால் அவர் இன்னும் அதிகமாகக் கவலைப்படுகிறார். எனக்காகவும், என் தம்பிக்காகவும்தான் வாழ்கிறேன் என்கிறார். அம்மா, தயவு செய்து எனக்கு உதவுங்கள். உங்களது அறிவுரை எனக்கு மன நிம்மதி கொடுக்கும். I feel so helpless!

இப்படிக்கு

அன்பு மகள்
----------

அன்புள்ள சிநேகிதியே,

இந்தப் பிரச்சனை ஒவ்வொரு குடும்பத்தினருடைய தனிச் சொத்தாக இருக்கிறது. சண்டை போடாத தம்பதியினரை நான் இதுவரை பார்த்ததில்லை. ஆனாலும், அதில் படித்தரங்கள் உள்ளன. உங்கள் பெற்றோருக்குச் சண்டைதான் வாழும் வழியாக இருந்தது. இருக்கிறது. இன்னும் தொடரும். இது ஒரு தீராத வியாதி. வலி இருந்து கொண்டே, வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கும். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். அவர்கள் மாற மாட்டார்கள். அவர்களுக்கு எப்படி மாற வேண்டும் என்று தெரியாது. இந்த வயதில் முடியவும் போவதில்லை. சில கணவன்-மனைவி உறவு பாலும், தண்ணீரும், பழ ரசமும், தண்ணீரும் போல ஒன்றாகக் கலந்து விடும். சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், சமரசமும் சேர்ந்து கொள்ளும். சிலருடைய உறவுமுறை எண்ணெயும் தண்ணீரும் போல. வெளிப்படையாகச் சச்சரவுகள் வெளியே தெரியும். பேச்சுரிமை வளரும்போது சண்டையும் பிறப்புரிமையாகப் போய்விடுகிறது. இங்கே நாம் செய்யக் கூடியது பெரிதாக ஒன்றும் இல்லை. இருவருமே உங்களுடைய அன்புக்குப் பாத்திரப்பட்ட பெற்றோர்களாக இருக்கும்போது, ஆதரவாக அவர்களுடைய அங்கலாய்ப்பைக் கேளுங்கள். சண்டை போடுவதின் அர்த்தமே தங்களுடைய நியாயத்தைப் பிறர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கம்தான்.

ஏன் மனிதர்கள் சண்டை போடுகிறார்கள்? அது ஒரு உரிமைப் போராட்டம். இயலாமை, இல்லாமை, பொல்லாமை, பொறாமை, அறியாமை என்று எத்தனையோ காரணங்களால் சண்டை. ஒருவர் 'சுருக்'கென்று பேசும்போது, வார்த்தைகளால் 'நறுக்'கென்று கேட்கத்தான் மனம் விழைகிறது. புண்பட்ட மனதிற்கு, தனக்குத்தானே மருந்து போட்டுக்கொள்ளத் தெரிவதில்லை. பிறரிடம் கெஞ்சுகிறது. 'நான் அடிபட்டுப் போயிருக்கிறேன். எனக்கு முதலுதவி செய்' என்று கேட்கிறது. பண்பட்ட மனதிற்கு சண்டை போட்டாலும், அதைச் சங்கீதமாக மாற்றும் வழி தெரிகிறது. அதனால்தான் எவ்வளவோ கருத்து வித்தியாசங்கள் இருந்தாலும், பல பேருக்குத் தங்களுடைய உறவைக் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.

"நீங்கள் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்" என்று எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும், இது உங்கள் மன நிம்மதிக்கு உதவப் போவதில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்கள் சொல்வதைக் கேட்க ஒரு காது, அவர்களுக்கு ஆதரவாக நாலு சொற்கள். நீங்கள் அழகாகச் செய்துவிடலாம். அறிவுரை வழங்குவதில் அர்த்தம் இல்லை. பரிந்துரைப்பதும் பார்த்துத்தான் செய்ய வேண்டும். அம்மாவுடன் அடிக்கடி பேசுங்கள். அப்பாவுடன் அடிக்கடி பேசுங்கள். அவர்களுடைய நியாயத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அது எடுபடாததால்தான் இந்தப் பகுதிக்கு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்த ஒரு உரையாடலை எழுதுகிறேன்.

"ஹலோ, அம்மா, நாந்தாம்மா. நல்லாயிருக்கீங்களா?"

"எனக்கு என்ன குறை? கல்லுகுண்டா இருக்கேன். எப்பத்தான் உங்க அப்பாகிட்டேர்ந்து எனக்கு விமோசனம் கிடைக்குமோ தெரியலை."

"மறுபடியும் சண்டையா? ஏம்மா சின்னக் குழந்தை மாதிரி சண்டை போட்டுக்கறீங்க? அப்பா உடம்பு எப்படியிருக்கு? டாக்டர் என்ன சொன்னார், போன வாரம் செக்கப் போனபோது?"

"டாக்டர் கொஞ்சம் உப்பு, எண்ணெயெல்லாம் குறைச்சு சாப்பிடறீங்களான்னு கேட்டாரு. உங்கப்பாவுக்குத்தான் வாயைக் கட்ட முடியாதே. அந்த உண்மையை டாக்டர்கிட்டே சொல்லிட்டேன்னு, 'நீ யாரு என்னை அவமானப்படுத்தறதுக்கு'ன்னு கேட்குறார். 'நான் யாரு'ன்னு என்னைக் கட்டின புருஷன் கேட்கறார். எதுக்கு இவரோடு குடும்பம் நடத்தணும்? ஏன்தான் பொழுது விடியுதோன்னு இருக்கு."

"அப்பா எப்பவுமே அப்படித்தானே. சரி, உங்க முட்டி வலி எப்படி இருக்கு?"

"ராத்திரியெல்லாம் தூக்கம் இல்லே. வலி உசுரு போறது. உங்க அப்பாவுக்கு இதெல்லாம் தெரிஞ்சாத்தானே! காலையிலே 'பால்' பெல் அடிச்சி நான் திறக்காமே கொஞ்சம் தூங்கிட்டேன். அந்த 'பால் பாக்கெட்டை' யாரோ மிதிச்சு, எல்லாம் வழிஞ்சு, இன்னைக்கு 'காபி' சாப்பிட முடியல. அதுக்கு ஒரு கலாட்டா. 40 வருஷம் இப்படியே கழிச்சாச்சு. சரி, என் குறை இருக்கட்டும். நீ எப்படி இருக்கே? குழந்தைங்க எப்படி இருக்காங்க? நீ எப்ப வரே? குழந்தைங்களை பார்க்காமயே நான் போயிடுவேன் போல இருக்கு."

"ஏம்மா எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அந்த 'Skype' செட் அப் செய்யச் சொல்லி"

"உங்கப்பா கிட்டே எத்தனை தடவை சொல்றது? அந்தப் பட்டறையில உட்கார்ந்துண்டு தட்டு, தட்டுன்னு பழையப் பலகையைத் தட்டிகிட்டு இருக்கார், பெரிய கார்பெண்டர் மாதிரி. முந்தா நாள் கிறுகிறுன்னு வந்தது. ஹால்லே வந்து பார்த்தா ஆளைக் காணோம்."

"சரிம்மா. அப்பாவைக் கூப்பிடு"

(Speaker phone off)

(இந்த உரையாடல் 2 வருஷத்திற்கு முன்னால் ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்றபோது எப்படி சதா தன் அம்மா, அப்பாவைக் குறை சொல்கிறாள் என்று ஸ்பீக்கர் போனில் போட்டு என்னையும் கேட்கச் சொன்னாள். உரையாடல் நிறைய இருக்கிறது. ஒரு சாம்பிளுக்கு இதை எழுதினேன்.)

பெற்றோர்கள் என்றாலே (அதாவது இங்கே புலம்பெயர்ந்து படிக்க, வேலைக்காக வந்திருப்பவர்கள்) வயதானவர்கள்தான். பெரும்பாலானவர்கள் 3 விஷயத்தைப் பற்றிப் பேசுவார்கள். 1) தங்கள் வலி, வேதனை, வியாதி; 2) மனக்குறை; 3) உறவினர் பற்றிய செய்திக் குறிப்புகள்.

'ஜாலியாக' பெண், பிள்ளை கூப்பிட்டால் நன்றாகப் பேசிக்கொண்டு, எல்லா விஷயங்களையும் அரசியல், சினிமா, விளையாட்டு என்று அலசிக் கொண்டு வாழ்க்கையை ரசிக்கும் வயதானவர்களும் உண்டு. ஆனால், அவர்களை இந்தப் பகுதியில் நான் சேர்த்துக் கொள்ளவில்லை.

அடிக்கடி போன் செய்து அவர்களது உடல்நலத்தை மானிடர் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த உடல்நலத்தைப் பற்றியே பேசாமல், யாருக்கு வேறு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் பற்றி (உங்கள் அப்பாவிற்கு கிரிக்கெட், அம்மாவுக்கு கோயில் அல்லது கச்சேரி) கேள்விகள் கேட்டு, கொஞ்சம் பேச்சில் உற்சாகத்தை வரவழைப்பது, ஒரு நல்ல strategy.

வாழ்த்துகள்

இப்படிக்கு
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com