ஷாந்தி - ஓர் அமைதிப் பயணம்
ஷாந்தி - ஓர் அமைதிப் பயணம் என்னும் மாபெரும் படைப்பு மீண்டும் அரங்கேறுகிறது, இம்முறை பிரசித்தி பெற்ற ஆர்னாஃப் கலை மையத்தில்.

மார்ச் 25, 2006 அன்று சின்சின்னாட்டி கலைச் சங்கத்தின் 2005-2006 நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக ஷாந்தி மேடையேறுகிறது. இதை வழங்கும் 150 பேர் கொண்ட இசைக்குழுவில் உள்ளூர்க் கலைஞர்களுடன் சின்சின்னாட்டியில் உள்ள 85 இந்தியர்கள் இணைந்து செயல்படுவர்.

உலக அமைதி என்ற செய்தியுடன் 5000 ஆண்டு தொன்மையான இந்திய கலாசாரத்துடன் பின்னி இணைக்கப்பட்ட வரலாற்றை இந்நிகழ்ச்சி பேசுகிறது.

2004-ல் ஷாந்தி சின்சின்னாட்டி பல்கலைக்கழகத்தில் நடந்தபோது அபார வெற்றி பெற்றது. பல்கலைக் கழகத்தின் துணைத்தலைவர் டாக்டர். லிவிங்ஸ்டன் அவர்கள் "உலகத்தில் அமைதியை முன் நகர்த்தும் ஷாந்தியின் குறிக்கோளில் எனக்கும் நம்பிக்கை உண்டு. இந்த நிகழ்ச்சியைப் பார்த்து அனுபவித்தபின் மாறுபட்ட மனநிலையில் மக்கள் திரும்பிச் செல்கின்றனர்" என்று கூறினார்.

மேற்கத்திய மற்றும் இந்திய வாத்தியக் குழுக்கள் பாரம்பரிய மற்றும் பரத நடனத்துடன் இணைந்து வழங்கும் ஷாந்தி பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புக் கொண்டது. இசையமைப்பாளரும் இசையாசிரியருமான கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் இதனை உருவாக்கி இயக்கியுள்ளார். இதில் இந்திய மற்றும் மேற்கத்திய இசைக்குழுக்களின் நடத்துபவர் பிரபல காதரின் ரோமா அவர்கள்.

ஷாந்தி பற்றி பிரபல எழுத்தாளர் சுஜாதா ஆனந்தவிகடனில் "மேற்கத்திய நாக்குகளுக்கும் வயலின்களுக்கும் கல்யாணியையும் பந்துவராளியையும் staff notational-ல் எழுதிக்கொடுத்து, சம்ஸ்கிருத சுலோகங்களைக் கொயர் சங்கீதத்தின் பிசகாத கட்டுப்பாட்டுடன் பாட வைத்திருப்பது ஆச்சர்யமாக இருந்தது. வயலின்களும் சிதாரும் பரதநாட்டியமும் இயைந்துபோக, ஒரு மல்டி- மீடியா விருந்தில் கீதை சுலோகங்களைக் கேட்பது புதிய அனுபவமாக அவர்களுக்கும் இருந்திருக்கிறது. மேசன் நகர மேயர் மற்றும் ஒஹையோ மாநில கவர்னர் போன்ற பலரும் உண்மையான பாராட்டுக் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் இந்தப் பெயரையும் இவரது அபார இசையையும் சீக்கிரமே தமிழகத்தில் கேட்கப்போகிறோம்" என்று கூறியுள்ளார்.

தமிழில்: சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com