தென்றல் பேசுகிறது...
ஏப்ரல் இதழ் 'அரபு நாடுகளில் ஏற்பட்ட மல்லிகைப் புரட்சியின் மணம் இந்தியாவிலும் வீசுமா?' என்ற வரியைத் தாங்கி வாசகர்களைத் தொட்ட அதே நேரத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தரில் அமைதிப் புரட்சிக்கான வித்து ஒன்ற அன்னா ஹஸாரே என்ற காந்தியவாதி தூவிக்கொண்டிருந்தார். "வலு மிகுந்த அரசியல்வாதிகளும் இடைத்தரகர்களும் முதலாளிகளும் கைகோத்து ஊழல் என்கிற மதயானைக் கூட்டத்தை மக்கள்மீது ஏவி துவம்சம் செய்கின்றனரே, தனிமனிதனான நான் என்ன செய்யமுடியும்!" என்று திகைத்துக் கொண்டிருந்த போது அன்னா ஹஸாரேவின் அழைப்பு அவர்களுக்கு புதிய தெம்பைக் கொடுத்தது. மாநிலந்தோறும் மக்கள் கூடிக் குரல் எழுப்பினர். அரசு ஆடிப்போய் விட்டது என்கிற பிரமைகூட ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது. 'புதிய மருந்துகளைவிட நோய்கள் விரைந்து முன்னேறுகின்றன' என்று சொல்வார்கள். அதுபோல, இந்தப் போராட்டம் மக்களுக்கு மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியதே தவிர, இதற்கெல்லாம் லஞ்சம் அசைந்து கொடுக்குமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். கண்கட்டு வித்தைகளில் கைதேர்ந்த அரசியல்வாதிகள் தகுந்த வார்த்தைகளைத் தக்க காலத்தில் சொல்லி, தமது சட்டத்துக்குப் புறம்பான சலுகைகளைத் தக்க வைத்துக்கொள்வதில் வல்லவர்களாயிற்றே. பார்க்கலாம்.

*****


அன்னா ஹஸாரே செய்தது காலத்தின் கட்டாயம் என்ற போதும், தனது செயல்பாட்டுக்குள் அரசியல்வாதிகளை நுழைய விடமாட்டேன் என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்தார். நியாயம்தான். ஆனாலும், தானே தலைவன், தானே தொண்டன், தானே கட்சி என்று இருக்கும் சுப்பிரமணியம் சுவாமி என்கிற அரசியல்வாதி இல்லாவிட்டால், வரலாறு காணாத இந்த ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை. "மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது, எமது மேற்பார்வையிலேயே குற்றங்கள் ஆராயப்படட்டும்" என்று உச்சநீதி மன்றம் கூறும் அளவுக்கு வந்திருக்காது. அவரது பல ஆண்டு இடைவிடாத உழைப்பின் பலனாகத்தான் இன்றைக்கு இவை மக்களுக்குத் தெரிய வந்திருக்கின்றன. ஆனால், அன்னா ஹஸாரேவுக்கு இதை ஒப்புக்கொள்ளக் கூட மனம் இல்லை. தானே தனியொரு புரட்சி வீரர் போல நாடகமிட்டார். அவருடன் இருக்கும் கேஜரிவால், கிரண் பேடி ஆகியோருக்கும் அந்தப் பெருந்தன்மை இல்லை என்பது இந்திய அரசியலின் மற்றொரு நெருடலான பக்கம். பத்திரிகைகளும் மக்களும் அசட்டையாக இருந்தாலும், கேலி பேசினாலும், சுப்பிரமணியம் சுவாமி சொல்வதெல்லாம் பொய் என்று வண்ணம் தீட்டப் பார்த்தாலும் அவர் தனது முயற்சிகளை விடவில்லை. அவரது பணி அன்னா ஹஸாரேயின் அறப்போராட்டத்துக்கு எந்த வகையிலும் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல.

*****


அமெரிக்காவின் சில மாநிலங்களில் வீசிய புயலும் அதனால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதமும் மிகுந்த வருத்தம் தருவன. ஜப்பான் சுனாமியை அடுத்து ஏற்பட்டுள்ள கதிரியக்கக் கசிவும் அபாய மணியை ஒலித்துள்ளது. லிபியாவில் கடாஃபியின் குடும்பத்தினர் நேட்டோ தாக்குதலில் மரணம், பாகிஸ்தானில் அல்-கைதா நிறுவனர் ஒசாமா பின் லாடனின் மரணம் என்று பல நிகழ்வுகள் சென்ற சில வாரங்களில் நடந்துவிட்டன. பதினெட்டு அடி உயர மதில் சூழ்ந்த ஒரு பெரிய மாளிகையில், ராணுவப் பகுதிக்கு வெகு அருகில், பின் லாடன் இருந்தது தனக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறுவதற்கும், இத்தனை லட்சம் ஊழலை என் அமைச்சரவை மந்திரிகளே செய்தது எனக்குத் தெரியாது என்று இந்தியப் பிரதமர் கூறுவதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்று யாராவது சொன்னால் அவர்களைக் குறை சொல்ல முடியாது.

*****


அன்பர்களின் துதியையும் அல்லாதாரின் ஏளனத்தையும் வெகுவாகப் பெற்ற மற்றொருவர் புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயி பாபா. அவர் விட்டுச் சென்ற சொத்துக்கள் என்று மீடியா அலறுகிற கல்லூரி, மருத்துவ மனை இன்ன பிற சேவைகள் என்று எல்லாமே மேலும் பல கோடி ரூபாய் செலவு வைப்பவைதாம், காரணம் அவற்றின் சேவை இலவசமாக வழங்கப்படுவதால். வெறும் ரியல் எஸ்டேட் கணக்குப் பார்த்துப் பயனில்லை. அவரது மகாசமாதி மிகப் பெரிதாகப் பேசப்பட்டது. அவரை இந்த இதழ் விரிவாக நினைவுகூருகிறது. வித்தியாசமான அனுபவங்களால் நம்மைக் கவர்ந்த நரசய்யா அவர்கள் நேர்காணலின் இறுதிப் பகுதி இந்த இதழில் வந்துள்ளது. ஹூஸ்டனில் தமிழ் நாடக முன்னோடிகளில் ஒருவரான டாக்டர். சாரநாதன் அவர்களது மேடைப் பிரவேசத்தின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி அவரோடான நேர்காணலும் இந்த இதழில் இடம்பெறுகிறது. சி.கே. கரியாலியின் 'நினைவலைகள்' தொடர் முற்றுப் பெறுகிறது. எதைச் சொல்ல, எதை விட! நீங்களே படித்துப் பாருங்கள்.

வாசகர்களுக்கு மே தின, அன்னையர் தின வாழ்த்துக்கள்!


மே 2011

© TamilOnline.com