ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்: 'தாண்டவ்'
மார்ச் 12, 2011 அன்று மிச்சிகன் மாநிலத்தின் ஓக் பார்க் நகரைச்சேர்ந்த திருமதி சுதா சந்திரசேகர் நடத்திவரும் 'ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்' பரதநாட்டியப் பள்ளியின் ட்ராய், கேன்டன், ஆன் ஆர்பர், கலாக்ஷேத்ரா பிரிவுகளின் 110 மாணவியர் பங்குபெற்ற 'தாண்டவ்' என்ற மாபெரும் நடன நிகழ்ச்சி, மிச்சிகன் ட்ராய் நகரில் அமைந்த பாரதீய கோவிலில் சிறப்பாக நடந்தது.

இந்த நடன நிகழ்ச்சி மகா சிவராத்திரியை முன்னிட்டு அமைக்கப்பட்டதால், சிவபெருமான் மேல் இயற்றப்பட்ட பாடல்களுக்குச் சிறப்பாக நாட்டியம் ஆடினர். 15 ஆண்டுகளாக நடந்துவரும் 'தாண்டவ்' நாட்டிய நிகழ்ச்சி, இம்முறை ஏழு மணி நேரத்தில் 32 நடனங்கள் வழங்கிய குழந்தைகளின் ஆர்வம் குறிப்பிடத்தக்கது. பரத நாட்டிய நிகழ்ச்சியில் பொதுவாக கண்டு ரசிக்கப்படும் புஷ்பாஞ்சலி, அல்லாரிப்பு, கவுத்துவம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா போன்ற உருப்படிகள் பற்பல ராகங்களிலும் பற்பல தாளங்களிலும் இடம் பெற்றன.

பள்ளியின் மூத்த மாணவி கிருத்திகா ராஜ்குமார் அருமையாக ஆடிய 'சுவாமி நான் உந்தன் அடிமை' என்ற நாட்டகுறிஞ்சி வர்ணம், மனக்கண் முன் சிவனையும், நந்தனாரையும் கொண்டு நிறுத்தியது. மற்றொரு வர்ணமான 'ஆலமர் ஞான தீபமே' என்னும் ஸ்ரீராக வர்ணத்தை ஆன் ஆர்பர் சகோதரிகள் நிகிலா மற்றும் ஷாலினி வெகு திறமையாக ஆடி, மார்கண்டேயன் யமனை வென்ற கதையை விவரித்தனர். இதைத் தவிர, கோபாலகிருஷ்ண பாரதியின் 'ஆடும் சிதம்பரமோ' ஆடிய சோனாலி ரெட்டி, ராவணனின் சிவதாண்டவ ஸ்தோத்திரம் ஆடிய நிதி ஸ்ரீபாதா, முத்துஸ்வாமி தீஷிதரின் 'ஆனந்த நடன பிரகாசம்' ஆடிய ஸ்னேஹா மரிபுடி, ஹிந்தி பதமான 'சீஷ கங்க அர்தங்க பார்வதி' ஆடிய அனன்யா வாசுதேவன், பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதியின் 'போ சம்போ' ஆடிய ஸ்ரீகரி தாடேபள்ளி ஆகியோரின் தனி நாட்டியம் ரசிகர்களைக் கவர்ந்தன.

கூட்டு நடனங்களில் ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்னம், மாரிமுத்து பிள்ளையின் 'காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே', பாபநாசம் சிவனின் 'இடது பதம் தூக்கி ஆடும்', அச்சுததாசரின் 'சதானந்த தாண்டவம்', லால்குடி ஜெயராமனின் 'ஸ்ரீகர சுகுணாகர', கோபாலகிருஷ்ண பாரதியின் 'நடனம் ஆடினார்', கமாஸ் ராக ஸ்வர ஜதி 'சம்பசிவா எனவே', சாரங்க ராகத்தில் 'ஆடினதெப்படியோ', நீலகண்ட சிவனின் 'ஆனந்த நடமாடுவார்' ஆகியவற்றுக்கு ஆடிய முன்னிலை மாணவியர் தமது நாட்டியப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

அர்தநாரீஸ்வரரைப்போற்றும் ஸ்தோத்திரத்தில் சிவன் ரூபத்தில் தாண்டவ நடன பாணியில் டீனா சம்மதரும், உமை ரூபத்தில் லாஸ்ய நடன பாணியில் ஆர்த்தி சூர்யா இருவரின் மிகப் பிரமாதமான ஒத்திசைந்த நடனம் வெகு அழகு. அக்ஷயா ராஜகுமார், ஸ்னேஹா மரிபுடி ஆடிய லதாங்கி ராக 'அம்பல நடமிடும் பாதன்' என்னும் பதம் காணவும் கேட்கவும் பரம சுகம்.

இந்த நிகழ்ச்சிக்காக என்றே பாடகர் கோபால் வெங்கட்ராமன் எழுதி இசையமைத்துப் பாடி, சுதா கன கச்சிதமாக நாட்டிய வடிவமைத்திருந்த சிவரஞ்சனி ராக 'தத்தித்தோம் நம்' என்னும் சிவ தாண்டவ பதமும், ஹிந்தோள ராகத்தில் அமைந்த கண்ட நடை தில்லானாவும் ஆடிய கிருத்திகா ராஜ்குமார், அக்ஷயா ராஜ்குமார், ஸ்னேஹா மரிபுடி, ஸ்ரீகரி தாடேபள்ளி, அமிகா நந்தி ஆகியவர்களின் நடனம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

குரு சுதா மும்பையின் பிரபலமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய கலா மந்திர் நாட்டியப் பள்ளியில் பயின்றவர். சுமார் 45 ஆண்டுகளாக கனடாவிலும் அமெரிக்காவிலும் நாட்டியம் பயில்விக்கிறார். இதுவரை தமது நாட்டியப் பள்ளியின் மூலம் 75 அரங்கேற்றங்களை நடத்தி இருக்கிறார். கிளீவ்லாந்து தியாகராஜா ஆராதனை வழங்கிய நிருத்ய சேவா மணி, நாட்டிய வேதா பாரதி, நிருத்ய ஸ்வர்ண பூஷண் போன்ற பட்டங்களைப் பெற்றிருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சி நடந்தது ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டியப் பள்ளியின் பிதாமகர் குரு திருவிடைமருதூர் குப்பையா பிள்ளை அவர்களின் 125வது ஆண்டு நிறைவு தினமாகும்.

சுதாவின் நட்டுவாங்கமும் வாய்ப்பாட்டும், மகள் வித்யா சந்திரசேகரின் நிகழ்ச்சித் தொகுப்பும், நட்டுவாங்கமும் பாட்டும், கோபால் வெங்கட்ராமனின் வாய்ப்பாட்டும், மிருதங்கத்தில் ஜெயாசிங்கமும், வயலினில் அக்ஷயா ராஜ்குமாரும், புல்லாங்குழலில் அனிருத் ஸ்ரீதரும் தக்க துணையாகவும் பக்க பலமாகவும் திகழ்ந்தனர்.

© TamilOnline.com