வரலாறு தெரியாமல் இருப்பதே நல்லது
சில நேரங்களில் வரலாறு தெரியாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் வரலாறு தெரிந்தால் நாம் யாரைத் தலைவராகக் கருதிக் கொண்டிருக்கிறோமோ, அவரையே நாம் மாறாகக் கருத வேண்டியிருக்கும். அண்ணாதுரை மறைவிற்கு பிறகு ஒரு வாரம் துக்கம் கொண்டாடத் தீர்மானித்தோம். அண்ணாதுரை இறந்தது 3-ம் தேதி. ஆனால், கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றது 9-ம் தேதி. ஏழு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கக்கூட அவர் தயாராக இல்லை. ஆறாவது நாளே பொறுப்பேற்றுக் கொண்ட வரலாறு நமக்கு தெரியாமல் இருப்பதுதானே நல்லது''.

பண்ருட்டி ராமச்சந்திரன், தேசிய முற்போக்கு தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில்பேசியது...

***


தோனி தனது தலைமுடியின் நீளத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மைதான அரங்கில் ரசிகர்கள் காட்டிய வண்ணம் இருந்தனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தோனிக்கு இப் போதுள்ள சிகையலங்காரமே அழகாக இருக்கிறது. அவருக்கு கம்பீரத்தையும் கொடுக்கிறது.

அதிபர் முஷாரப், லாகூரில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவில்...

***


ஆயிரம் கண்களும் ஆயிரம் கைகளும் கொண்டவராகக் கடவுளை இந்து மதம் வர்ணிக்கிறது. ஆனால் இதயம் ஒன்றுதான். அதேபோல இந்த உலகத்தில் ஆயிரமாயிரம் மதங்களும் நம்பிக்கைகளும் இருந்தாலும் மனிதகுலம் ஒரே இதயத்துடன் அன்பினால் இணையவேண்டும்.

தொழுதகு விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள், பேஜாவர் மடம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் 'வாழும் கலை' அமைப்பின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில்...

***


பெண்களை ஏன் எப்பவும் கேவலமாக நினைக்கணும்? மனுஷன் உலகத்தில் வர்றான் என்றால் அதற்குக் காரணம் பெண்தானே. கடவுளுக்கு அப்புறம் தாய் தானே! தகப்பன் அடுத்துத் தானே வர்றான். பெண்கள் இதுமாதிரி படுகிற கஷ்டத்திற்கு உலகத்திலேயே அவங்கதான் அதிகபட்ச மான அன்பும் அக்கறையும் பெறுவது மாதிரி அமைந்திருக்கணும். ஆனால், ஏன் கிடைக்க வில்லை? நான் இன்னிக்கும் சாதித்தது எல்லாம் என் மேல் வைச்ச நம்பிக்கை யால்தான். I believe myself.

நடிகை குஷ்பு, வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்...

***


முதன் முதலில் சென்னைக்கு வந்தபோது கடைசிவரை பெயிண்டராக இருந்து சாகணும் என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால் அதைத் தவிர்த்து திரைத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தாயிற்று. இந்தியாவில் ஓவியர்களுக்கு மதிப்பில்லை. இன்னொரு ஜென்மம் இருந்தால் வெளிநாட்டில் ஓவியராகப் பிறக்க ஆசைப்படுகிறேன். முழுநேர ஓவியனாகப் பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் இன்னும் உள்ளது.

நடிகர் சிவகுமார், ஓவியர் கோபுலுவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில்...

***


விருது என்பது நிச்சயமாகச் சராசரி மனிதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த வகையில் கலைமாமணி விருது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுத்துள்ளது. விருது பெறுவதால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், அவர் ஞானியாகத்தான் இருக்க வேண்டும். நான் ஞானி அல்லன். கலைமாமணி விருது பற்றி அறிந்ததும் என் உள்மனது பெருமை கொண்டது. இத்தகைய மகிழ்ச்சியையும் பெருமையையும் யாராலும் மறைக்க இயலாது.

தென்கச்சி கோ. சுவாமிநாதன், பத்திரிகையாளர்களிடம்...

***


நல்ல கவிதைகளைப் படைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். கையெழுத்து நன்றாக இல்லை என்று பயந்து, இதுவரை கவிதை எழுதமால் இருந்து வந்தேன். நீல. பத்மநாபன் குறித்த குறும்படத்தைப் பார்த்த பிறகு அந்த அச்சம் தீர்ந்து விட்டது. இருப்பினும் லண்டன் குண்டு வெடிப்பு குறித்து அண்மையில் நாளிதழ் ஒன்றில் நான் எழுதிய கவிதையை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளி யிட்டவர் நீல. பத்மநாபன்.
நல்ல படைப்புகளை அளித்தவர்கள் வறுமை மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பின்னர், அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைப்பதும், விழா நடத்துவதும் இங்கு வழக்கமாக உள்ளது. இதனால் கடுமையாக உழைத்துப் பாடுபட்ட படைப் பாளர்களுக்கு எவ்விதப் பயனும் கிடைக்கப் போவதில்லை. சிறந்த படைப்புகளை அளித்த எழுத்தாளர்கள் வாழும்போது அரசும் அமைப்புகளும் கண்டு கொள்வதில்லை.

நடிகர் கமல்ஹாசன், சாகித்ய அகாதெமியின் நிகழ்ச்சியில் பேசியது...

***


உள்கட்சிப் பூசல் இல்லாமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் சோனியா காந்தியின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிச்சயமாகப் பூர்த்தி செய்வேன். அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவேன். உள் கட்சிப் பூசல் இல்லாத நிலையைத் தமிழக காங்கிரஸில் உருவாக்குவேன்.

எம். கிருஷ்ணசாமி, தமிழக காங்கிரசின் புதிய தலைவர், பத்திரிகையாளர்களிடம்...

கேடிஸ்ரீ

© TamilOnline.com