பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திருப்பதிகள் திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மொத்தம் 108. திவ்ய தேசங்களில் 62வதாகவும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப் பெற்றதாகவும், மஹாவிஷ்ணு வராக அவதாரம் கொண்ட தலமாகவும் விளங்குவது திருவிடந்தை. சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது இத்தலம். தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22ல் இது திருமணப் பிரார்த்தனைத் தலம். தென்மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் செங்கல்பட்டுவரை வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக திருவிடந்தையை அடையலாம்.
ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆதிவராகப் பெருமாளாக அகிலவல்லித் தாயாருடன் ஆறரை அடி உயரத்தில் இங்கு இறைவன் காட்சி அளிக்கிறார். வராகபுரி, நித்யகல்யாணபுரி, ஸ்ரீபுரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு நித்யமும் கல்யாணம் நடப்பதால் நித்யகல்யாணபுரி, வராகமூர்த்தி சேவை சாதிப்பதால் வராகபுரி, கல்வெட்டுக்களில் அசுரகுலகாலநல்லூர், வாமகவீபுரி எனவும் அழைக்கப்படுகிறது. எந்தை என்றால் எம்தந்தை எனப்பொருள். எம் தந்தையாகிய பெருமாள் திருவை (இலக்குமியை) இடப்பாகம் கொண்டிருப்பதால் திரு விட வெந்தை என அழைக்கப்பட்டு பின்னர் மருவித் திருவிடந்தை ஆகிவிட்டது.
கல்யாண தீர்த்தம், வராக தீர்த்தம், ரங்கநாதர் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களைக் கொண்டது இத்தலம். சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடிப் பெருமாளை வணங்கினால் பாவங்கள் அழியும். மாசியில் வணங்க மோட்சம். மார்கழியில் ரங்கநாதர் தீர்த்தத்தில் நின்ற பெருமாளை வணங்க நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
முன்னொரு காலத்தில் மேகநாதன் என்ற அசுரனின் மகனான பலி நீதிமானாக அரசாட்சி செய்தபோது மாலி, மால்யவான், சுமாலி என்ற மூன்று அசுரகள் தேவர்களுடன் போரிட பலியை அழைத்தனர். அதற்கு பலி மறுத்துவிட்டார். அவர்கள் தேவர்களை எதிர்த்துப் போரிட்டனர். பின் போரில் தோற்று பலியிடம் சரணடைந்தனர். பலி தேவர்களுடன் போரிட்டு வென்றான். அந்தப் பாபம் நீங்க வராக நதிக்கரையில் அவன் கடுந்தவம் புரிந்தான். அவன் தவம் கண்டு மகிழ்ந்த பெருமாள், அக்குளத்திலிருந்து வராக மூர்த்தியாகத் தோன்றி அவனை ரட்சித்ததாகப் புராணம் கூறுகிறது. எனவே கோயிலின் வடக்கே உள்ள வராக தீர்த்தம் உப்புத்திக் குளம் (உற்பத்திக் குளம்) என இன்றளவும் அழைக்கப்படுகிறது.
சம்புத் தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில் தவம் செய்து வந்த 'குனி' என்னும் முனிவருக்கு கன்னிகை ஒருத்தி பணிவிடை செய்துவந்தாள். முனிவர் வீடுபேறு எய்தினார். கன்னிகை அம்முனிவரைப் பின்பற்றித் தானும் கடுந்தவம் இயற்றினாள். ஒருநாள் நாரதர் அவள்முன் தோன்றி, நீ திருமணம் செய்து கொள்ளாமல் வீடுபேறு எய்த முடியாது என்றார். மனம் வருந்திய அவள், முனிவர்கள் தவம் செய்துகொண்டிருந்த இடத்துக்குச் சென்று தன்னை யாரேனும் மணம் புரிந்துகொள்ளும்படி வேண்டினாள். அவள் நிலைகண்டு இரங்கிய காலவ முனிவர் அவளை மணந்தார். பெரிய பிராட்டியின் அருளால் அவர்களுக்கு 360 கன்னிகைகள் பிறந்தனர். குழந்தைகளை ஈன்றபின் தாயும் மறைந்தாள். காலவ முனிவர் சம்புத்தீவு முனிவர்களிடம் கவலையுடன் தன் பெண்கள் திருமணத்திற்கு வழி கேட்க, அவர்கள் திருவிடந்தை சென்று வராகப் பெருமானை வழிபடும்படிக் கூறினர். முனிவரும் அவ்வாறே வேண்ட, பெருமாளும் பிரம்மசாரியாக வந்து நாளைக்கு ஒருவர் என 360 நாளும் வந்து மணம் புரிந்தார். பின்னர் இறுதிநாளில் அனைத்துப் பெண்களையும் ஒருவராக்கி 'அகிலவல்லி' என்ற திருநாமம் சூட்டி, தம் இடப்பாகத்தில் எழுந்தருளச் செய்து, சரம ஸ்லோகத்தை உலகத்திற்கு உபதேசித்து அருளினார். தினமும் கல்யாணம் செய்து கொண்டதால் இவர் நித்ய கல்யாணப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இந்தத் தலமும் அதையொட்டி 'நித்ய கல்யாணபுரி' என அழைக்கப்படுகிறது.
திருமணம் ஆகாத ஆணோ, பெண்ணோ கல்யாண தீர்த்தத்தில் குளித்துவிட்டு, நியமத்துடன் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், இரு கஸ்தூரி மாலைகளுடன் கோயிலுக்குள் சென்று தன் பெயரில் அர்ச்சனை செய்து, பின் அர்ச்சகர் தரும் ஒரு மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு கோயிலை 9 முறை வலம் வர வேண்டும். பின் வடக்கு நோக்கிக் கொடிமரம் அருகில் எண்சாண் உடம்பும் பூமியில் பட விழுந்து வணங்க வேண்டும். திருமணம் முடிந்ததும், பழைய மாலையுடன் வந்து அர்ச்சனை செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.
தம்பதி சமேதராய் வராகப் பெருமாளின் திருவடியைச் சிரசில் தாங்கி நிற்கின்ற ஆதிசேஷனை வணங்குபவர்களுக்கு ராகு-கேது தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. பள்ளிகொண்ட பெருமாளாய் ஸ்ரீதேவியுடன் சேவை சாதிக்கிற ரங்கநாதரை வணங்குவதால் சுக்ர தோஷம் நிவர்த்தியாகிறது. மூலவரான ஆதிவராகப் பெருமாளை வணங்குவதால் களத்திர தோஷங்கள் அனைத்தும் நீங்குகின்றன. உற்சவர் நித்யகல்யாணப் பெருமாள், தாயார் கோமளவல்லித் தாயார் இருவருக்கும் தாடையில் இயற்கையிலேயே அமைந்த திருஷ்டிப் பொட்டு வணங்குவோரின் திருஷ்டி தோஷத்தை நீக்குகிறது. குழந்தைப்பேறு உண்டாகத் தலவிருட்சமான புன்னை மரத்தில் தொட்டில் கட்டி மும்முறை வலம் வந்து வணங்குகின்றனர். ஆகவே திருவிடந்தை அனைத்து தோஷங்களையும் நீக்கும் தலமாக விளங்குகிறது.
கோவிலில் வருடாந்திர சித்திரைப் பெருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் 1910ம் ஆண்டுகளில் படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் கோயிலைப் பற்றி அரிய வரலாற்று உண்மைகள் காணப்படுகின்றன. திருமங்கை ஆழ்வார் திருவேங்கடமுடையானைத் துதிக்கும்போது, "ஏத்துவார் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான், தீர்த்த நீர்த்தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே” எனப் பத்து பாடல்களில் பாடித் துதித்திருக்கிறார்.
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிபோர்னியா |