"கடைசியா எப்ப பல் தேய்ச்சீங்க... ஸாரி... க்ளீன் பண்ணீங்க?" என்றார் அந்த வெள்ளைக் கோட்டு, நெற்றிவிளக்கு பல் டாக்டர். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் "காலைலதான்" என்றேன். என் வாய்க்குள் இடுக்கி. நான் சொன்னது அவருக்குப் புரிந்ததா தெரியவில்லை.
"இதுக்கு முன்னாடி இங்க வந்துருக்கீங்களா?"
"இல்லை டாக்டர். இதான் முதல் தடவை."
"இதுக்கு முன்னாடி ஹைஜீன் செக்கப், க்ளீனிங் யார்க்கிட்ட செஞ்சுக்கிட்டீங்க?"
"இதான் முதல் தடவை"
சம்பாஷணையைத் தொடருமுன் சிறிய கொசுவர்த்திச் சுருள் ஒன்றைச் சுழற்றிவிடுகிறேன்.
##Caption##ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சும்மா படிக்க மட்டும் செய்யவில்லை. வத்திராயிருப்பில் என் சிறுவயதில் அதைக் கடைப்பிடிக்கவும் செய்தேன். எங்கள் வீட்டுக் கொல்லையில் இரண்டு வேப்ப மரங்களும், ஒரு பெரிய்ய்ய புளிய மரமும் இருந்தன. வேம்புக் குச்சியொன்றை தினமும் ஒடித்துக் கொடுப்பார் தாத்தா. அதன் முனையை முதலில் நன்றாகக் கடித்து பிரஷ் மாதிரி செய்துகொண்டு பின்பு துலக்க வேண்டும். எனக்கு வேப்பம் பழம் மிகவும் பிடிக்கும். வேப்பங் குச்சி - அதைச் தின்ன வேண்டியதில்லை என்பதால் கசப்பைத் தாங்கிக்கொண்டு தேய்ப்பேன். அப்படியும் கடைவாய் வழியாக கசப்பு உள்ளிறங்கிவிடும். "வேணும்னா உப்பு சேத்துக்கோ" என்பார் தாத்தா. நைசான பொடியுப்பெல்லாம் கிராமத்தில் கிடையாது. கல்லுப்புதான். அதால் தேய்த்தால் கல்லால் பல்லைத் தேய்ப்பது போல இருக்கும். அதனால் வேப்பங்குச்சியொடு நிறுத்திக்கொண்டேன். ஆலங்குச்சிக்கெல்லாம் ஊரெல்லையில் குளத்தங்கரைக்குப் போகவேண்டுமென்பதால் வேப்பங்குச்சியே எனது ஆஸ்தான பிரஷ் கம் பேஸ்ட்டாக இருந்தது.
பிறகு கொஞ்சம் "வசதி" வந்ததும் கோபால் பல்பொடி வாங்கினார்கள். கோலப்பொடியில் சர்க்கரை கலந்தது போல் இருந்தது. ஆனால் வேப்பங்குச்சியின் கசப்புக்கு எவ்வளவோ பரவாயில்லை. தாத்தா மட்டும் ஏன் கோபால் பல்பொடியைத் தொடுவதில்லை என்று புலனாய்ந்ததில் அவரது பிரத்தியேகமான சிறிய ஷெல்ஃப் ஒன்றில் ஒளித்து வைத்திருந்த சிறிய அலுமினிய டப்பியைக் கண்டுபிடித்தேன். பயோரியா என்று எழுதியிருந்ததைப் பார்த்தும் லேசாக பயமாக இருந்தது. தாத்தா நிறைய தங்க பஸ்பம் போயிலை போடுவார். கன்னம் உப்பியே இருக்கும். முதலில் பயோரியாவை மருந்து என்று நினைத்தேன். டப்பியைத் திறந்து பார்த்ததில் பாண்ட்ஸ் பவுடர் மாதிரி தூய்மையாக இருந்தது. லேசாக மருந்து வாடை. ஆள்காட்டி விரலை முக்கித் தேய்த்தவுடனேயே சுறுசுறுவென்று மேலண்ணம் எரிந்து கண்ணில் நீர் வந்தது. தலைதெறிக்கத் திரும்ப ஓடி வந்தும் நீண்ட நேரம் வாய்க்குள் இன்னொரு லேயர் ஒட்டிக் கொண்டிருந்ததைப் போன்ற பிரமை.
பிறகு பேஸ்ட் வாங்கித் தேய்க்குமளவிற்குப் பெரிய ஆளாகிவிட்டேன். பேஸ்ட் அணில் முதுகு மாதிரி வரிவரியாகக் கலர் கோட்டோடு பிதுங்கி வரும். ஆரம்ப காலங்களில் பேஸ்ட்டைத் தேய்த்ததைவிட தின்றதே அதிகம். கண் கூசுமளவு டாலடிக்காவிட்டாலும் ஓரளவுக்கு வரிசையான பற்கள்தான் எனக்கு. நாவல்களில் படித்த "ரோஜா ஈறுகளுடன் பளீரென்று சிரித்தாள்" வர்ணனைக்குப் பொருத்தமாக யாரையும் பார்த்ததில்லை. தெருவுக்கு ஒரு மாபல்லன் தெத்துப் பல்லோடு கட்டாயம் இருப்பார். இது தவிர கோரைப் பல்லன், காரைப் பல்லன், பாறைப் பல்லன் என்று பலவகை சினேகிதர்கள் இருந்தார்கள். பட்டாணியை நொறுக்குவோம். பொங்கல் சமயத்தில் வீட்டெதிர் பெருமாள் கோவில் சொர்க்க வாசல் படிக்கட்டில் அமர்ந்து முழுக்கரும்பையும் வாயோரம் எரிய எரியக் கடித்துத் தின்னுவோம். இவ்வளவு ஏன். கல்கோனாவையே ‘அஸால்ட்’டாகக் கடித்துச் சாப்பிடுவோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்கா வந்ததும் எச்ஆர் டிபார்ட்மெண்டிலிருந்து ‘உங்களுடைய டெல்ட்டா டென்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஜ் விவரங்கள் இதோ என்று மின்னஞ்சலில் ஒரு ராமாயணம் வந்தது. முதலில் அதை "Please click here to receive the $300 million dollars of unclaimed funds of the deceased to your bank account" வகை நைஜீரியா மின்னஞ்சல் என்று நினைத்துக்கொண்டு ரத்து செய்துவிடலாமா என்று கணிலியை (கணிலி=Mouse ஹிஹி) அமுக்கியே விட்டேன். மதியமே எச்ஆர் ஆள் வந்து "டிசம்பர் முடியப் போவதால் செக்கப் செய்துகொண்டுவிடு இல்லாவிட்டால் இந்த ஆறுமாத கோட்டா வேஸ்ட்டாயிடும்" என்று சொல்ல ஒன்றும் புரியவில்லை. அதாவது ஆறு மாதத்துக்கு ஒருமுறை வழக்கமாக பல்லைக் காட்டி செக்கப் செய்துகொண்டுவிட வேண்டுமாம். பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத்தான் அந்தப் பாலிஸியாம். அந்த மின்னஞ்சலை மீட்டெடுத்துப் படித்துப் பார்த்ததில் தலைசுற்றிப் பல்வலி வரும்போல இருந்தது. அப்புறம்தான் இந்தக் கட்டுரையின் முதல் பாரா சம்பவம்.
தெருக்கோடியிலேயே இருந்த ஒரு பல் மருத்துவமனைக்குப் போனேன். மருத்துவர் இளைஞர். "உங்கள் டெல்லிக்கும் பெங்களூருக்கும் வந்திருக்கிறேன்" என்றார். எக்ஸ்ரேயெல்லாம் (பல்லுக்குத்தான்!) எடுத்து காட்டினார்கள். கருப்பு வெள்ளையில் கலைடாஸ்கோப் பார்த்த மாதிரி பூச்சி பூச்சியாக இருந்தது. மருத்துவர் வாயில் விளக்கடித்து சோதித்துவிட்டு "ஈறுகளுக்குள் ப்ளாக் இருக்கு. அதை எடுக்காவிட்டால் கொஞ்ச நாளில் பற்குழி வந்து பல்லெல்லாம் காலியாகி விடும். நோயெல்லாம் வரும்" என்று பயமுறுத்திவிட்டு Deep Cleaning செய்தேயாக வேண்டும் என்று கழுத்தில் துண்டைப் போட்டு இருக்கையின் முதுகுப் பக்கத்தைச் சாய்த்து படுக்கை வசத்தில் என்னை அழுத்தினார். "ஒரே நாளில் மொத்த வாயையும் சுத்தம் பண்ண முடியாது. இன்னிக்கு வலது பக்கம் மட்டும்" என்றார்கள். "அடப் பாவிகளா, இரண்டு மூன்று விஸிட் வருமளவிற்கு என்ன குகையையா சுத்தம் செய்யப் போகிறார்கள்? வாய்தானே?" என்று நினைத்தேன்.
##Caption##பஞ்சு மொட்டு ஒன்றில் நீல திரவத்தைத் தோய்த்து ஈறுகளில் தேய்க்க இனிப்பாக இருந்தது. "I'll be back in 2-3 minutes" என்று அவர் வெளியேறிச் செல்ல வாய்க்குள் ஒருபக்கம் மட்டும் பலூன்போல வீங்கும் பிரமை. கொஞ்சம் கொஞ்சமாக வலது வரிசைகளில் உணர்வு தேய வாயைத் திறந்திருக்கிறேனா மூடியிருக்கிறேனா என்றே தெரியவில்லை. சுத்தமாக மரத்துப் போனது.
மருத்துவர் திரும்ப வந்து "Are you doing alright?" என நான் 'Yush. ayam aallite' என்று டாஸ்மாக் வாசல் தமிழ்க் குடிமகன் போலப் பேசினேன். அவர் இருக்கையில் பொருத்தியிருந்த தட்டில் மினி அங்குசம் மாதிரிக் கருவிகளைப் பரப்பி வைத்து வாயைத் திறக்கச் சொல்ல, மருத்துவரின் அஸிஸ்டெண்ட் இந்தப் பக்கம் நின்றுகொண்டு கிடுக்கியால் என் வாயைத் திறந்துவைத்துப் பிடித்துக்கொள்ள, கிலியாக இருந்தது. கண்ணுக்கு நேரே பிரகாசமாக விளக்கு. கண்களை மூடிக்கொண்டேன். சிறிது நேரத்திற்கு தொடர்ச்சியாகக் கிணறு தோண்டும்போது கடப்பாரை பாறையில் மோதுவது போன்றும், கத்தியைச் சாணை தீட்டுவது போன்றும் ஒலிகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. நெருப்புப் பொறிகூட பறந்திருக்கும் போல. பற்களின் உறுதியை நினைத்து உள்ளூரப் பெருமையாகவும் இருந்தது. "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்களேப்பா!" என்று பாராட்டிக் கொண்டேன்.
"அடுத்த வாரம் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்க. லெப்ஃட்டையும் பாத்துரலாம்" என்றார். தினமும் ஃப்ளாஸ் செய்ய வேண்டும் என்று நூல் ஒன்றைப் பல்லிடுக்கில் செலுத்தி மத்து கடைவது போலச் செய்து காட்டினார்கள். முசிறியில் என் நண்பன் பசுபதியின் தாத்தா காவிரியில் இடுப்பளவு நின்றுகொண்டு சூரிய நமஸ்காரம் முடித்துவிட்டு மூக்கில் ஒரு துவாரம் வழியாக நீரை ஊற்றி மறு துவாரம் வழியாக வரச் செய்வார். நல்ல வேளை அதையெல்லாம் செய்யச் சொல்லவில்லை. வாயைக் கொப்பளிக்கச் சொன்னார்கள். வலது பக்கம் இன்னும் உணர்வின்றி இறுகியிருந்தது. பெயருக்குக் கொப்பளித்துவிட்டு வெளியேறினேன்.
வரவேற்பறையில் தொலைபேசியில் பிஸியாக இருந்த அம்மணி பேசிக்கொண்டே அச்சடித்து நீட்டிய பில்லைப் பார்த்தபோது மயக்கம் வரும்போல இருந்தது. அவர் தொலைபேசி முடித்துவிட்டு பில்லிலிருந்த வரிகளைப் பேனாவால் ஓட்டி "மொத்தம் ஆயிரத்து இருநூறு டாலர். அதில் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் எண்பது சதவீதம் கொடுத்துவிடும். பாக்கியில் பாதியை இப்போது செலுத்திவிட்டு அடுத்த வாரம் வரும்போது மீதியைக் கொடுங்கள்" என்றார். அந்தக் காசை வைத்து ஆயுசுக்கும் பற்பசை வாங்கலாமே என்று தோன்றியது. கடனட்டையால் செலுத்திவிட்டு வெளியேறினேன். பற்பசை விளம்பர மாடல் போல ஆகியிருப்போம் என்று நினைத்தபடி வண்டியிலேறி கண்ணாடியில் பற்களைப் பார்த்தால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
வீட்டுப் படியேறினதும் சின்னவள் வந்து "டாடி...ஆ காட்டு? Say Cheeeeeeese..." என்று செய்முறை விளக்கத்துடன் சொல்ல சிவாஜி மாதிரி சிரித்துக்கொண்டே மனதுக்குள் அழுதேன். பார்த்துவிட்டு "It's clean" சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்.
மறுநாள் ஆபிஸ் போய் அந்த எச்ஆர் ஆளைத் தேடியதில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தார். என்ன ஆயிற்று என்று கேட்டேன். விஸ்டம் டூத் (என்னே பெயர்!) பிடுங்கிவிட்டு அது பல் அலங்கார சிகிச்சை, இன்சூரன்ஸ் கிடையாது என்று சொளையாக எழுநூற்றைம்பது டாலர் பிடுங்கிவிட்டார்களாம். "அது பாட்டுக்கு தேமேன்னு சமத்தா இருந்தது" என்றார் சோகமாக. உள்ளுக்குள் சாத்தான்போலச் சிரித்துக்கொண்டு பேசாமல் இருக்கைக்குத் திரும்பினேன்.
"வாயைப் பொத்திக்கிட்டுச் சும்மா இர்றா!" என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க!
வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன் |