ஒரு சிறிய காட்டில் முயல் ஒன்று வசித்து வந்தது. அது கடும் கோடைக்காலம். அதனால் முயலுக்கு மிகுந்த நாவறட்சியாக இருந்தது. தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைந்தது. நீர்நிலைகள் எல்லாம் வறண்டிருந்தன. மிகவும் களைப்புற்ற முயல், அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றது. அங்கே ஒரு தோட்டத்தில் கிணறு ஒன்றைப் பார்த்தது. அதில் எதிரும் புதிருமாக இரண்டு வாளிகள் கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்தன. கிணற்று மேடையில் முயல் ஏறிப் பார்த்தபோது உள்ளே நிறையத் தண்ணீர் இருப்பது தெரிந்தது. உடன் வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. அதன் எடையால் வாளி கீழே சென்றது. மற்றொரு வாளி மேலே உயர்ந்தது.
தண்ணீருக்குள் மூழ்கி விடாமல் ஜாக்கிரதையாக அமர்ந்து கொண்டு வேண்டுமளவு நீரைப் பருகியது முயல். பிறகு மேலே செல்ல முயற்சித்தது. ஆனால் வாளி கிணற்றுக்குள் இருந்ததால் அதனால் மேலே செல்ல இயலவில்லை. எப்படிப் போவது என்று யோசித்துக் கொண்டிருந்தது.
அப்போது அங்கே நரி ஒன்று வந்தது. எதேச்சையாகக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த நரி, வாளிக்குள் இருந்த முயலைப் பார்த்தது. "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?" என்று ஆச்சரியத்தோடு கேட்டது.
அதற்கு முயல் தந்திரமாக, "பக்கத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து தங்க மாம்பழம் ஒன்று இந்தக் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" என்று சொன்னது.
நரியும் கிணற்றுத் தண்ணீரை உற்றுப் பார்த்தது. நடுவானில் சூரியன் தங்கம்போல ஜொலித்துக் கொண்டிருந்தான். அதன் நிழல் தண்ணீருக்குள் தகதகவென்று தெரிந்தது. முயல் சொன்னது உண்மை என்று நம்பிய நரி, "இப்போது அதை எப்படி எடுப்பது?" என்று ஆசையோடு கேட்டது.
உடனே முயல், "நீங்கள், மேலே இருக்கும் வாளியில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். அது கீழே வந்து விடும். இரண்டு பேரும் சேர்ந்து பழத்தை எடுத்து உண்ணலாம்" என்று சொன்னது.
"சரி சரி. ஆனால் நீ சின்னவன். உனக்கு கால் பங்குதான் தருவேன்" என்று சொன்ன நரி, ஆவலுடன் மேலே கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே அதன் எடை காரணமாக வாளி வேகமாகக் கீழே செல்ல ஆரம்பித்தது. முயல் அமர்ந்திருந்த வாளி வேகமாக மேலே வந்தது.
வாளியிலிருந்து தாவி வெளியேறிய முயல், கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து, "நரியாரே, எனக்கு அந்தக் கால் பங்குகூட வேண்டாம். நீங்களே எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்" என்று கூறிவிட்டு வேகமாகக் காட்டுக்குள் ஓடிப் போய்விட்டது.
சுப்புத்தாத்தா |