தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 16)
பொருளாதாரச் சூழ்நிலை முன்னேறி வருகிற இந்த நிலையில் எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires/cordless), சுத்த நுட்பம் (clean tech) போன்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். சென்ற பகுதிகளில் முதல் மூன்று CL துறைகளில் உள்ள வாய்ப்புக்களைப் பற்றி விவரித்து விட்டு, இறுதியான சுத்த நுட்பத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தோம். சென்ற பகுதியில், சுத்த நுட்பத்தின் உபதுறைகளைப் பற்றி மேல்நோக்கத்துடன், அதன் முதல் ஒரு உபதுறையான மாசற்ற சக்தி உற்பத்தி துறையின் பல நுட்பங்களைப் பற்றிக் கண்டோம். இப்போது மற்ற சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றித் தொடர்ந்து காணலாம்...

*****


சுத்த சக்தியின் பல உபதுறைகளில் கரியமில வாயுவின்றி சக்தி தரும் நுட்பங்களைப் பற்றிக் கூறினீர்கள். மிகவும் சுவையாகவும், வருங்காலத்தைப் பற்றி நம்பிக்கையூட்டும் பரபரப்பளிப்பதாகவும் இருந்தது. சுத்த சக்தியின் அடுத்த உபதுறையைப் பற்றிக் கேட்க ஆவலாக உள்ளது. கூறுங்களேன்?

சுத்த நுட்பங்களை ஐந்து உபதுறைகளாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று முன் பகுதியில் கண்டோம்:

கரியமில வாயு வெளிவிடாத அல்லது மிகக் குறைவாக வெளிவிடும் தொழில்நுட்பங்கள்: உதாரணமாக, சூரிய மின்சக்தி, மின்சாரக் கார் போன்றத் தொழில்நுட்பங்கள். (non-carbonic energy generation) பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களைவிடச் சுத்தமாக எரிபடக் கூடிய எரிபொருட்கள் (cleaner burning fuels) - பயோ-டீஸல், எத்தனால் போன்றவை. எரிபொருட்களை சாதுரியமாகப் பயன்படுத்தி ஒரேயளவு எரிபொருளுக்குப் பலமடங்கு அதிகச் சக்தி அல்லது உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of energy utilization) வெளியிடப்படும் மாசுப் பொருட்களான துகள்கள், திரவங்கள், வாயுக்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் அல்லது பிடித்து மாசு செய்யாதவாறு அடைத்து வைப்பது (pollution cleanup or sequestration) சுத்த சக்தித் தகவல் நுட்பத் துறை (clean energy information technology).

இவற்றில் முதலாவது கரியமில வாயு மற்று மாசின்றி சக்தி உற்பத்தி தரும் உபதுறையைப் பற்றி சென்ற பகுதியில் விவரித்தோம். ஆனால், வெகு சமீபத்தில் நான் படித்த ஒரு பிரமாதமான செய்தித் துணுக்கை உங்களுடன் பகிர்ந்து கொண்டபின் அடுத்த உபதுறைக்கு செல்வோம்.

சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் ரேமண்ட் கர்ட்ஸ்வைல் என்னும் அறிவியல் நிபுணர் சூரிய ஒளியில் உருவாகும் மின்சக்தி உற்பத்தி, கடந்த இருபது வருடங்களாக, ஒவ்வொரு இரு வருட காலத்திலும் இரு மடங்காக அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, பத்து வருடங்களாக அவ்வாறு அதிகரித்ததால், ஆயிரம் மடங்கு, மேலும் இருபது வருடங்களில் மில்லியன் மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இத்தகைய இரு மடங்கு உயர்வு இன்னும் பல வருடங்களுக்கு தொடரும் என்றும், இன்னும் பத்து வருட காலம் கழித்தும் கூடச் சூரியமின் உற்பத்தி அடையக் கூடிய அளவில் 0.1 சதவிகிதமே எட்டும், அதனால் இன்னும் வளர்ந்து கொண்டே போக வாய்ப்புள்ளது என்று கர்ட்ஸ்வைல் மேற்கொண்டு அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா! அத்தகைய சூரியஒளி மின்சக்தி அதிகரிப்புடன் காற்றுச்சுழல் மின்சக்தி, புவியனல் (geothermal) மின்சக்தி என்று மற்ற மாசற்ற மின்சக்தி உற்பத்தி நுட்பங்களையும் சேர்த்துப் பார்த்தால் உண்மையாகவே சுத்த சக்தியின் ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது! (இந்த அற்புதமான கண்ணதாசன் திரைப்பாடல் வரிக்கு என் மானசீக நன்றி!)

அடுத்ததாக, குறைவான அளவு மாசு வெளிவிடும் எரிபொருட்களைப் பற்றிக் காண்போம்.

பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விட சுத்தமாக எரிபடக் கூடிய எரிபொருட்கள். கேஸலின், தற்போதைய டீஸல் போன்றவை, எரியும்போது வெளிப்படும் மாசு வாயுக்களும், தூசுப் பொருட்களும் புவிச் சூடேற்றத்துக்கு மூலகாரணங்களில் ஒன்றாகும். ஆனால், ஒரேயடியாக மாசற்ற சக்திகளை உடனே வண்டிகளுக்குப் பயன் படுத்துவது சாத்தியமல்ல. (உலகில் தற்போது ஓட்டப்படும் பல பில்லியன் வண்டிகளை யோசித்துப் பாருங்கள்!) அதனால், வெளியிடப்படும் மாசைக் வெகுவாகக் குறைக்கும் வேறு எரிபொருட்களை உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது.

அத்தகைய பல பல எரிபொருட்களை ஏற்கனவே அன்றாட நடைமுறை பயனுக்கு ஓரளவு கொண்டு வந்துள்ளனர். E85 எனப்படும், எத்தனால் (ethanol or ethyl alcohol) என்னும் ஆல்கஹால் பெருமளவில் கலக்கப்பட்ட எரிபொருளைப் பயனபடுத்தும் வண்டிகள் உள்ளன. பிரேஸில் நாட்டில், E85 பயன்படுத்தும் வண்டிகள்தாம் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஓடுகின்றன. அமெரிக்காவில் E85 வண்டிகள் மிகக் குறைவே. இருப்பவையும், E85 கேஸலின் ஸ்டேஷன்களில் எளிதில் கிடைப்பதில்லையாதலால், வெறும் கேஸலினையே பயன் படுத்துகின்றன. எத்தனாலை மக்காச் சோளத்திலிருந்து உருவாக்கினால் சாப்பிடச் சோளம் இருக்காது என்பதால், மரப்பட்டை, சோளச்சக்கை போன்று மற்றப் பயனற்ற மூலப்பொருட்களிருந்து ஸெல்லுலோஸிக் எத்தனால் என்ற முறையில் உருவாக்க ஆரம்பித்துள்ளார்கள்.

அடுத்து பயோடீஸல். தற்போதைய டீஸல் கார்களே வெறும் தாவர எண்ணையை டீஸலுக்குப் பதில் பயன்படுத்த முடியும். சில சிறு மாற்றங்களுடன், மக்டானல்ட்ஸ் போன்ற பெரும் உணவகங்களில் பொரிக்கப் பயன் படுத்தியபின் வீணாக எறியப்படும் கொழுப்பையும், எண்ணையையும் டீஸலுக்குப் பதில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜட்ரோப்பா (jatropa) என்னும் செடியிலிருந்து பயோ டீஸல் தயாரிக்கும் முறையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தும் ஜட்ரோப்பா செடிவகையைச் சாகுபடி செய்யப்த் தொடங்கியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், இயற்கை வாயுவைப் பயன்படுத்தினால் மிகக் குறைவான மாசு வெளியாகிறது என்பதால் பல இயந்திரங்கள், மோட்டர் கார்கள், பேருந்துகளில் அதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் அத்தகைய பேருந்துகளை மட்டுமே அனுமதித்துள்ளதால் மாசு பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பெருமளவில் மாசு கக்கும் லாரிகளுக்கும் ஆட்டோரிக்ஷாக்களுக்கும் இயற்கை வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டம் உருவாகி வருகிறது. (பெட்ரோலியத்தை விட இயற்கை வாயு பெருமளவில் கிடைக்கிறது என்பதோடு கிருஷ்ணா கோதாவரி நதிகள் கடலில் கலக்கும் இடத்திலேயே பெரிய இயற்கை வாயுத் தேக்கங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்பது போனஸ்!)

சமீப காலமாக, ஃப்ரேக்கிங் (Fraking) எனப்படும் கனவேகத்தில் தண்ணீரையும் காற்றையும் பூமிக்குள் புகுத்தி வாயுவை வெளியெடுக்கும் புதிய நுட்பத்தைப் பயன்படுத்தி, ஷேல் (shale rock) எனப்படும் பாறைகளில் அடைபட்டுள்ள இயற்கை வாயுவை இன்னும் அதிக அளவில் வெளியெடுக்க ஆரம்பித்துள்ளனர். இது சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடும் என்னும் எச்சரிக்கை எழுந்துள்ளது. இருந்தாலும், இத்தகைய பல புதிய நுட்பங்களால் இயற்கை வாயு இன்னும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அடுத்து நிலக்கரி. என்ன! கரியமில வாயுதானே பெரும் பிரச்சனையே!! எப்படி கரி தூய எரிபொருளாக முடியும் என்கிறீர்களா? சரிதான். ஆனால் கரியை நேரடியாக எரித்தால்தான் பெரும் மாசு. அதற்குப் பதிலாக, இயற்கை வாயுவை திரவமாக்குவது (Liqufied natural gas) போல, கரியிலிருந்தும் ஒரு விதமான எண்ணையை வெளியெடுத்து, அதையே பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு "கரித்திரவம்" (coal-to-liquid) என்று பெயர்.

இதுபோன்று இன்னும் பல பெட்ரோலிய மாற்று எரிபொருட்கள் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் க்ளோரோ ஃப்ளூரோ கார்பன் (ChloroFluro Carbon - CFC), பயன்படுத்தப் பட்டது. அதனால் தென்துருவத்தில் ஓஸோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டது. அப்புறம், CFC-ஐ தடை செய்து மாற்றுக் குளிர்பதனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால், ஓஸோன் ஓட்டை ஓரளவுக்கு மூட ஆரம்பித்துள்ளது என்னும் நற்செய்தி கிடைத்துள்ளது. அதேபோல், இம்மாதிரி மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்கள் மாசையும் குறைத்து, புவிச் சூடேற்றத்தையும் மட்டுப்படுத்தும் எனும் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது!

மேலும் வாய்ப்புக்களைப் பற்றி இனிவரும் பகுதிகளில் மேற்கொண்டு பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com