அரையாப்புக் கட்டி
வசந்த காலத்திலும் கோடைக் காலத்திலும் பலரை, குறிப்பாக 5௦ வயதுக்கு மேற்பட்டோரை, தாக்கும் அக்கி அல்லது அரையாப்புக் கட்டி நோயைப்பற்றிப் பார்ப்போமா?

அரையாப்புக் கட்டி (அக்கி)
இது Herpes Zoster என்ற நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படும் ஒரு தோல் வியாதி. இது உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பாக, முதுகில் ஒரு பாகத்தில் விலா எலும்பைச் சுற்றி தடிப்பு போல் ஏற்படுவது இதன் சிறப்பம்சம். இது சின்னம்மை ஏற்படுத்தும் அதே வைரஸ் மூலம் ஏற்படுகிறது. சிறு வயதில் சின்னம்மை தாக்கி அது உடலில் ஒரு பாகத்தில் உறங்கிக் கிடக்கும். பின்னர் வயதான பின்னர் அரிப்புக் கட்டியாக உருமாறித் தக்கலாம். இது உயிரைத் தாக்கும் கொடிய நோய் இல்லை என்றாலும் மிகமிக வலிக்கும் தடிப்பு நோய். இதன் வலி பிரசவ வேதனை உண்டு பண்ண வல்லது. இதற்குத் தடுப்பூசி மூலமாகவும் மிகவும் தொடக்க காலத்தில் மருந்துகள் உட்கொள்வதின் மூலமாகவும் பின் விளைவுகளைக் குறைக்கலாம்.

அறிகுறிகள்:
  • தாக்கிய பகுகளில் வலி, நமநம என்று எரிச்சல் மற்றும் மரத்துப் போதல்
  • சிவப்பு நிறத்தில் தடிப்பு
  • சீழ்கட்டிய அம்மைத் தடிப்பு
  • அரிப்பு
சிலருக்குக் காய்ச்சல், சோர்வு தலைவலி, உடல்வலி ஆகியவை ஏற்படலாம். வேறு சிலருக்கு மார், முதுகுப் பகுதிகளில் வலி ஏற்பட்டு இது இதய அடைப்புப் போன்ற தோற்றம் உண்டு பண்ணலாம். மற்றும் சிலருக்கு வலியைத் தொடர்ந்து தடிப்பு ஏற்படலாம். இது ஒரு காய்ப்புப்போல உடலைச் சுற்றி ஏற்படும். இந்த தடிப்பு உடலின் நடுப் பகுதியைத் தாண்டாது. இது மிகவும் குறிப்படத்தக்கது. மற்றும் சிலருக்கு முகத்தின் ஒரு பாகத்தில் குறிப்பாகக் கண்ணைச் சுற்றி தடிப்பு ஏற்படலாம். மற்றும் சிலருக்கு கழுத்துப் பகுதி தாக்கப்படலாம்.

காரணங்கள் முன்னெச்சரிக்கைகள்:
இது Herpes zoster என்ற வைரஸ் மூலம் ஏற்படுகிறது. முதலில் சின்னம்மை (Chicken Pox) ஏற்பட்டு இந்த வைரஸ் நரம்புகளில் தூங்கிக் கிடக்கும். ஒருவரது எதிர்ப்பு சக்தி குறையும்போது இது மீண்டும் தாக்கலாம். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களையும் அதிக மன அழுத்தம் ஏற்படும்போதும் இந்த வைரஸ் சற்றே உற்சாகம் கொள்ளும்.
இந்த வைரஸ் அதே குடும்பத்தில் இருந்தாலும் வேறுபடுகிறது. இது கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் புற்றுநோய் அல்லது வேறு பல நோய்களினால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை மிகவும் தீவிரமாகத் தாக்க வல்லது. அதனால் இந்த தடிப்பு நோய் ஏற்பட்டால் இவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. இந்த தடிப்பு நோயில் திரவம் இருக்கும்போது இது தொற்றுநோயாக மாறலாம். ஆனால் முனனால் சின்னம்மை தாக்காதவர்களையே இது தொற்றிக் கொள்ளும். அவர்களுக்குச் சின்னம்மை வரக்கூடும்.

யாரைத் தாக்கும்?
முன்பு சின்னம்மை தாக்கியவர்களையே அரையாப்புக்கட்டி தாக்கும். இதற்கு வயது ஒரு முக்கிய காரணம். 50 வயதுக்கு மேற்பட்டோரை இது தாக்கக் கூடும். வயது அதிகரிக்க அதிகரிக்க இது தாக்கக் கூடிய வலுவும் கூடுகிறது. எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை அதிகம் தாக்க வல்லது. புற்றுநோய் அல்லது உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்களையும் HIV அல்லது வேறு நோய்களினால் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும், மாத்திரை உட்கொள்பவர்களையும் இது வீரியத்துடன் தாக்கும்.

பின்விளைவுகள்:
  • நரம்பு வலி - இது பல நாட்கள் முதல் வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கலாம்.
  • முகத்தில் தடிப்பு ஏற்படுவோர்களுக்கு பார்வை பாதிக்கப்படலாம்.
  • மூளைக் காய்ச்சல் ஏற்படலாம் அல்லது முக நரம்பு மரத்துப் போகலாம்.
  • தோலை நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்கலாம்.
சிகிச்சை முறைகள்
Acyclovir என்ற வைரஸ் எதிர்ப்பு மாத்திரைகள் தடிப்பு ஏற்பட்ட உடனே அளிக்கப்பட வேண்டும். இதன்மூலம் தீவிரம் குறைக்கப்படும். இதைத் தவிர நரம்பு வலிக்கு மாத்திரை அளிக்கப்படலாம். ஒரு சிலருக்கு பல நாட்கள்வரை வலி மாத்திரை தேவைப்படலாம்.

தடுப்பு முறைகள்
  • சின்னம்மை தடுப்பு ஊசி - இதற்கு முன்னர் சின்னம்மை தாக்காத வயதுவந்தவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் இதற்கான தடுப்பூசி வழங்க வேண்டும். இது அரையாப்புக் கட்டி வருவதை முற்றிலும் தடுக்காத போதும் அதன் தீவிரத்தை குறைக்கும்.
  • அரையாப்புக் கட்டி தடுப்பு ஊசி - 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கவேண்டும். இவர்களை அரையாப்புக் கட்டி முன்னர் தாக்கி இருந்தாலும் இது அளிக்கப்படலாம். இதன்மூலமும் தீவிரம் கணிசமாகக் குறைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைதளங்கள்: www.mayoclinic.com, www.cdc.gov

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com