தொடர்ந்து மூன்று சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தேர்தலைச் சந்தித்த ம.தி.மு.க. இம்முறை எப்படியாவது சட்டப்பேரவைக்குள் கணிசமான எண்ணிக்கையுடன் கால்பதித்துவிட நினைத்திருக்கிறது. அதற்குக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதே சிறந்தது என்பதில் கவனமாக உள்ளது. அதற்கேற்பக் கூட்டணியில் தங்களுக்கு அதிகத் தொகுதிகள் வேண்டும் என்று நினைத்தது. ம.தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அனைத்துமே இம்முறை கெளரவமான இடம் வேண்டும் என்று தி.மு.க தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளன. கூட்டணி கட்சிகளின் 'கெளரவமான இடம்' என்கிற கோரிக்கை - நிர்ப்பந்தம் - தி.மு.க. தலைமைக்குப் பெரிய சவாலாகவே இருக்கிறது.
கருணாநிதி ''அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமென்றால் கூட்டணியில் உள்ள கட்சிகள் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். இதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் பேசிய அதன் பொதுச்செயலர் ஜெயலலிதா, ''அ.தி.மு.க.வில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன'' என்று பேசியது தி.மு.க. கூட்டணியைக் கலகலக்க வைத்தது. இந்நிலையில் அவைத்தலைவர் காளிமுத்து அ.தி.மு.க. அணியில் சேருவதற்கு வைகோவிற்கு அழைப்புவிடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே ம.தி.மு.க.வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் தி.மு.க.வின் 'பெரியண்ணன் போக்கை' கண்டித்தும் அ.தி.மு.க.வின் அழைப்பை ஏற்று அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் பேசிவந்தது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர்களிடையே பேசிய கருணாநிதி ம.தி.மு.க. பாதை விலகிச் செல்கிறது என்று பகிரங்கமாகப் பேட்டி அளித்ததையடுத்து, ம.தி.மு.க. பெரும் குழப்பத்தில் தள்ளப்பட்டது.
வைகோ கருணாநிதியைச் சந்தித்ததுடன், தி.மு.க.வுடனான கூட்டணி நீடிக்கும் என்று தெளிவுபடுத்தியதை அடுத்து வேறுவகை ஊகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது.
கேடிஸ்ரீ |