ஸ்டெல்லா புரூஸ்
வெகுஜன எழுத்திலும் இலக்கிய எழுத்திற்கிணையான நுட்பங்களைக் கையாள முடியும் என்று நிரூபித்தவர் 'ஸ்டெல்லா புரூஸ்' என்ற புனைபெயர் கொண்ட ராம் மோகன். இவர், ஆகஸ்ட் 8, 1941ல் விருதுநகரில் பிறந்தார். பாரம்பரியமான செல்வச் செழிப்புள்ள குடும்பம். தந்தை ஒரு புத்தகப் பிரியர். வீட்டிலேயே ஒரு பெரிய நூலகத்தை வைத்திருந்தார். அந்த நூல்களை தினமும் ராம் மோகனைப் படிக்கச் சொல்வார். அது தேசம், வரலாறு, இலக்கியம் என பல வகைகளிலும் விரிவடைந்து, இவருக்குள் எழுத்தார்வத்தைத் தூண்டியது. சார்லஸ் டிக்கன்ஸனின் நூல்கள் இவருள் பல கற்பனைகளை வளர்த்தன. கல்லூரிப் படிப்பை முடித்த காலத்தில் படித்த கு. அழகிரிசாமி, கு.ப.ரா., சி.சு. செல்லப்பா, க.நா.சு., ஜெயகாந்தன் போன்றோரின் நூல்கள் ராம் மோகனுக்குள் பல தாக்கங்களை ஏற்படுத்தின. தந்தையின் ஆலோசனையின் பேரில் சிறிதுகாலம், டி.வி.எஸ். ஏஜென்சி எடுத்து நடத்தினார். ஆனால் அவருக்கிருந்த எழுத்தார்வமும், திரைப்படத் துறை ஆர்வமும் அவரைச் சென்னைக்கு அனுப்பின. தியாகராய நகரில் ஓர் அறை அடுத்துத் தங்கியவர் கதை, கவிதைகள் எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சென்னையிலும் விருதுநகரிலும் மாறி மாறி வசித்த பின்னர் சென்னையையே தனது வாழ்விடமாக்கிக் கொண்டார்.

##Caption##முதல் கதை ஜெயகாந்தன் நடத்திய 'ஞான ரதத்தில்' 1970ம் ஆண்டில் ராம் மோகன் என்ற சொந்தப் பெயரில் வெளியானது. ராம் மோகனின் நெருங்கிய தோழியின் சகோதரி பெயர் ஸ்டெல்லா புரூஸ். மனநிலை பாதிக்கப்பட்ட அவரது திடீர் மரணம் ராம் மோகனைப் பெரிதும் பாதித்தது. அந்தப் பெண்ணின் நினைவாக, அவரது பெயரையே தனது புனைபெயராகக் கொண்டு 'ஸ்டெல்லா புரூஸ்' என்ற பெயரில் கதைகள் எழுத ஆரம்பித்தார். 'ஆலிவர்' என்ற சிறுகதை தினமணி கதிரில் பிரசுரமாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து குமுதம் இதழில் இவரது பல சிறுகதைகள் வெளியாகத் தொடங்கின. ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது போன்றவை இவரது சிறுகதைகளைத் தொடர்ந்து பிரசுரித்து இவரது எழுத்துக்கு அங்கீகாரம் தந்தன. முதல் தொடர் 'ஒருமுறைதான் பூக்கும்' 1984ல் விகடனில் வெளியாகி இவருக்கு நிலைத்த புகழைத் தேடித் தந்தது. முக்கோணக் காதலை மையமாக வைத்து அந்த நாவலை எழுதியிருந்தார். இளமைத் துடிப்புடனான கதையும், எளிமையான நடையும் வாசகர்களைக் கவர்ந்தது. அவருக்கென்று வாசகர் வட்டம் உருவானது. தொடர்ந்து பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதினார். அடுத்து வெளியான 'அது ஒரு நிலாக் காலம்' ஸ்டெல்லா புரூஸின் வெற்றியை உறுதிப்படுத்தியது. அதில் வரும் சுகந்தா, ராம்ஜி, ரோஸ்மேரி ஆகிய கதாபாத்திரங்கள் வாசகர்களால் மறக்க இயலாதவையாகின. தனது வாழ்வின் ஒரு பகுதியைச் சற்றே கற்பனை கலந்து அவர் அதில் எழுதியிருந்தார். "சிறந்த எழுத்தாளர்கள் தங்களது நூல்களது மூலம், தங்களுக்குப் பிந்தைய எண்ணற்ற தலைமுறைகளுடன் தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஸ்டெல்லா ப்ரூஸும் அத்தகைய ஓர் எழுத்தாளர்தான்; இந்த நூலும் அத்தகைய ஒரு நூல்தான்." என்கிறது விகடன், அந்நூல் பற்றிய தனது முன்னுரையில்.

ஸ்டெல்லா புரூஸின் கதைகள் ஆழமான மன உணர்வைக் கொண்டவை. இளமை துள்ளும் அதேசமயம், தனிமையின் சோகத்தையும், பிரிவையும், வெறுமையையும் ஆழமாகச் சித்திரிப்பவை. மனத்தின் சிக்கல்களை, குழப்பங்களை, எண்ண ஒட்டங்களை, உறவின் சிக்கல்களை மிகச் சிறப்பாகத் தனது படைப்புகளில் அவர் கையாண்டிருக்கிறார். காதல், பிரிவு, உளவியல் ரீதியான குழப்பங்கள் இவற்றை அவரது எழுத்துக்களில் அதிகம் காணமுடியும். எந்தவித கவர்ச்சிப் பூச்சுமின்றி எளிய நடை கொண்ட அவரது படைப்புகள் வாசகர்களை ஈர்த்தன. ஸ்டெல்லா புரூஸின் சாதனைத் தொடர் என்று விகடனில் வெளியான 'மாய நதிகள்' தொடரைச் சொல்லலாம். அதில் வரும் உலகநாதன், பரமேஸ்வரி பாத்திரங்கள் வாசகர்களின் நினைவிலிருந்து நீங்காதவை. "மாய நதிகள் தொடருக்கு நான் வரைந்த ஓவியங்கள் உணர்வுபூர்வமானவை. கதையோடு ஒன்றி என்னை மிகமிக ஈடுபாட்டோடு வரைய வைத்த தொடர் அது" என்கிறார் மணியம் செல்வன். 'மாய நதிகள்' தொலைக்காட்சித் தொடராக வந்தும் வரவேற்பைப் பெற்றது. 'எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி', 'பனங்காட்டு அண்ணாச்சி' போன்றவை ஸ்டெல்லா புரூஸின் எழுத்து வன்மைக்குச் சான்றளிப்பவை.

125 சிறுகதைகள், 10 நாவல்கள் எழுதியுள்ள ஸ்டெல்லா புரூஸின் சிறுகதைத் தொகுப்புகளில் முக்கியமானது 'காதல் சிகரங்கள்'. அதில் இடம் பெற்றிருக்கும் "கண்ணம்மா", "பிற்பகல் மூன்று மணி", "புதிய கல்வெட்டுகள்", "அது வேறு மழைக் காலம்" போன்ற கதைகள் சிறப்பானவை. கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம் நாவலுக்குப் பிறகு சுயபால் விருப்பு பற்றித் தமிழில் கதை எழுதியவர் ஸ்டெல்லா புரூஸ்தான். 'காணாமல் போன ஞாபகங்கள்' என்ற அச்சிறுகதை பல்வேறு சர்ச்சைகளை அப்போது தோற்றுவித்தது. காதல் சிகரங்கள், சூரியன் மிக அருகில், அகால மனிதன், கால சர்ப்பம், ஆயிரம் கதவுகள் திறக்கட்டும், என் வீட்டுப் பூக்கள், உள்ளே எரியும் சுடர், கற்பனைச் சங்கிலிகள், வசுமதியின் முதல் விமானப் பயணம், வெகு தூரத்தில் மனம் போன்ற அவரது படைப்புகள் வாசகர்களைக் கவர்ந்தவை. "இவர் எழுதியவற்றை விட எழுதாமல் போனவைதான் உலகத்தின் மனித முகங்களின் உண்மைத் தன்மையைப் படம் போட்டுக் காட்டுபவை. இவரது அனுபவங்களை எழுத்தில் கொண்டு வந்திருந்தால் உலகத்துக்கு மற்றுமொரு தாஸ்தாயெஸ்கி தமிழ் மொழியில் கிடைத்திருப்பார்" என்கிறார் கவிஞர் தேவராஜன்.

எழுத்தையே தனது வாழ்வாதாரமாக கொண்ட ஸ்டெல்லா புரூஸ் பல திரைப்படக் கதை விவாதங்களிலும் பங்கு கொண்டுள்ளார். புகழ்பெற்ற சில படங்களில் அவரது முக்கியமான பங்களிப்பு உண்டு ஆனால் அவற்றை அவர் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. பெருமைப்பட்டுக் கொண்டதில்லை. எழுத்தின் மீது மட்டுமே ஆர்வம் கொண்ட அவர். தன்னையோ, தன் படைப்புகளையோ எப்போதும் முன்னிறுத்தாதவராக இருந்தார். வழுக்கைத் தலை; தமிழ்வாணன் போல் கண்களை முழுதுமாக மறைக்கும் கறுப்புக் கண்ணாடி; அரைக்கைச் சட்டை. இதுதான் அவரது தோற்றம். அடிப்படையில் தனிமை விரும்பியாக இருந்த ஸ்டெல்லா புரூஸ், தனது சிறந்த வாசகியாக இருந்த ஹேமாவை தனது 47ம் வயதில் திருமணம் செய்து கொண்டார். ஹேமாவும் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

##Caption##மனைவியோடு மனம் ஒருமித்து எளிமையாக வாழ்ந்த ஸ்டெல்லா புரூஸ், மென்மையான மன உணர்வு கொண்டவர். ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் மீதும், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் தத்துவங்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்திற்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். காளி அன்னையின் மீதும் அளவற்ற பற்று உண்டு. அதனாலேயே 'காளி-தாஸ்' என்ற புனை பெயரில் பல கவிதைகளை எழுதினார். ஸ்டெல்லா புரூஸின் நெருங்கிய நண்பரான கவிஞர் ஆத்மாநாம், அவரது கவிதைகளை தனது "ழ" இதழில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால் ஆத்மாநாமின் திடீர் தற்கொலை ஸ்டெல்லா புரூஸைப் பெரிதும் பாதித்தது. அதுபற்றி மிகவும் மனம் வருந்தினார். வாழ்வில் விரக்தி காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதை அவர் ஏற்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவரே தற்கொலை செய்துகொண்டது நம்பமுடியாத ஒன்று.

ஸ்டெல்லா புரூஸின் மனைவி ஹேமாவின் தங்கை பிரேமாவும் இவர்களுடன் வசித்து வந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, அந்தச் சோகம் ஹேமாவைத் தாக்கியது. நாளடைவில் அவருக்கும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. அடிக்கடி டயாலிஸிஸ் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மனச்சோர்வும், பொருள் விரயமும் கணவன், மனைவி இருவரையும் பாதித்தது. ஆன்மீகம் மற்றும் தியானத்தின் விளைவால் சில அதீத சக்திகள் தனக்குள் இருப்பதாகவும் அதன்மூலம் தனது மனைவியைக் காப்பாற்றி விடலாம் என்றும் ஸ்டெல்லா புரூஸ் நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்தது. மரணத்தைத் தழுவினார் ஹேமா. அந்த ஏமாற்றத்தையும், வாழ்வின் வெறுமையையும் ஸ்டெல்லா புரூஸால் தாங்க இயலவில்லை. மனைவியின் பிரிவினால் ஏற்பட்ட தனிமையாலும், அதன் விளைவாய் எழுந்த மன அழுத்தத்தினாலும் அதிகம் பாதிக்கப்பட்டார். நண்பர்கள் சிலர் ஆறுதலாக இருந்தபோதும் அவரது தனிமைத் துயரம் அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது. "நானும் ஹேமாவும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மிகமான இலக்கியத் தன்மையான காவியம்..... ஹேமாவின் துணை இல்லாத சூனியம், தாங்க முடியாததாக இருக்கிறது. தனிமைச் சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது. எனவே, ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது, மரண விடுதலை பெறுகிறேன்" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தனது மாறுபட்ட நடையாலும், இளமை பொங்கும் கதையம்சத்தாலும் வாசகர்களின் அன்பைப் பெற்ற ஸ்டெல்லா புரூஸ், கதையோடு ஒன்றி ஒரு படைப்பை வாசிக்கும், நேசிக்கும் வெகுஜன வாசகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com