சாதனைப் பாவையர்: மாஷா நஸீம்
எலக்டரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் மாணவி மாஷா நஸீம். திருச்செங்கோட்டில் படிக்கிறார். இளம் அறிவியல் சாதனையாளர். இவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உட்படப் பலரது பாராட்டுக்களைப்

பெற்றவை. பள்ளியில் படிக்கும் போதே 'பர்க்லர் அலார்ம்' எனப்படும் சென்ஸார் மூலம் உணர்ந்து ஒலியெழுப்பும் கருவியை உருவாக்கினார். அதற்குக் கிடைத்த பாராட்டு இவரைத் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட வைத்தது. இப்போது கிட்டத்தட்ட 8

கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். நெருப்பில்லா முத்திரை வைப்பான் (Flameless Seal maker), சுமைதூக்கி எந்திரன் (mechnical porter) ஆகியவை குறிப்பிடத் தக்கன. மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்

துறையின்கீழ் செயல்படும் 'நேஷனல் இன்னொவேஷன் ஃபவுண்டேஷன்' நடத்திய தேசிய அளவிலான 'இக்னைட் 2009' போட்டியில் இவரது நெருப்பில்லா முத்திரை வைப்பானுக்கு 2வது பரிசு கிடைத்தது. பரிசு வழங்கிப் பாராட்டியவர் கலாம்.

2010ம் ஆண்டிற்கான விருதைப் பெற்றார் இவர் படைத்த எந்திரன். இவர் உருவாக்கிய 'அதிநவீன ரெயில் கழிப்பறை' புதுதில்லியில் நடைபெற்ற உலக கழிப்பறைச் சுகாதார மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. அதற்காகப் பாராட்டும் பரிசுகளும்

வழங்கி கௌரவித்துள்ளனர்.

இதுவரை தனது கண்டுபிடிப்புகளுக்காக ஒரு சர்வதேச விருதையும், ஐந்து தேசிய விருதுகளையும் பெற்றிருக்கும் மாஷா, குஜராத் முதல்வர் நரேந்திர மோதி, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக ஆளுநர் பர்னாலா உட்படப் பலரால்

கௌரவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் பெருமைக்குரிய தேசிய அறிவியல் உதவித்தொகையை இவருக்கு வழங்கியுள்ளது.

அறிவியல் மட்டுமல்லாது பிற துறைகளிலும் மாஷாவுக்கு ஆர்வம் உண்டு. பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் கற்றிருப்பதுடன், ஓவியத்திலும், ஓட்டப்பந்தயத்திலும் மாவட்ட, மண்டல அளவில் பரிசுகளை வென்றிருக்கிறார். ரோபோடிக்ஸ் துறையில் தனி ஆய்வு செய்துவரும் மாஷாவுக்கு ஐ.ஐ.டி.யில் எம்.எஸ். பயில ஆசை. தொடர்ந்து பயனுள்ள பல கண்டுபிடிப்புகளைச் செய்யவும் விருப்பம். தற்போது வெடிகுண்டு வெடிக்காமல் தடுக்கும் கருவியையும் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மாஷா, தனது கண்டுபிடிப்புகளைப் பற்றிய கருத்துகளை mashanazeem.in என்ற இணைய தளத்தில் பகிர்ந்து கொள்கிறார்.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com