கான்கார்ட் முருகன் கோவிலுக்குத் தைப்பூச பாத யாத்திரை
குன்றுகள் நிறைந்த விரிகுடாப் பகுதியில் முருகன் வீற்றிருக்கும் கான்கார்ட் நகர் சிவ முருகன் கோயிலுக்கு தைப்பூச பாத யாத்திரை நடந்தேறியது. சான் ராமோன் தொடங்கி கான்கார்ட் பாத யாத்திரை செல்வது என்று தீர்மானமானது. வழியிலே யாத்திரிகர்கள் களைப்பாற, உணவருந்த, தகுந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன. இடையிடையே விரும்பும் பக்தர்கள் சேர்ந்து கொள்ள ஏதுவாகச் சில இடங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன. உணவு, குடி நீர் வழங்கவும் ஏற்பாடுகள் சீரிய முறையில் செய்யப்பட்டன. 18 மைல் தூர யாத்திரைக்கான திட்டம் வரையப்பட்டது.

ஜனவரி 23ம் தேதி காலை 6.30 மணிக்கெல்லாம் 'கான்கார்ட் முருகனுக்கு அரோகரா' என்ற முழக்கத்தோடு 87 பக்தர்கள் யாத்திரையைத் துவக்கினர். ஒரு சிலர் ஃப்ரீமாண்டில் (Fremont) இருந்து முதல் நாளே (22 ஆம் தேதி) பாத யாத்திரையை துவங்கி விட்டனர். அன்று மாலை சான் ரமோன் வந்தடைந்து மறு நாள் காலை அனைவருடனும் சேர்ந்து கொண்டனர். கடைசிக் கட்ட நடையான வால்டன் பார்க்கிலிருந்து மொத்தம் 152 பேர், குழந்தைகள் உள்பட, கோவிலை நோக்கிப் புறப்பட்டனர். சுமார் 3 மணியளவில் முதல் குழு பக்தர்கள் கோவிலை அடைந்தனர்.

இந்தியாவிலிருந்து வந்த ஒரு தாயும், தந்தையும் 25 ஆண்டுகளாக ஒவ்வொரு தைப்பூசத்திற்கும் காரைக்குடியிலிருந்து பழனிக்குப் பாத யாத்திரை செல்பவர்கள். இந்த ஆண்டு அமெரிக்கா வந்து விட்டபடியால் பழனிக்கு பாத யாத்திரை செல்ல இயலாமல் போய் விட்டதே என்ற குறையுடன் இருந்ததனர். இந்த யாத்திரையைப் பற்றிக் கேள்விபட்டதும் பழனிவாழ் பாலகுமாரனே தம்மை அழைத்தது போன்ற மிகுந்த மகிழ்ச்சி அவர்களுக்கு. இதிலே முக்கிய அம்சம் என்னவெனில் இவ்விருவரும் காலணிகள் அணியாமலே நடந்து வந்ததுதான். பிள்ளைகளின் வற்புறுத்தலின் பேரில் காலுக்கு சாக்ஸ் மட்டும் மாட்டிக்கொண்டனர்.

பக்தர் கூட்டம் கோவிலுக்குள் வந்தமர்ந்ததும், பூஜைகள் ஆரம்பமாகின. சூரபத்மனை வதம் செய்ய பார்வதி, முருகனுக்கு வேலாயுதத்தைக் கொடுத்த நாளைக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளின் சிறப்பினை குறிக்கும் வகையில் வேலுக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அர்ச்சனையும், ஆரத்தியும் நடைபெற்றன. கிட்டத்தட்ட பழனிக்கே சென்று வந்த அனுபவம் என்று கூறினால் அது மிகையாகாது. அறுபடை வீடு கொண்டவனின் அமெரிக்க வீடான கன்கார்டுக்குப் பாதயாத்திரை செல்லத் திட்டமிட்டு, செயல் வடிவம் கொடுத்த சோலை குடும்பத்தினர், உடன் உழைத்த உறவினர்கள், நண்பர்கள் பிற பக்தர்கள் அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கணேஷ் பாபு

© TamilOnline.com