மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத் திருவிழா
ஜனவரி 29, 2011 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் நிகழ்ச்சிகளைத் 'தித்திக்கும் தைத் திருவிழா'வாக மிச்சிகன் நோவை மேனிலைப் பள்ளியில் கொண்டாடியது.

பட்டி மன்றம் மற்றும் மழலைகள் முதல் பெரியவர் வரை பங்கு பெற்ற கிராமியக் கலை நிகழ்சிகள் அடங்கிய இவ்விழாவின் சிறப்பு அம்சமாகத் தமிழில் தபால்தலை வெளியிடப்பட்டது. சன் டிவி பட்டிமன்றம் புகழ் திரு. ராஜா வெளியிட, சங்க உறுப்பினர் திரு விஜயகுமார் காந்தி பெற்றுக்கொண்டார். மிச்சிகன் தமிழ் சங்க முத்திரை பொறிக்கப்பட்ட இத்தபால்தலை அமெரிக்க நாட்டில் தமிழ் மொழியில் வெளியிடப்பட முதல் தபால்தலை என்பது குறிப்பிடத்தக்கதும் பெருமைக்குரியதும் ஆகும்.

ஆனந்தப் பொங்கல் என்று துவங்கிய நிகழ்ச்சி அய்யனார் பட்டியில் கலாட்டா என அரங்கத்தை அதிரவைத்த பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இருந்தது. அனைத்திற்கும் மேலாக சன் டிவி பட்டிமன்றம் புகழ் ராஜா நடத்திய 'வாழ்க்கை மகிழ்ச்சியாக தோன்றுவது இந்தியாவிலா அல்லது அமெரிக்காவிலா' என்னும் நகைச்சுவை பட்டிமன்றம் கொட்டும் பனியை மறந்து இரவு பத்து மணி வரை மக்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்தியது.

தஞ்சை செல்வம்

© TamilOnline.com