சுப்ரஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
பிப்ரவரி 12, 2011 அன்று 'லாஸ்யா' நடனப் பள்ளி மாணவி சுப்ரஜா சுவாமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஏதர்டன்னில் நடந்தது. 'அருணாசல சிவ' என்ற புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தொடர்ந்த அலாரிப்பில் 'ஆடும் மயில்' பாடலில் முருகனைத் துதித்தும், அபிஷேகம் செய்தும், காவடி எடுத்து ஆடியும் அபிநயம் பிடித்தது சிறப்பாக இருந்தது. மீனாட்சி திருவிளையாடல்களை விளக்கிய வர்ணம் நிகழ்ச்சியின் சிகரம். சிறப்பான அபிநயமும், முகபாவங்களும் நடனத்திற்கு மெருகூட்டின. 'ஆனந்தக் கூத்தாடினார்' பாடலிலும், கிருஷ்ணரின் இளமைக்காலக் குறும்புகளை விளக்கும் 'முத்துகாரே யசோதா' பாடலிலும் சுப்ரஜாவின் சிறப்பான அபிநயம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. தில்லானா வெகு விறுவிறுப்பு. சுப்ரஜா சுவாமிக்கு 'நாட்ய ப்ரியா' என்ற பட்டத்தை குரு வித்யா சுப்ரமணியன் வழங்கினார். முடிவில் 'அருணாசல சிவ' பாடலுடன் சுப்ரஜா சுவாமியின் பரத நாட்டிய அரங்கேற்றம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. குரு வித்யா சுப்ரமணியன் (நட்டுவாங்கம்), ஆஷா ரமேஷ் (குரலிசை), நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோர் நிகழ்ச்சிக்குப் பெரும் பக்கபலம்.

வர்தினி நாராயணன்,
கூபர்டினோ, கலிபோர்னியா

© TamilOnline.com