செல்சி தாஸ் பரதநாட்டிய அரங்கேற்றம்
பிப்ரவரி 19, 2011 அன்று குரு இந்துமதி கணேஷ் அவர்களின் சிஷ்யை செல்சி தாஸ் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் நடைபெற்றது.

துல்லியமான தாளக்கட்டு, சிரித்த முகம், சிறப்பான லௌஷ்டகம், அளவான பாவம் இவற்றோடு பத்து வருடப் பயிற்சியின் நேர்த்தியுடன் ஆடினார் செல்சி. நாட்டை ராகத்தில் அமைந்த புஷ்பாஞ்சலியுடன் நடனத்தைத் துவங்கினார். அடுத்தாடிய ஜதிஸ்வரத்தின் அடவுகள் முழுமையாகவும் சுத்தமாகவும் இருந்தன. புலவர் ம.முத்தையா இயற்றிய “பனிமயமே“ மாதாவின் அமைதி ஸ்வரூபத்தையும், தூய்மையையும், கருணையையும் ப்ரதிபலிப்பதாய் அமைந்த பாடலுக்கு ஆடியபோது பாடலுக்கு அபிநயித்தார் என்பதைவிட இயல்பாக வெளிப்பட்டது என்கிற உணர்வைத் தந்தது. வர்ணத்தில் பெ. தூரன் இயற்றிய பாடலுக்கு கண்ணன் மீதுள்ள காதலில் கசிந்துருகித் தவிக்கும் சிருங்கார நாயகியாக, கோபியரை மயக்கும் கண்ணனாய், மண்தின்ற வாயில் உலகைக்காட்டும் கிருஷ்ணனாய், தாயாய்க் காட்டிய ரசங்கள் பாராட்டும்படியும், ஜதிக் கோர்வைகளுக்கு லயம் சிறக்க ஆடிய பாத வேலை உழைப்பையும், அர்ப்பணிப்பையும் காண்பித்தன.

அடுத்து ஆனந்த நடமிடும் என்கிற நடராஜரைப் பற்றிய பாடலுக்கும், ஒடோடி வந்தேன் என்கிற கண்ணனைப்பற்றிய பாடலுக்கும் ஆடினார். துயர் களையும் துர்கையின் பாடலில் தாயாய் அன்பைக் கண்களால் வெளிப்படுத்தி, சிம்மவாஹினியாக எழுந்து தீயவற்றை அழிக்கும் தேவியாய் சீற்றம் காட்டி துர்கையின் பல சொரூபங்களை அழகாக ஆடி உணர்த்தியது பாராட்டும்படி அமைந்திருந்தது.

ரங்கநாயகி இயற்றிய தில்லானாவுக்கு ஆடி அரங்கேற்றத்தைச் சிறப்பாய் நிறைவு செய்தார்.

செல்சியின் தந்தை ம. லாரன்ஸ் ஆரோக்கியதாஸ் இந்தியர், தாய் ஜாய் ஷியன், சீன-கொரிய நாட்டைச் சேர்ந்தவர் எனினும் இக்கலையில் பலவருடங்கள் தங்கள் மகளை ஊக்குவித்ததோடு இந்தியப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் இந்த தெய்விகக் கலையை தன் மகள் பயின்றதும், அரங்கேற்றம் செய்ததும் நெகிழ்சியானது எனவும், நம் கலாசாரம் தம் மகளுக்கு தொடர இந்தச் சாஸ்திரிய நடனம் ஒரு பற்றுக் கோடாக இருந்தது என்று கூறியதோடு, குரு இந்துமதி கணேஷ் அவர்களை நன்றியோடு குறிப்பிட்டார்.

குரு இந்துமதியின் நேர்த்தியான நடன அமைப்பும், நட்டுவாங்கமும் சிறப்பாக அமைந்திருந்தன. ஆஷா ரமேஷின் வாய்ப்பாட்டும், நாராயணனின் மிருதங்கம், சாந்தி நாராயணன் வயலினும், மகாதேவனின் மோர்சிங்கும் மிகச்சிறந்த பக்கபலமாய் அமைந்தன.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com