ஆசிரியர் நாகநந்தி வாழ்ந்த காலத்திலேயே தமிழறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்; பாராட்டப்பட்டவர்; ரசிக்கப்பட்டவர். ஔவை நடராசன் தொடங்கி, பட்டிமன்றப் பேச்சாளர் பேரா. ராஜகோபாலன் (சென்னை கிறிஸ்தவக் கல்லூரி) என்று மிகப் பல தமிழறிஞர்கள் அவருடைய அறிவின் வீச்சை உணர்ந்திருந்தனர். நாடகத் துறையிலும் ஆசிரியர் ஈடுபட்டிருந்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆர்.எஸ். மனோகருக்கு அவர் எழுதித் தந்த 'துரியோதனன்' நாடகம் 1977ம் ஆண்டுக்கான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் 'சிறந்த நாடக' விருதைப் பெற்றிருந்தது. ஜஸ்டிஸ் என்ற பெயரில் (கல்கியின் சிறுகதையான தூக்குதண்டனையின் அடிப்படையில் எழுதியது) அவர் எழுதிய நாடகத்தை மேஜர் சுந்தரராஜன் பற்பல முறை அரங்கேற்றினார். அவருக்கு முன்னால் டைரக்டர் விஜயன் 'தூக்கு தண்டனை' என்ற பெயரிலேயே அந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார். ஆசிரியரே மேடையேறி அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். டைரக்டர் கே. பாலசந்தர், அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில், ஆசிரியரும் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தார். கே பாலசந்தருடன் ஒரே பிரிவில் பணியாற்றினார். பிறகு, அரசுப் பணியை உதறிவிட்டு, தமிழ்பால் இருந்த காதலால், கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
"நிலையான அரசாங்க உத்தியோகத்தை விட்டுவிட்டு நிலையற்ற தமிழாசிரியர் வேலையில் நான் இருக்கிறேனென்றால் அதற்குத் தமிழ்தான் காரணம்" என்று பலமுறை இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி, கே பாலசந்தருக்கும் ஆசிரியருக்கும் நெருங்கிய நட்பிருந்தது. ஜெயகாந்தனும் ஆசிரியரும் ஆனந்தவிகடனில் 'முத்திரைச் சிறுகதைகள்' பலவற்றை எழுதியிருக்கிறார்கள். ஒருவாரம் ஜெயகாந்தன் கதை என்றால், அடுத்த வாரம் நாகநந்தியின் கதை வெளிவருவது 1960களில் வழக்கமாகவே இருந்தது. ஜெயகாந்தன் பெரிதும் மதித்த, நெருங்கிய நண்பர் ஆசிரியர். 'அடாபுடா நண்பர்கள்' என்பார்கள் அல்லவா, அப்படி, 'வாடா போடா' என்று பேசிக்கொள்ளுமளவுக்கு இருவரும் நண்பர்கள். தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் இப்போதல்லாம் நடிக்கும் (பாரதி திரைப்படத்தில் எட்டயபுரம் ஜமீந்தார் பாத்திரமேற்று நடித்திருந்த) நடிகர் அமரசிகாமணியும், ஆசிரியருடைய தயாரிப்பே. 'நான் நடிக்க வந்ததே அவரால்தான்' என்று அமரசிகாமணி இப்போதும் குறிப்பிடுகிறார். நடிகர் சிவகுமார் ஆசிரியரைப் பலமுறை நேரில் வந்து சந்திப்பார்.
இப்படி, ஆசிரியரின்பால் பெருமதிப்பும் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் (அதாவது நான் இப்போது பேசப்போகும் தலைப்புக்கு நேரடியான தொடர்புள்ளவர் என்பதால் குறிப்பிடத்தக்கவர்; மற்றவர்களெல்லாம் குறிப்பிடப்பட தகாதவர்கள் என்று சொல்ல வரவில்லை!) எழுத்தாளரும், நாடகாசிரியரும், திரைத்துறையாளரும், பத்திரிகையாளருமான கோமல் சுவாமிநாதன். அவருடைய சுபமங்களா பத்திரிகை வெற்றிகரமான, தரம்வாய்ந்த பத்திரிகையாகப் பிரபலமாகியிருந்த சமயம் அது. 1991-92 வாக்கில் இருக்கலாம். அந்தச் சமயத்தில் ஆசிரியர் கல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் பாரதியைப் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றிவிட்டு வந்திருந்தார். பிறகு, திருக்குறளும் நிர்வாகமும் என்ற தலைப்பிலும் ஆங்கில உரைகளை நிகழ்த்தினார்.
இப்படிப்பட்ட சூழலில், கோமல், ஆசிரியருடைய தொடர் சொற்பொழிவு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். மாதம் ஒருமுறை, மூன்று மணிநேரம் உரை. ஆசிரியர் நிகழ்த்துவார். தலைப்பு, பாரதியின் குயில் பாட்டு. ஆறு மாத காலம் இவ்வாறு, ஆறு தகவணைகளில், சுமார் 18 மணிநேரம் குயில் பாட்டை மட்டும் விரித்துப் பேசினார். அதன் சுருக்கம் சுபமங்களாவில வந்துகொண்டிருந்தது. எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் ஞானக்கூத்தன் போன்றவர்களெல்லாம் அரங்கில் திரண்டிருந்தனர். இலக்கியச் சிந்தனையின் மாதாந்தரக் கூட்டங்கள் நடைபெறும் அதே இடத்தில் ஆசிரியர் உரையாற்றினார்.
குயில் பாட்டில் 18 மணிநேரம் பேச என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றகிறதல்லவா? பாடலின் இறுதியில் பாரதி இரண்டடிகளைச் சேர்த்திருக்கிறான். ஒரு பேச்சுக்குச் சொன்னால் இரண்டடி; டெக்னிக்கலாகச் சொன்னால் மூன்றடி!
ஆன்ற தமிழ்ப்புலவீர், கற்பனையே யானாலும் வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே யிடமிருந்தால் கூறீரோ?
ஆன்ற தமிழப்புலவீர் என்றொரு விளி. 'இந்தக் கதை ஒரு கற்பனைதான். என்றாலும் இதற்கு ஏதாவது வேதாந்தமாகப் பொருள் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல இடமிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்களேன்.' இந்த அடிகளில் தொனிப்பது என்ன என்பதே பட்டிமன்றத்துக்கு (அதாவது முறையாக நடக்கும் பட்டிமன்றத்தைச் சொன்னேன். தற்காலத் தொலைக்காட்சி கிச்சுகிச்சு மூட்டிகளையல்ல.) உரிய தலைப்பு.
இதில் தொனிப்பது கிண்டல் என்றொரு கட்சி உண்டு. 'யப்பா! தமிழ்ப் புளுவனுங்களா! எதுடா சாக்கு... எங்கடா இடுக்கு கெடைக்கும்... எதுலடா ஏதானும் ஒரு வெட்டி வேதாந்தத்தைப் புகுத்தி, நம்முடைய ஆழ்ந்த தமிழ்ப் பயிற்சியையும்(!) வேதாந்தத் திறமையையும் வெளிக்காட்டிக் கொள்ள எங்காவது எப்படியாவது, எதிலாவது ஒரு சாக்கு கிடைக்குமா என்று நோண்டிக் கொண்டிருப்பதுதானே ஒங்க முழு நேர வேலை! அப்படி ஒரு கதையை இங்கே சொல்லியிருக்கிறேன். இதில் மனிதன் இருக்கிறான்; குயில் இருக்கிறது; குரங்கு இருக்கிறது; மாடு இருக்கிறது. எல்லாம் மனித மொழியில் பேசுகின்றன. அல்லது அவற்றின் பேச்சு மனிதனுக்குப் புரிகிறது. குயில் முதலில் மனிதனை (சேரமான் என்பவனை-இளவரசனாக இருந்து, கொல்லப்பட்டு, பிறகு தொண்டை வளநாட்டில் ஒரு மனிதனாகப் பிறந்து வளர்ந்து கொண்டிருப்பவனை) காதலிக்கிறது. நான்கு நாள் கழித்து அவனை வரச் சொல்கிறது. ஆனால் இவனோ அடுத்த நாளே போய் நிற்கிறான். பார்த்தால், குயில், ஒரு குரங்கோடு இந்த மனிதனிடம் பேசிய அதே காதல் மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கிறது? எப்படி? குரங்கு பாஷையில்! பாரதி சொல்கிறான்:
வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை யானறிந்து கொண்டுவிட்டேன் யாதோ ஒருதிறத்தால்
குயில் குரங்கு பாஷையில் கொஞ்சிக் கொண்டிருந்ததை, என்னவோ ஒரு விளக்கத் தெரியாத திறத்தினால் இந்த மனிதனான பாரதி புரிந்துகொண்டுவிட்டான். உடனே, இரண்டையும் கொல்வதற்காக வாளை உருவுகிறான், (வாளை இந்தப் பிறப்பிலும் உருவுவதால் இவன் இன்னமும் இளவரசன்தான் என்பது குறிப்பு.) என்ன மாயத்தினாலோ, குயில், குரங்கு எல்லாம் மறைந்துபோய் விடுகின்றன.
துக்கம் தொண்டைய அடைக்க இவன் வீடு திரும்புகிறான். பிறகு அவனுக்கே விருப்பமில்லாத போதிலும் கால் அவனைத் தானாகச் செலுத்த, மறுபடியும் அந்த மாஞ்சோலைக்குத் தன்னையறியாமல் போகிறான். இப்போது குயில் மறுபடியும் அதே காதல் மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கிறது. யாருடன்? ஒரு மாட்டுடன்!
ஆசைதான் வெட்க மறியுமோ" என்றுபல நேசவுரை கூறி, நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை எண்டிசையு மின்பக் களியேறப் பாடியதே.....
இப்போது மாட்டின் அழகையும் பொலிவையும் அறிவையும் பாரம் சுமக்கும் திறமையையும் புகழ்ந்து, அதனால் உன்னுடன் எனக்குக் காதல் உண்டாகிவிட்டது என்று பேச்சு! மறுபடியும் இந்த மனிதன்--சேரமான் என்றே வைத்துக் கொள்வோம்--இரண்டையும் கொல்ல முனைகிறான். இந்தமுறை வாளைக் காளையின்மேல் வீசுகிறான். காளை தப்பித்து ஓடிவிடுகிறது. குயிலும், காட்சியும் மறைந்துவிடுகின்றன.
நான்காவது நாள் வருகிறது. வேண்டா வெறுப்பாகச் சேரமான் குயிலைப் பார்க்க வருகிறான். பிறகு பல உண்மைகள் தெரியவருகின்றன. முன் ஜன்மத்தில் இருவரும் காதலித்ததும், இந்தக் குயில் அப்போது ஒரு வேடர்குலத் தலைவனுடைய மகளாக, சின்னக் குயிலி என்ற பெயருடன் வளர்ந்ததும், சேரமான் இளவல் இவளைச் சந்தித்து இருவரும் காதலில் வீழ்ந்ததும்.... அந்தச் சமயத்தில் சின்னக் குயிலியின் முறைமாமன்களான (மொட்டைப் புலியனுடைய மூத்த மகன்!) நெட்டைக் குரங்கன்; மாடன் என்ற பெயர்கொண்ட இன்னொரு மாமன் மகன். இருவரும் சின்னக் குயிலியை மணக்க விரும்புகிறார்கள். குயிலி சம்மதித்துவிடுகிறாள். "காதலினா லில்லை, கருணையினா லிஃதுரைத்தாய்" என்று கவி குறிப்பிடுகிறான். (காதலினால் அல்ல என்ற தலைப்பில், இந்தத் தொடரைப் பயன்படுத்தி, மலேசிய எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு ஒரு கதையே எழுதியிருக்கிறார். மதுரைத் திட்டத்தில் உள்ளது. ஜெயகாந்தனும் இந்தத் தலைப்பைப் பயன்படுத்திய நினைவிருக்கிறது,)
இருவருக்கும் இப்படிச் சொல்லி 'ஏச்சுக் கட்டிப்பிட்டு' சின்னக் குயிலி, சேரமான் இளவலுடன் ஓடிப்போய்விட எத்தனிக்கிறாள். இருவரும் தனித்திருக்கும் நேரத்தில் நெட்டைக் குரங்கனும் மாடனும் பின்புறமாக வந்து சேரமானை வெட்டிச் சாய்த்துவிடுகிறார்கள். சின்னக் குயிலி இறந்து இந்த ஜன்மத்தில் குயிலாகப் பிறக்கிறது. 'பறவையாக இருந்த போதிலும் தனக்கு ஏன் மானிடர் மொழி புரிகிறது' எனறு குழம்புகிறது. ஒரு முனிவர் வருகிறார். குயில் அவர் காலில் விழுந்து காரணத்தைக் கேட்கிறது. முனிவர் முற்பிறவிக் கதையைச் சொல்லி, "இந்தப் பிறவியில் உன் காதலன் தொண்டை மண்டலத்தில் பிறந்திருக்கிறான். அவனை நீ பார்த்ததுமே அடையாளம் கண்டுகொள்வாய். நீ குயிலாக இருப்பதால் அவனுக்குத்தான் உன்னைத் தெரியாது. இருவரும் காரணம் புரியாமல் காதல் வசப்படுவீர்கள். ஆனால் ஒன்று. அந்தப் பசங்க மாடனும் குரங்கனும் இப்பவும் பிறந்திருக்கிறார்கள். மாடன் மாடாகப் பிறந்திருக்கிறான். குரங்கன் குரங்காகப் பிறந்திருக்கிறான். ஜாக்கிரதை. என்ன செய்யவேண்டும் என்று சொல்ல இப்போது எனக்குப் பொழுதில்லை. சந்தியா வந்தனம் செய்ய சமயம் ஆனது" என்று கூறிவிட்டுப் போய்விடுகிறார்.
எனவேதான் குயில், குரங்கையும் மாட்டையும் இந்தப் பிறவியிலும் காதலிப்பதுபோல் நடித்ததைச் சொல்கிறது. 'இதை நீங்கள் நம்பி என்னை ஏற்றுக் கொண்டாலும் சரி அல்லது உங்கள் கையால் என்னைக் கொன்றுபோட்டாலும் சரி' என்று இவர் (பாரதிதான் இப்போது இந்த 'இவர்'!) காலில் விழுகிறது. காலில் விழுந்த குயிலைக் கையில் அள்ளி முத்தமிடுகிறான். உடனே Snow White and Seven Dwarfs கதையில் வருவதைப் போல் இளவரசன் முத்தமிட்டதும் இறந்து போனதாகக் கருதப்பட்ட ஸ்னோ ஒயிட் எழுவதைப் போல், குயிலுருவம் நீங்கி, கண்ணைப் பறிக்கும் அழகான மங்கையாக மாறுகிறது குயில். (இந்த knot--முடிச்சு--பாரதியின் இன்னொரு கவிதையில் அவிழ்கிறது. காதலியை முத்தமிட்டு எழுப்பி இளவரசனைப் பற்றி வேறொரு கவிதையில் பாரதி குறிப்பிடுகிறான். (அதெல்லாம் அப்புறம்.)
இவ்வளவு போதாதா! பாரதி கிண்டலாகத் தமிழ்ப் புலவர்களை விளிப்பதும், 'வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க ஏதாச்சும் கொஞ்சம்போற எடமிருக்கா' என்று நக்கலுடன் கேட்பதும் பற்பல தமிழ்ப் பண்டிதர்களுக்கு விளங்கவில்லை. 'ராமன்தான் பரம்பொருள். சீதை ஆன்மா. அதை ஆசை, கோபம், காமம் எல்லாவற்றையும் அடையாளப்படுத்தும் ராவணன் என்னும் அரக்கன் எடுத்துக்கொண்டு போய்விடுகிறான். ஆன்மா, கடைசியில் தீக்குளித்துப் பரம்பொருளுடன் சேர்கிறது' என்று ராமாயணத்துக்கு ஓர் உள்ளர்த்தம் சொல்வதைப்போல் ஆளாளுக்கு ஒரு வேதாந்த விளக்கத்தோடு புறப்பட்டுவிட்டார்கள்! கீட்ஸின் Ode to a Nightingale கூட இதற்குத் தப்பவில்லை. பாரதி குயில் பாட்டை இயற்ற இந்த ஓட் டு எ நைட்டிங்கேல் ஏற்படுத்திய தாக்கம்தான் காரணம் என்று வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும் அரை-ஆங்கில-குறை-தமிழப் பண்டிதர்களும் உண்டு.
பேரறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் இப்படி ஒரு முயற்சி செய்திருக்கிறார்கள். நம் ஆசிரியருடைய பார்வை அங்கிருந்துதான் விரிகிறது. நம் ஆசிரியர் தெபொமீயின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.
ஆசிரியரின் விளக்கத்துக்கு வருகிறேன். அதற்கு முன்னால், இந்தக் கிண்டல் தொனியை அவரும் சுட்டியிருப்பதையும் சொல்கிறேன்.
ஹரி கிருஷ்ணன் |