'அவுட்ரீச்' ஆற்றிவரும் உதவி
நீங்கள் ஊனமுற்றவர், முதியவர் அல்லது உடல்நலம் குறைந்தவரா? நீங்கள் அவுட்ரீச் அமைப்பின் வழியே அமெரிக்க அரசு தரும் அற்புதச் சலுகைகளைப் பெற முடியும்.
அவுட்ரீச் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டால்தான் சலுகைகள் கிடைக்கும். முதலில் டாக்டரிடமிருந்து மருத்துவச் சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். பின் பயணம் செய்ய உதவி கோரி, மருத்துவச் சான்றிதழுடன் கடிதம் வைத்து அவுட்ரீச் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மனுதாரரை நேரில் கூப்பிட்டு அவர்கள் பார்த்து சரி என்று சொன்னதும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். பயணம் செய்யும் போது உதவியாளர் தேவை என முன் கூட்டியே எழுதிக் கொடுத்தால் அடையாள அட்டையில் சிறிய மனித உருவம் பதித்திருக்கும். அடையாள அட்டையில் மனுதாரரின் பெயர், பதிவு எண் ஆகியவை கொண்ட அடையாள அட்டையை வீட்டிற்கு அனுப்புவார்கள்.

பயணம் செல்ல நேரிடும் போது முதல்நாளே அலுவலகத் தலைபேசி எண்ணில் கூப்பிட்டு நம் அடையாள அட்டையின் எண், பெயர் குறிப்பிட்டு நாம் கிளம்பும் தேதி, நேரம், விலாசம், போக வேண்டிய இடத்தின் விலாசம் தெரிவித்தோமானால் நாம் சொன்ன நேரத்திற்குத் தவறாமல் வந்து நம்மை அழைத்துச் செல்கின்றனர். உடல் நலம் குன்றி நடக்க முடியாமல் அவதிப் படுபவர்களுக்கு ஓட்டுநர் உதவி செய்து நிதானமாக ஏற்றி, இருக்கையில் உட்கார வைத்து பெல்ட் போட்டுவிட்டு, எல்லாம் சரியாக இருக்கிறதா என உறுதிசெய்த பின்னரே காரை எடுக்கின்றனர். சில சமயம் வெவ்வேறு இடத்தில் காத்திருப் பவர்களையும் அவரவர் போக வேண்டிய இடத்தில் இறக்கி விடுகின்றனர். திரும்பி வரும்போதும் இதே மாதிரியாக நம்மை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விடுகின்றனர்.

நாட்டின் எல்லைக்குள் எந்த இடத்திற் குப் போகவேண்டும் என்றாலும் போக வரக் குறைந்த கட்டணமாக 7 டாலர் வசூல் செய்கின்றனர். முன்கூட்டியே ஒரு தொகையை அலுவலகத்தில் செலுத்தி விட்டோமானால் ஒவ்வொரு முறையும் பயணம் செய்யும்போது கழித்துக் கொள்வார்கள்.
இந்த அவுட்ரீச் அட்டையைக் காண்பித்து V.T.R. பேருந்தில் எங்கு வேண்டு மானாலும் இலவசமாகப் பயணம் செய்யலாம். அடையாள அட்டையில் சிறு மனித உருவம் பதித்திருந்தால் உதவி யாளரும் இலவசமாகப் பஸ்ஸில் பயணம் செய்யலாம்.

மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல, விசேஷங்களில் கலந்துகொள்ள, கடை கண்ணிக்குச் செல்ல நம் பிள்ளைகளை அலுவலக நேரத்தில் தொந்தரவு செய்யாமல், நாமே வெளியில் பாதுகாப்புடன் சென்று திரும்பி வர இந்த அவுட் ரீச் உதவி வரப்பிரசாதமாக உள்ளது. இதற்காக அமெரிக்க அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதிக விவரங்களுக்கு:
http://www.outreach1.org/p_home/paratran.htm

சீதா துரைராஜ்

© TamilOnline.com