தெரியுமா?: காஞ்சிப் பெரியவர் மணிமண்டபம்
மகா பெரியவர் எனப் போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் மிகப்பெரிய நினைவு மண்டபம் ஒன்று காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது. செங்கல், சிமெண்ட், கம்பி போன்ற நவீனப் பொருட்கள் ஏதுமில்லாது முழுக்க முழுக்க சில்ப சாஸ்திர அடிப்படையில் உருவான மண்டபம் இது. தலைமைச் சிற்பி ஸ்ரீ கணபதி ஸ்தபதி தலைமையில் 250க்கும் மேற்பட்ட சிற்பிகளின் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து மணிமண்டபத்தை உருவாக்கியுள்ளனர். கருவறை விமானம் 100 அடி உயரத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கால் மகா மண்டபம், பாதுகா மண்டபம், ருத்ராட்ச மண்டபம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலின் இரு புறமும் அழகிய யானைகள் வரவேற்கின்றன. மண்டபத்தின் இருபுறத்தையும் காலச்சக்கரம் தாங்குகிறது. அவற்றில் 12 ராசிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தூண்களில் உள்ள யாளியின் வாயினுள் உருளும் பந்தை வெளியில் எடுக்க முடியாதபடி அமைந்திருப்பது அற்புதம். கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலி, சிவபெருமான் பிரதோஷ தாண்டவம், தட்சிணாமூர்த்தி, ஆதிசங்கரர், சங்கரமடம் பீடாதிபதிகள், மகாபெரியவர் உருவம், யானை சிலை, நந்தி சிலை ஆகியவை கண்ணைக் கவர்கின்றன. மூன்றரை ஏக்கர் பரப்பளவில் 250 அடி நீளம், 100 அடி அகலத்தில் கம்பீரமாக நிற்கிறது மணிமண்டபம். முன்புறம் காணப்படும் நந்தி, தஞ்சாவூர் பெரியகோவில் நந்தியை விட மூன்று அங்குலம் உயரம் அதிகம். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இந்நந்தி, 17.5 அடி நீளமும், 7.5 அடி அகலமும், 11 அடி உயரமும் கொண்டது. தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், திருபுவனம் கோவில் விமானங்களை விட, இந்த மணிமண்டபத்தின் விமானம் பெரிது என்பது மற்றொரு சிறப்பு.



© TamilOnline.com