தெரியுமா?: எஸ்.பொ.வுக்கு இயல் விருது
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டாலர் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல். ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி போன்றவர்களைத் தொடர்ந்து விருதுக்குரியவராக இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டிருக்கும் எஸ்.பொ., அறுபது வருடங்களுக்கு மேலாகத் தமிழ் இலக்கியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

1932ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்.பொ. சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரிப் பட்டதாரி. இலங்கையிலும் நைஜீரியாவிலும் ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலங்கைப் பாட விதான சபை, திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியவற்றிலும் சில காலம் கடமை ஆற்றியவர். தன் பதின்ம வயதுகளிலேயே எழுத்துத் துறையில் கால் பதித்த அவர் இன்றுவரை ஓய்வொழிச்சலின்றி எழுதி வருவதுடன் சுவையான பேச்சாளரும் ஆவார். அவருடைய முதல் நாவல் 'தீ'. மற்றவர் எவரும் எழுதத் துணியாத சுயபாலுறவை 1960ல் சொன்னபோது பண்டிதர்கள், புனிதர்கள் அவரைத் 'துடக்கு' எனச் சொல்லித் தூர விலக்கினார்கள். அவருடைய 'வீடு' சிறுகதைத் தொகுதி பல்வேறுபட்ட மொழியாளுமைகளையும் பரிசோதனைச் சிறுகதைகளையும் வெளிக்கொண்டு வந்தது. அவருடைய இரண்டாவது நாவல் 'சடங்கு.' அக்கால மத்தியதர வர்க்க அரச எழுது வினைஞரின் வாழ்க்கையையும் யாழ்ப்பாணப் பின்னணியையும் அவற்றுக்கேயுரிய மொழி, அங்கதம், வாழ்வியல் கூறுகளுடன் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் யதார்த்தமாக கையாண்ட சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த, நாவல் அது. அவரின் 'நனவிடை தோய்தல்' 1940, 50 யாழ்ப்பாண சமூகத்தை அழகாகப் படம் பிடித்த புகைப்படக் கருவி.

இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற நூலும் பிரசித்தமானது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இருபத்தைந்துக்கு மேலான நூல்களை எழுதியுள்ள எஸ்.பொ. அண்மையில் வெளியிட்ட 'மாயினி' நாவல் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் நிலைகொண்டிருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகள் நாவலில் நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 பக்கங்களில் 'வரலாற்றில் வாழ்தல்' என்ற தமது சுயசரிதை நூலையும் எழுதியுள்ளார். ஓர் ஈழத்து எழுத்தாளரின் வாழ்வையும், சமகால இலக்கிய ஆளுமைகளையும், இலங்கை அரசியலையும் ஒருங்கே கூறுகிறது இந்நூல். 'தேடல்தான் புதிய அனுபவங்களையும் புதிய தரிசனங்களையும் புதிய விளக்கங்களையும் புதிய ஆர்வங்களையும் புதிய உற்சாகங்களையும் புதிய ஞானத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது' என்று சொல்லும் எஸ்.பொ. இன்றும் தனது படைப்புகள் மூலம் தமிழுக்குப் புதிய பரிணாமத்தைத் தந்துகொண்டிருக்கிறார்.

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழக்கம்போல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com