என் பேரு ஞானக்கூத்தன். குமட்டில் குத்து வாங்குவோர் சங்கம் ஆரம்பிச்சிருக்கேன்யா! அதுக்கு வந்திருக்குற வரவேற்பைப் பார்த்தாதான் என்னை மாதிரி மனைவி, மக்கள், மாமியார் எல்லார்கிட்டையும் இடி வாங்கற ஆளுக ஊருல மலிஞ்சு போயிருக்காங்கன்னு தெரியுது.
பொம்பளைங்க மனசப் புரிஞ்ச ஆம்பளைங்க யாரானும் கோர்ஸ் எடுத்தா நான் கண்டிப்பா போய் சேர்ந்துக்கலாமுன்னு இருக்கேன். எவ்வளவு செலவானாலும் சரி. பின்ன என்னங்க? இவங்களுக்கு எப்ப கோவம் வரும் எதுக்கு கோவம் வரும்னு சொல்லவே முடியலயே! ஒருநாள் ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமாய் என்ன உக்கார வச்சு "என்னங்க, எங்கிட்ட என்ன வித்யாசம் கண்டுபிடிங்க" அப்படீன்னாள். ஆஹா, இன்னிக்கு நமக்கு நேரமே சரியில்லை. நல்ல நாள்லயே நல்லதுக்கும் கெட்டதுக்கும் வித்யாசம் தெரியாது. இதுல இவகிட்ட என்னத்த கண்டுபிடிப்பேன்னு தெரியலையேன்னு நெனச்சுகிட்டே "நீயே சொல்லும்மா" அப்படீன்னேன். "தெரியலை? சரியா பார்த்து சொல்லுங்க" என்றாள்.
"புதுப்புடவை கட்டிருக்க போலருக்கே. அம்சமா இருக்கே"ன்னு சொல்லி வச்சேன். "சும்மாதான சொல்றீங்க. இது எவ்வளவு பழைய புடவைன்னு தெரியாதா?" என்றாள். "ஓ, உன் பிறந்த நாளைக்கு நான் வாங்கிக் கொடுத்த தோடு போட்டிருக்கியா? என் செலக்சன் அசத்தலா இருக்கு. நீ மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா" என்றேன். ஒரு மொறப்பா பார்த்துட்டு "விளையாடாதீங்க. இது எங்கப்பா போட்ட தோடு. ஒரு கல்லு வேற விழுந்திருக்கு. மாத்தணும்னு போன வாரம் கூட சொன்னேன். சரி, சரின்னு தலையாட்டினீங்க" என்றாள். சத்தியமாச் சொல்றேன். என் அலமாரில இருக்குற என் சட்டையே புதுசா பழசான்னு எனக்குத் தெரியாது. இவங்க விசயமெல்லாம் நமக்கு எங்க ஞாபகம் இருக்கும். விடமாட்டேங்கறாளேன்னு "நீயே சொல்லும்மா. எங்கண்ணுக்கு என்னிக்கும் நீ ராசாத்தி மாதிரிதான் இருக்க" என்று பொய்சொல்லித் தப்பிக்கப் பார்த்தேன்.
"இடுப்பு வரைக்கும் இருந்த முடியக் கட் பண்ணி, சின்னதா அழகா பாப் பண்ணியிருக்கேன். எதிர்வீட்டு சரவணன் கூட ரொம்ப ஸ்மார்டாக இருக்குன்னு சொன்னான். ஜிம்முக்குப் போனா க்யூட்டா இருக்குன்னு தெரியாதவங்கெல்லாம் சொல்றாங்க. உங்க கண்ணுக்கு மட்டும் தெரியாம போச்சா? இல்ல நல்லதா ரெண்டு வார்த்த சொன்னா சொத்துதான் அழிஞ்சி போயிருமா?" என்றாள். அப்பதான் இவ தலமுடியக் கட் பண்ணியிருக்கறதை கவனிச்சேன். எத்தனை அழகான கூந்தல். பொண்ணு பார்க்க போயிருந்த போது இவ நீளமாய் ஜடைபின்னி பூ வச்சிருந்த அழகைப் பார்த்தவுடன் இவளத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தீர்மானம் பண்ணினேன். இதுவும் நல்லாதான் இருந்தது. ஆனால் அதுபோல இல்ல. "ஓ, நான் உக்கார்ந்திருந்தேனா, அதான் தெரியலை. சூப்பரா இருக்குமா. இப்ப உன்னைப் பார்த்தால் முப்பது வயசுன்னு சொல்லவே முடியாது" என்றேன். "என்னது முப்பதா? நீங்களே வயசக் கூட்டிக்கிறீங்களே. எனக்கு இருவத்தி ஒம்பதுதான் முடிஞ்சிருக்கு. முடிஞ்ச வயசத்தான் சொல்லுவாங்க." என்றபடி கோவத்துடன் நகர்ந்தாள்.
நம்மகிட்ட ஒரு வேலையை செய்யச் சொல்லிட்டா அப்புறம் அதை மறந்துடணும். அவங்களோ எதோ ஐ.எஸ்.ஓ. அதிகாரிங்க மாதிரி நம்ம வேலையை இன்ஸ்பெக்சன் செய்யாம விடமாட்டாங்க. இப்படிதான் ஒரு சனிக்கிழமை எனக்கு சனிதெசை ஆரம்பிச்சுது. "என்னங்க, என் ஃப்ரெண்டு லதாவுக்கு உடம்பு சரியில்லை. நான் போய் ஒரு எட்டு என்னன்னு பாத்துட்டு வந்துடறேன். பொரியல் செய்துட்டேன். நீங்க சாம்பார் மட்டும் செஞ்சு பாப்பாக்குக் குடுத்துடறீங்களா? நான் வந்தப்புறம் ரெண்டுபேருமா சேர்ந்து சாப்பிடலாம்" என்றாள். நான் சமைச்சு, அதுக்கு விமர்சனம் வாங்கி, எதுக்கு வம்புன்னு "இன்னிக்கு வேணா வெளிய போய் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்மா" என்றேன். சுர் என்று மூக்குக்கு மேல் கோவம் வந்ததே பாக்கணும். "நானெல்லாம் பொறக்கும்போதே கரண்டிய பிடிச்சுட்டுதான் பொறந்தேனா? கல்யாணம் ஆகுற மட்டும் எங்கம்மா வீட்டில ஒரு சாதம் வைக்கக் கூட நேர்ந்ததில்ல. ராணியாட்டம் வளர்ந்தேன். கல்யாணம் ஆனப்புறம் உங்களுக்கு ருசியா ஆக்கிப் போடணும்னு வகைவகையா சமையல் கத்துக்கலை? என்னிக்கோ ஒருநாள் சாம்பார் பண்ணச்சொன்னா வெளிய போகலாம்னு சொல்றது என்ன? முயற்சியானும் பண்ணலாமில்ல?" என்று சத்தம் போட்டுவிட்டுப் போய்விட்டாள். நானோ பேச்சுலரா இருந்தபோதே வெங்காயம் நறுக்கறது, பாத்திரம் தேய்க்கிறது, குப்பையக் கொட்டறது இதுமாதிரி எடுபிடி வேலையத்தான் செஞ்சிட்டிருந்த ஆளு. சரி, சாம்பார்தானே, செஞ்சிட்டா போச்சுன்னு வேட்டிய மடிச்சு கட்டிட்டு களத்துல இறங்கிட்டேன். ஒரு மணிக்கு வீட்டுக்குள்ள நுழையும்போதே "பாப்பாக்கு சாப்பாடு போட்டீங்களா? என்ன சாப்பிட்டா? சரியா சாப்பிட்டாளா?" என்ற கேள்விகளை அடுக்கிட்டே நுழைஞ்சா என் பொண்டாட்டி. "சாப்பிட்டாம்மா. அதெல்லாம் நான் பாத்துக்கிட்டேன். நீ வா சாப்பிடலாம்" என்று தட்டை டேபிளில் எடுத்து வைத்தேன். நான் செய்த சாம்பாரை கெமிஸ்ட்ரி லேபில எக்ஸ்பெரிமென்ட் செய்யுற மாதிரி ஒரு கலக்கு கலக்கி, காப்பிய ஆத்துர மாதிரி ஆத்தி, மோந்து பார்த்து பிறகுதான் தட்டுலயே ஊத்திக்கிட்டான்னாப் பார்த்துக்கோங்களேன். ஒரு பயத்துடன் கொஞ்சமாய் வாயில் போட்டுக்கொண்டாள்.
"என்ன பருப்பு போட்டு செய்தீங்க?" என்றாள். "அதெல்லாம் எதுக்கும்மா? நல்லா இருக்கா இல்லியா?" என்றேன். மறுபடியும் சாம்பாரைக் கலக்கி அடியிலிருந்து பருப்பை எடுத்து நோட்டம் விட்டாள். "என்னங்க, கடலப் பருப்பைப் போட்டு சாம்பார் பண்ணியிருக்கீங்களே. என்னவோ ரொம்ப வித்யாசமா இருக்கேன்னு நெனச்சேன். கடலப் பருப்புக்கும் துவரம்பருப்புக்கும் கூட வித்யாசம் தெரியாதா? யாராவது கடலப் பருப்பைப் போட்டு சாம்பார் செய்வாங்களா?" என்றாள். "எந்தப் பருப்பைப் போட்டு சாம்பார் செஞ்சா என்னம்மா? சும்மா குறை கண்டுபிடிக்கிறியே" என்றேன். அவ்வளவுதான், சமையல் பற்றி பெரியக் க்ளாஸே எடுக்க ஆரம்பித்துவிட்டாள். ஆம்பளைங்களுக்கு எது தெரியாது, எது வராதுன்னு ஒரு பட்டியல் போட்டுக்கிட்டு எதாவது சண்டை வந்தால் அதையெல்லாம் எடுத்து அஸ்திரமாட்டம் பயன்படுத்துவாங்க போலிருக்கு. ஒரு கார் பிரேக்டவுன் ஆனால் இவங்களால சரிசெய்ய முடியுமா? கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனா ஃபிக்ஸ் பண்ண முடியுமா? அதெல்லாம் சொன்னா பூகம்பம்தான் வெடிக்கும்யா! கடைசில நானே ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு சாம்பாரோ ரசமோ செய்யறதா ஒத்துக்க வேண்டியதாப் போச்சு.
என்னதான் சொல்லுங்க பொம்பளைங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பக் கொறச்சல். நகைச்சுவை உணர்வு இல்லன்னா நாமெல்லாம் இவங்ககிட்ட குப்பை கொட்ட முடியுமா? இப்படிதாங்க ஒரு கெட்டுகெதர் பார்ட்டிக்கு வலுக்கட்டாயமா என்னை அழைச்சிட்டுப் போனா. எனக்கோ அங்க வந்த ஒருத்தரையும் தெரியாததால ஓரமா உட்கார்ந்திருந்தேன். "என்ன கூத்தன் சார், எப்படி இருக்கிறீங்க. ரொம்ப நாள் ஆச்சு பார்த்து" என்றபடி அவளுடைய தோழி மீனாவோ, மோகனாவோ வந்து உட்கார்ந்தாள். "நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? டெலிவரி எப்போ?" என்றுக் கனிவாக் கேட்டேன். சட்டுன்னு முகம் மாறி எழுந்து போய்ட்டா. போனவ சும்மா போனாளா? என் வீட்டுக்காரம்மாவிடம் எதையோ சொல்லிட்டு கோபமாக போய்ட்டா.
விறுவிறுவென்று வந்து "என்னங்க, எழுந்திருங்க போலாம் வீட்டுக்கு" என்று என்னவளும் சொல்ல நானும் நல்லதா போச்சுன்னு கிளம்பிட்டேன். காரில் வந்து உட்காருவதற்குள் ஆரம்பித்தாள் "என்ன சொன்னீங்க மாலாகிட்ட?". "ஏம்மா, என்கிட்ட வந்து பேசினது மாலாவா? டெலிவரி எப்போன்னு கேட்டேன். என்னாச்சு?" என்றேன். "அவளுக்கு குழந்தை பிறந்து ரெண்டு வருஷமாகுது. சிலபேருக்கு வயிறு அப்படித்தான் வடியாம இருக்கும். அதுக்குன்னு சந்தேகம் இருந்தா என்கிட்ட கேக்கவேண்டியதுதானே? நேரே அவகிட்டயே அப்படி கேக்கறதா? எங்கிட்ட வந்து உன் வீட்டுக்காரருக்கு ரொம்பத்தான் லொள்ளுன்னு சொல்லிட்டுப் போறா. இனிமேல் என்னோட ஃப்ரெண்ட்ஸ் வட்டத்துல எப்படி பேசுவேன். உங்களப் போய் அழைச்சிட்டு வந்தேனே" என்று கடுகு மாதிரி வெடித்தாள். "அப்பிடியாம்மா? சந்தேகம் இருந்தாத்தான் பேசாம இருந்திருப்பேனே. இதுக்குத்தான் தெரியாத இடத்துக்கெல்லாம் என்னை கூப்பிடாதன்னு சொல்றது" என்றேன். யோசித்துப் பார்த்தால் நான் சொன்னது எனக்கே சிரிப்பாய் வந்தது. ம்ஹூம். இவங்ககிட்ட அதை எதிர்பாக்கறது மண்ணுக்குள்ள நெலாவத் தேடின மாதிரிதான்.
நம்மப் பத்தி பெருமையா நாலு வார்த்தை சொல்லி வைப்போமுன்னு நெனச்சா இவங்ககிட்ட அது நடக்கவே நடக்காது. ஒரு நாள் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு "எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு தர எத்தனையோ பேரு வந்தாங்க. நான்தான் உன்னையே கட்டிக்கிறேன்னு சொல்லிட்டேன்" என்றேன். வேலியில போற ஓணான எடுத்து மடியில கட்டின கதையா அதுக்கு அவளும், "நானும்தான் மீசையுள்ள ஆம்பளையத்தான் கட்டுவேன்னு புத்தி கெட்டுப் போயி ஒத்தக் காலுல நின்னு உங்களக் கட்டினேன். அதுக்கு பயனாத்தான் நான் ஆசப்பட்டபடி மீசையோட இருக்கீங்க. அனா தலையிலதான் ஒரு முடியக் காணும். இதுல பேச்சுவேறெ" என்று நொட்டினாள். ஆகையால இப்படி என்னப்போல தினம் தினம் குமட்டில் குத்து வாங்கும் எல்லாரும் இந்தச் சங்கத்தில உறுப்பினராகலாம்.
ஆனா என்னதான் கோவத்துல நூறு பேச்சு பேசினாலும் நமக்காக உருகுவதும் மருகுவதும் அம்மாக்கு அடுத்தபடியா அவங்கதானே! அதுவும் லீவுக்கு ஊருக்கு போனா மனுஷனுக்கு சமைக்கத் தெரியாதேன்னு கிளம்பறதுக்கு ஒரு வாரம் முன்னாடியிலிருந்தே வகை வகையாய்ப் பொடியும், தொக்கும், ஊறுகாயும் செஞ்சு ஃப்ரிஜ்ஜை நெரப்பி வச்சுட்டு போற அன்பை என்ன சொல்றது? ஃபோனிலயும் சாப்பிட்டீங்களா, தூங்கினீங்களான்னு நாப்பது வயசுக்காரனக் குழந்தைபோல பாவிக்கறதை எப்படிச் சொல்ல? என்ன? கட்சி மாறிட்டானேன்னு நினைக்குறீங்களா? பக்கத்துல இருக்குற இருட்டவிட எங்கேயோ தெரியுற ஒளியைப் பாக்கறேன்யா!
அபர்ணா பாஸ்கர் |