ஈழத்தமிழ்-அமெரிக்கப் பெண் கலி·போர்னியா வரித்துறைத் தலைவராக நியமனம்
கலி·போர்னிய வருவாய் வாரியம் மாநில வரித்துறைத் தலைமைச் செயல் அலுவர் பதவிக்குத் செல்வி ஸ்டானிஸ்லாஸ் அவர்களை நியமித்துள்ளது. இந்த நியமனம் கலி·போர்னியா மாநில மேலவையால் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த வரித்துறையின் 55 ஆண்டு வரலாற்றில் இவர் இப்பதவியை வகிக்கும் நான்காவது நபரும் முதல் பெண்மணியும் ஆவார். 2003-04-ல் 44 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டிய கலி·போர்னியா மாநில வரித்துறை நாட்டின் மாநில வரித்துறைகளுக்குள் மிகப் பெரியது.

முந்நூறு வழக்கறிஞர்கள் உட்பட 6000 பேர் வேலை பார்க்கும் இந்தத் துறையின் முதன்மைப் பதவிக்கு நியமிக்கப் பட்டிருக்கும் செல்வி ஸ்டானிஸ்லாஸ் இலங்கையில் சிறந்த கல்விமான்கள் நிரம்பிய குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாத்தா விடுதலை பெற்ற இலங்கையின் முதல் நிதித்துறைச் செயலாளர். கல்வியாளரும், பேராசிரியருமான (மறைந்த) அருள்திரு பீட்டர் பிள்ளை பாதிரியார், யாழ்ப்பாணம் கத்தோலிக்க பிஷப்பு (மறைந்த) மறைத்திரு டாக்டர் எமிலியானஸ் பிள்ளை ஆகியோரும் இவரது உறவினர்கள். கணக்கர் (accountant) பதவியிலிருந்த இவரது (மறைந்த) தந்தை பென்னி ஸ்டானிஸ்லாஸ் வரிச்சட்டம் படித்து வழக்கறிஞராக இவரை ஊக்குவித்தவர்.

நாற்பத்தைந்து வயதுக்குள் இந்த உயர்பதவியை எட்டியுள்ள செல்வி இலங்கைச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றுத் தனியார் துறையில் திறமைமிக்க வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கட்டடப் பொறியாளரான இவரது கணவர் அர்ஜுன் ஜோஸப்புடன் 1986-ல் அமெரிக்காவுக்குக் குடிபுகுந்தார். சாக்ரமென்டோ லிங்கன் சட்டப் பள்ளியில் கலி·போர்னியச் சட்டம் படித்து, மக்ஜோர்ஜ் சட்டப் பள்ளியில் முதுநிலைச் சட்டம் பயின்று, வரிச்சட்ட நிபுணரானார். 1996-ல் அரசு வருவாய்த்துறையில் சேர்ந்தார்.

இயன்றபோதெல்லாம் ஏழைகளுக்குச் சட்ட உதவி செய்யும் இயல்புள்ள செல்வி ஸ்டானிஸ்லாஸ், கலி·போர்னியா தமிழ் கழகம் மற்றும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மையம் (International Forum for Information Technology) அமைப்புகளை வரிவிலக்குப் பெற்ற அமைப்புகளாகப் பதிவுசெய்ய உதவினார். சாக்ரமென்டோ தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இவரது எளிமையும் தன்னடக்கமும் குறிப்பிடத்தக்கன.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com