நாராயணி அம்மன் ஆன சதீஷ்குமார்
ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

1996ம் ஆண்டில் திடீரென ஓம்சக்தி நாராயணி சித்தர் பீடத்திற்கு நாடக பாணியில் நான் அறிமுகமானேன். ஒருநாள் என் வேலைகளை கவனித்துவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்பியபோது என் வீட்டுக்கு வெளியே பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் பத்து நபர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் தன்னை மாஜிஸ்டிரேட் துரை சண்முகம் என்றும், வேலூர் அருகே ஆரியூரில் அமைந்துள்ள ஓம்சக்தி நாராயணி சித்தர் பீடத்தின் செய்தித் தொடர்பாளர் என்றும் அறிமுகம் செய்து கொண்டார். இருபது வயதுள்ள 'சதீஷ்' என்ற இளைஞர் தேவி நாராயணி அமமனில் கலந்து விட்டதாகவும் மக்கள் அவரை நாராயணி அம்மன் என்று அழைக்க ஆரம்பித்து விட்டதாகவும் அவர் என்னிடம் சொன்னார்.

பொதுவாகவே நான் சாமியார்கள் பற்றிச் சந்தேகத்துடனேயே இருந்து வந்திருக்கிறேன். நிச்சயமற்ற உலகில் அடியெடுத்து வைப்பதில் எச்சரிக்கையுடன் இருந்தேன். விளக்கமுடியாத அதிசயங்கள் பற்றி எதிரிடையான கருத்துக்களை சொல்லாமல் ஒதுங்கியே இருப்பேன். ஆயினும் நான் தேவி நாராயணி அம்மனான இளைஞன் சதீஷ் பற்றிய கதையை கவனமாகக் கேட்டேன்.

தேவி நாராயணி என்று அழைக்கப்படும் சதீஷ்குமார், ஜனவரி 3, 1976 அன்று கூட்டுறவு நூற்பாலை ஊழியரான நந்தகோபாலுக்கும், வேலூர் அருகிலுள்ள சத்துவாச்சாரி கிராமத்தில் பள்ளி ஆசிரியையான ஜோதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே நுட்பமான ஆன்மீக விஷயங்களில் அனுபவம் பெற்றிருந்தார். ஆறு அல்லது ஏழு வயதிலிருந்தே சிறுவர்களுடன் விளையாடுவதற்குப் பதிலாக மரத்தின் கீழிருந்த பிள்ளையாரையும் இதர தெய்வங்களையும் கும்பிட்டுக் கொண்டிருப்பர். பன்னிரண்டு வயதில் தூங்கப்போகும் போது புருவங்களுக்கு இடையில் அதிசய ஒளிவட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். பதினாறாவது வயதில் அற்புதங்களை நிகழ்த்தும் சக்தி கிட்டியது. பொருள்களை வரவழைக்கும் ஆன்மீக சக்தியும் கிட்டியது.

அக்டோபர் 1993ல், ஆரியூர் கிராமத்தில் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிலுள்ள புற்றில் தான் சுயம்புவாகத் தோன்றுவதாக தேவி நாராயணி அம்மன் அவனிடம் தெரிவித்ததாக அவருக்குத் தோன்றியது. அன்றைய தினம் ஏழு குழந்தைகள் மஞ்சள்நீரைப் புற்றில் தெளிப்பதாகத் தோன்றியது. அதிலிருந்து நறுமணப்புகை கிளம்பியதும் பூமி வெடித்து சுயம்புவாக தேவி நாராயணி அம்மன் வெளிப்பட்டது. இந்தச் சிலைத்தான் இப்போது தினமும் பீடத்தில் வணங்கப்படுகிறது. சுருக்கமாக, தேவியின் அருள் சதீஷின்மேல் அவரது இளம் பருவத்திலேயே இறங்கிவிட்டதாக மக்கள் நம்புகிறார்கள்.

கிறிஸ்தவ மதத்தினரால் நடத்தப்படும் ஊரிஸ் பள்ளியில் +2 வகுப்புடன் அவரது படிப்பு முடிவுக்கு வந்துவிட்டது. எந்த ஒரு மத அல்லது ஆன்மீக குருவிடமும் முறையான போதனை பெற்றுக்கொள்ளவில்லை.

எதிர்காலத்தில் பீடத்தின் மக்கள் நல, தர்ம காரியங்களைக் கவனித்துக் கொள்ள ஒரு குழு அமைக்கவும், சதீஷின் இருபதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும் என்னை அழைக்க வந்திருப்பதாக அவர்கள் சென்னார்கள். நீண்ட காலமாகவே மனிதக்கடவுளர் பற்றி எனக்கு வெறுப்பு இருந்ததால் அழைப்பை நான் ஏற்கவில்லை. "உங்களில் யாரையும் எனக்குத் தெரியாது. ஏன் நான் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்டேன். தேவி நாராயணி அம்மனே என்னை அழைக்கும்படித் தெரிவித்ததாக அவர்கள் பதிலளித்தனர்.

இது என் ஆர்வத்தைத் தூண்டியது. நீண்ட யோசனைக்குப் பிறகு நான் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன். எனக்கு, சுமார் இருபது வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சதீஷையும் என் சொந்தக் குழந்தையாகக் கருதிப் பிறந்த நாள் விழாவில் திறந்த மனதுடன் கலந்து கொண்டு தேவியுடனும் அதைப் பின்தொடர்ந்து வரும் அனுபவங்களையும் பெற நினைத்தேன். இந்தப் பீடம் தர்ம காரியங்களையும் மக்கள்நலக் காரியங்களையும் மேற்கொள்ளத் தன்னை ஓர் அறக்கட்டளையாக 1995ல் பதிவு செய்து கொண்டுள்ளது. இது எவ்வாறு சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிய நினைத்தேன்.

இப்படித்தான் முதலில் பீடத்திற்கு நான் சென்றேன். அங்கு ஒரு சிறிய வீடு. அந்தத் தற்காலிகக் கோவில் நாராயணி அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. பூஜையிலும் சடங்குகளிலும் பங்கு கொண்டேன். அம்மனின் கையில் எங்கிருந்தோ விபூதி குங்குமம் நிஜமாக வந்து கையில் விழுவதைக் கண்டேன். ஒரு சிறு அம்மன் சிலையும் தேவியின் கையில் வந்து விழ அது என்னிடம் வழங்கப்பட்டது. அதை நல்லதிர்ஷ்டச் சின்னமாக இன்றும் என் கைப்பையில் எடுத்துச் செல்கிறேன்.

இதுதான் பீடத்துடனான எனது உறவின் ஆரம்பம். கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பீடத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு அது வளர்ந்து வருவதையும் கண்ணாரக் கண்டு வருகிறேன். ஒரு பெரிய கோவிலும் தியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஒரு பள்ளியும் ஒரு மருத்துவ சாலையும் அதனால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் பீடம் சொந்தமாகப் பதினேழு ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறது.

சாயி பாபாவைப் போல எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திய பிறகு நாராயணி அம்மா அழைப்பின் பேரில் கனடா, அமெரிக்கா முதலிய பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளது. இன்று நாராயணி அம்மாவுக்கு பக்தர்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் ஏன் சிங்கப்பூரிலும் கூட இருக்கிறார்கள். இதில் அதிக எண்ணிக்கையில் சீனர்களும் உள்ளனர். இவர்களின் ஒரு குழு வேலூருக்கு அம்மனை தரிசிக்க வந்திருந்தது.

பீடத்திற்கு நான் சமீபத்தில் சென்றிருந்த போது சதீஷின் இயற்பியல் ஆசிரியரையும், அவனது மூத்த சகோதரர் பாலாஜியையும் சந்தித்தேன். அவரது குழந்தைப் பருவத்திலும் பள்ளியில் படித்த நாள்களிலும் நடந்த சில சம்பவங்களை அவர்களிடமிருந்து அறிந்துகொண்டேன்.

திரு.டி.வேணுகோபால், இயற்பியல் ஆசிரியர் என்னிடம் இவ்வாறு கூறினார்: "சதீஷ் ஊரிஸ் பள்ளியில் +2 மாணவராக இருந்தபோது கற்பித்தேன். அப்போது பள்ளியில் அநேக விஷயங்கள் நடந்தன. ஒருநாள் நிறைய குங்குமம் சதீஷினால் வரவழைக்கப்பட்டது. ஒருநாள் ஒரு சிகப்பு ரோஜாப்பூவை வரவழைத்து எனக்குக் கொடுத்தார். சில வினாடிகள் சென்று அது வெண்ணிறமாக மாறியது.

மற்ற மாணவர்கள் அவரிடம் சவால் விட்டுக் கேலி செய்தனர். ஒரு சமயம் ராம்பிரசாத் என்ற மாணவன் அவரது அதிசய செயல்களை இகழ்ந்து பேசினான். அப்போது சதீஷ் ஏதோ செய்ய, உடனே வகுப்பறை முழுவதும் பூக்களால் நிரம்பி விட்டது. அதன் பிறகு யாருமே அவரைக் கேலி செய்வதில்லை. ஒருநாள் தலைமை ஆசிரியர் அவரை அழைத்து "இப்போதே ஏதாவது அரிய பொருளை எனக்கு வரவழைத்துக் கொடு" என்று கேட்டார். சதீஷ் ஒரு சாக்லேட் வரவழைத்துக் கொடுத்தார். அறிவியல் பாடம் போதிப்பவரான தலைமை ஆரிரியர் இதைக்கண்டு திகைத்துப் போனார். அதன் பிறகு சதீஷிடம் அவர் எதுவும் சொல்வதில்லை."

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் வேணுகோபால் தனது பழைய மாணவரின் ஒரு பக்தராகி விட்டார்.

சதீஷின் தமையன் பாலாஜி நுண்ணுயிர் அறிவியலாளர். தன் தம்பியின் குழந்தைப் பருவ நினைவுகள்பற்றி இப்படிக் கூறுகிறார்: "சதீஷ் மற்றக் குழந்தைகளைவிட மாறுபட்டவனாக இருந்தான். சிறு வயதிலிருந்தே மரத்தின் கீழேயோ அல்லது பூஜை அறையிலேயோ அமர்ந்து விநாயகரையும் மற்றக் கடவுளையும் வணங்கி பூஜை செய்து கொண்டிருப்பான். உண்மையாகவே ஒருபோதும் இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவன் சிலைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டேன். பன்னிரண்டாவது வயதில் ஆரியூருக்கு வந்து வெள்ளிக்கிழமை தோறும் புற்றுக்கு பூஜை செய்து வணங்குவான். ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் பள்ளிக்கூடத்திலிருந்து நேராக ஆரியூர் சென்று பக்கத்து வீட்டில் தங்கி விடுவான். வெள்ளிக்கிழமை காலையில் புற்றில் வழிபாடு நடத்திவிட்டு அங்கிருந்து நேராகப் பள்ளிக்குப் போவான். அவன் மிகுந்த பக்தி உள்ளவன். இதை அப்போது நான் உணர்ந்து கொள்ளவில்லை. குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பல தடவை அவனைத் தொடர்ந்து சென்று வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்திவிட்டு வந்தனர்.

"பள்ளிப் பையன்களிடமிருந்து சதீஷின் அதிசயச் செயல்கள் பற்றி நான் கேள்விப்படுவதுண்டு. ஆனால் இவையெல்லாம் குறும்புதனம் என்று ஒதுக்கிவிடுவேன். சதீஷுக்குப் பதினாறு வயதானபோது நான் புதுக்கோட்டை கல்லூரியில் இருந்தேன். எனது தாயார் தொலைபேசி மூலம், தேவி நாராயணி அம்மன் சதீஷுக்கு தெய்வ சக்கியை வழங்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிவதாக அறிவித்தார். இதைப்பற்றி அறிந்து கொள்ள நகரம் முழுவதுமே கூடிவிட்டது. இது பிதற்றல் என்று தாயிடம் சொல்லி விட்டேன்.

"நான் ஊருக்குத் திரும்பியபோது இவைகளை நம்பாமல் அவன் செய்தெல்லாம் வெறும் வித்தை என்று சதீஷிடம் சொன்னேன். அந்தச் சமயம் அவன் வெற்றிலை பாக்கை மென்று கொண்டிருந்தவன், தான் துப்பியதை குடிக்கும்படி சொன்னான். நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தாய் தேவி கொடுப்பது எதுவாக இருந்தாலும் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆகவே என் உள்ளங்கையை நீட்டி எச்சிலை வாங்கிக் குடித்தேன். அது இனிப்பான பாலாக ருசித்தது. எச்சிலாக இல்லை. நான் அப்படியே அதிர்ந்து போனேன். அன்று முதல் அவனிடம் கேள்வி கேட்பதையும் அவனைக் கேலி செய்வதையும் விட்டு விட்டேன்."

(தொடரும்)

ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com