பசியால் இளைத்த நரி ஒன்று இரைதேடி அங்கும் இங்கும் அலைந்தது. வழி தவறி காட்டைவிட்டு வெகு தொலைவு சென்றுவிட்டது. இருந்தும் அதற்குச் சரியான இரை கிடைக்கவில்லை. சோர்வுடன் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் வழியில் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பார்த்தது. அங்கே கொத்துக் கொத்தாக கொடிகளில் திராட்சை காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தது. "ஆஹா, நம் பசிக்கு நல்ல உணவு. இதைத் தின்று பசியாறுவோம்" என்று நினைத்த நரி ஆர்வத்துடன் அவற்றைப் பறித்துத் தின்ன முயன்றது. ஆனால் திராட்சை மிக உயரத்தில் காய்த்திருந்ததால் பறித்துத் தின்ன முடியவில்லை. ஆனாலும் சளைக்காமல் எம்பி எம்பிக் குதித்தது. நரி களைப்படைந்துதான் மிச்சமே தவிர அதற்கு திராட்சை சிக்கவில்லை. அதனால் சோகத்துடன் "சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்" என்று தனக்குத்தானே திரும்பச் சொல்லிக் கொண்டே அவ்விடம் விட்டு அகன்றது.
சற்று தூரம் சென்றதும் வழியில் ஒரு நரியைப் பார்த்தது. உற்சாகமாக ஏதோ பாடிக்கொண்டே வந்த அந்தப் புதிய நரி, சோர்வோடு வந்த இந்த நரியைப் பார்த்தது. காரணத்தைக் கேட்டது.
தான் மிகுந்த பசியோடு இருப்பதாகவும், பல இடங்களில் தேடியும் இரை கிடைக்கவில்லை என்றும், திராட்சைக் கொத்துகளை உண்ண முயற்சித்தும் அது உயரத்தில் இருந்ததால் தனக்கு எட்டவில்லை என்றும் சோகத்துடன் சொன்னது நரி.
"சரி என்னுடன் வந்து அந்த திராட்சைத் தோட்டத்தைக் காட்டு" என்றது புதிய நரி.
இரண்டுமாக திராட்சைத் தோட்டத்தை அடைந்தன. நரி மீண்டும் பழத்தைப் பறிக்க முயற்சித்தது. உயரம் போதாமையால் தோல்வியடைந்தது. புதிய நரியும் முயற்சித்துப் பார்த்தது. அதற்கும் திராட்சைகள் கிடைக்கவில்லை.
"இதைத்தான் நான் சொன்னேன். நமக்கு இவை கிடைக்காது" என்றது வாட்டத்துடன் நரி.
அதற்குப் புதிய நரி, "இரு, இரு. அப்படிச் சொல்லாதே! ஓரிரு முறை முயற்சித்துப் பார்த்துவிட்டு, அது கிடைக்கவில்லை என்பதற்காக நம் முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது. மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு அங்கும் இங்கும் பார்த்தது.
சற்று தூரத்தில் திராட்சைகளைப் பறித்துப் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கூடை கண்ணில் பட்டது. அதை மெல்ல மெல்ல நகர்த்தி திராட்சைக் கொடியின் கீழே கொண்டு வந்தது புதிய நரி. பின்னர் பசியோடு இருந்த நரியைப் பார்த்து, "இதோ பார், நீ முதலில் இந்தக் கூடைமீது ஏறிக்கொள். பின் இந்தப் பழங்களைப் பறித்துப் பார். உனக்கு எட்டும்" என்றது. நரியும் அப்படியே செய்தது. வயிறு நிறையப் பழத்தைத் தின்றது. பின்னர் அந்த நரி கீழே இறங்கி நிற்க, புதிய நரி கூடைமீது ஏறி நின்றுகொண்டு பழங்களை உண்டது.
பின் புதிய நரி, பழைய நரியைப் பார்த்து, "பார்த்தாயா, நம் புத்தியைக் கொண்டு, சரியான முறையில் முயற்சி செய்தால் எதையும் அடைய முடியும், இல்லையா?" என்றது.
சுப்புத்தாத்தா |