அமெரிக்காவுக்குக் கிளம்பும்போது தலைமுடி வெட்டிக் கொள்ளத் தோன்றவில்லை. ஆஸ்டினுக்கு வந்து மூன்று மாசம் ஆச்சு. தலைமுடி காடுபோல் வளர்ந்தாச்சு. தலையில் எண்ணெய் தேய்க்க முடியாது. காரணம், குளிரில் தேங்காய் எண்ணெய் நெய் போல உறைந்து விடுகிறது. ஒரு கரண்டியில் எடுத்துச் சூடாக்கித் தேய்க்கலாம். தேய்த்தபின் தலையில் உறைந்து விட்டால்.. என்ன செய்வது என்று பயம்.
இன்னிக்கு முடி வெட்டிக் கொண்டுதான் மறுவேலை. மறுவேலை என்ன? சாப்பாடு, தூக்கம்தான். விளைவு எடை கூடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து புறப்படும்போதே தலையை மொட்டை அடித்துக் கொண்டு புறப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாததால் எவ்வளவு கஷ்டம்! சலூனுக்குப் போவதே பெரும் பிரச்னை. ஊரில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் சலூன். இங்கே குடியிருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு பெருங்காடு. கடை கண்ணி எதுவும் கிடையாது. கறிவேப்பிலை வாங்க வேண்டுமென்றாலும் மணிக்கணக்கில் காரில் போகவேண்டும். மகளிடம் சலூனுக்குக் கொண்டு விடும்படிக் கேட்க வேண்டும். அவளுக்கு சௌகரியப்பட வேண்டும். நினைக்கும் பொழுதே ஒரு வெட்கம் தோன்றுகிறது. மருத்துவமனைக்குக் கூட்டிப் போகச் சொல்லலாம். சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்லலாம். ஆனால் சலூனுக்கு...!
இது என்ன கொடுமை. ஒரு மைல் நடந்தால் சலூன்தான். இதுவரை ஜனங்கள் ரோட்டில் நடந்து போவதைப் பார்க்கவில்லை. அதிகாலை வேலையில் கொட்டுகிற பனியில் ஒரு சிலர் கையுறை, காலுறை, முகமூடி அணிந்து கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். நடந்து போவது இங்கு யாருக்கும் வழக்கமில்லையோ? தெரியாது. ஆனால் பூங்காவுக்குக் காரில் வந்து அங்கே ஓடிச் சாடி, சைக்கிள் ஓட்டி எல்லாம் செய்கிறார்கள். குடும்பமாக வருகிறார்கள், போகிறார்கள்.
சலூனுக்கு நடந்தே போகத் தீர்மானித்தேன். மழையில்லாமல் வெயில் அடிக்கிற வேளையில் போக வேண்டும். நம்மூரில் அழுக்கு உடையில் போனாலும், கூட்டமிருந்தாலும் உபசாரம் பண்ணி வரவேற்று முடிவெட்டு நடக்கும். இங்கே அழுக்கு உடைக்கு எங்கே போவது? தினந்தோறும்தான் வாஷிங் மெஷினில் போட்டு எடுத்து விடுகிறார்களே! நல்ல உடையில் முடிவெட்டிக் கொள்ளப் போவது வருத்தமான விஷயம்தான். ரோமாபுரிக்குப் போனால் ரோமானியனாகத் தானே இருக்க வேண்டும்?
நல்ல உடை அணிந்தாகி விட்டது. தலை முடியைத் தண்ணீர் விட்டு சீப்பால் வாரியாச்சு. பின்னால் வளர்ந்திருக்கும் முடியைப் பின்னிக் கொண்டை போடலாம். சாக்ஸ் அணிந்தாகி விட்டது. அதைப் போடுவதே ஒரு பிரம்மப்பிரயத்தனம். ஷூவில் காலைத் திணிக்க நான் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நாடாவை லூஸ் பண்ணாமல் காலைப் போடச் செய்த முயற்சியில் ஷூ ஒரு பக்கமும், நான் ஒரு பக்கமும் விழுந்தோம். பக்கத்திலிருந்த பேரக்குட்டி, அமெரிக்கன் ஆங்கிலத்தில் என்னவோ சொல்லிச் சிரித்தது. எனக்குத்தான் புரியவில்லை. பின் ஷூவை எப்படிப் போட்டுக்கொள்ள வேண்டுமென்று எனக்குச் செயல்முறை விளக்கம் கொடுத்தது. அதுவும் அமெரிக்க ஆங்கிலத்தில். என் நிலை செவிடன் காதில் சங்குதான்.
ஷூ வேண்டாம், செருப்பில் நடக்கலாமா என்றால் கடுங்குளிர். காலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? மருத்துவ இன்சூரன்ஸ் இல்லாமல் வந்திருக்கிறேன். முழுக்காலுடன் நல்லபடியாக ஊர் திரும்ப வேண்டும். எப்படியோ இரண்டு காலுக்கும் ஷூ மாட்டி, பாண்டு, ஷர்ட் எல்லாம் போட்டுக் கொண்டு, கைக்கு உறையும் அணிந்து கொண்டு, இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்தனை செய்துகொண்டு கிளம்பியாகி விட்டது. எல்லோரும் "எங்கே பயணம்?" என்று கேட்டார்கள். "சும்மா பார்க் வரை ஒரு வாக்" என்று சொன்னேன். என் மகள் "அது நல்லதுதான்" என்று சொல்லித் தலையை ஆட்டினாள். என் மனைவி, என் தொந்தரவு இல்லாமல் எங்கேயாவது தொலைந்தால் நல்லது என்ற எண்ணம் உடைய குணவதி. ஆகவே நான் தனியாக வெளியில் செல்வதில் எல்லோருக்கும் சந்தோஷம் என்பது உறுதியானது. "துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை" என்பதை மனதில் கொண்டு புறப்பட்டு விட்டேன். மகள் தந்த 20 டாலர் பாக்கெட்டில் பத்திரமாக இருந்தது.
வீட்டிலிருந்து இறங்கி நடைபாதையில் காலை வைத்தேன். இரண்டு கைகளையும் வீசி கம்பீரமாக நடக்க முற்பட்டேன். முதன்முதலாகக் கிழவன் காலில் ஷூ அணிந்து நடப்பது கண்கொள்ளாக் காட்சிதான். காலை முன்னால் வைத்தால் தள்ளாடுகின்றது. பாதத்தில் கடுமையான அழுத்தம். சிலர் ஷூ அணிந்து எப்படி ஓடுகின்றார்கள் என்று எனக்குப் பெரிய வியப்பு. சில நிமிடங்களில் விஷயம் புரிந்துவிட்டது. வீட்டில் இருந்த பழைய ஷூவை அணிந்தது காலுக்கு வேட்டு வைத்துவிட்டது. நடுவழியில் பூங்காவில் சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக் கொண்டேன். இன்னும் அரைமைல் தூரம் நடக்க வேண்டும். கொஞ்ச தூரம் நடந்தால் நடைபாதை முடிந்து விடும். பின்னர் அறுநூற்றி இருபதாம் நம்பர் சாலையில் நடக்க வேண்டும். வழியில் முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் எனக்கு 'ஹை' சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
ஹைவே 620ல் கார்கள் அங்கும் இங்கும் அசுர வேகத்தில் ஓடுகின்றன. செவரான் கேஸ் ஸ்டேஷன் அருகில் சில கார்கள் நின்று கொண்டிருக்கின்றன. நடைபாதை இல்லை. என்னைப் போன்ற கால்நடை யாராவது தெரிகிறதா என்று பார்த்தால் யாரும் இல்லை. பசு, நாய், எருமை கூடக் கண்ணில் தட்டுப்படவில்லை. ஒரே ஒரு அணில் மட்டும், மரக்கிளை ஒன்றிலிருந்து "உனக்கு இது தேவையா?' என்பது போல் என்னைப் பார்த்தது.
சலூன் வால்மார்ட்டின் பக்கத்தில் இருப்பதாக மகள் சொல்லியிருந்தாள். புல்மேட்டில் அதுவரை நடக்க வேண்டும். வழியில் தெரிந்த யாருடைய காரையாவது கை காண்பித்து நிறுத்தலாம் என்றால் எல்லாக் கார்களும் மின்னல் வேகத்தில் பறக்கவே ஒருவரையும் சரியாகத் தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் நடுவழியில் நிறுத்துவார்களா என்ன? உன்னைப் போல ஆட்களுக்கு இந்தியாதான் லாயக்கு என்றது மனச்சாட்சி. ஆனாலும் முடிவெட்டுவது இப்படி ஒரு சிக்கலாக உருவெடுக்கும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. அலைக்கற்றை பிரச்சினையை விட பெரும் சிக்கலாக என் முடிக்கற்றை ஆகிவிட்டதாகத் தோன்றியது. அடுத்து ஒரு சந்தேகம். ரோட்டில் யாரும் காணோம். ஒருவேளை இங்கே சாலையில் நடக்கக் கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா? நடந்தால் நூறு, இருநூறு டாலர் அபராதம் போட்டுவிடுவார்களோ! இப்படி எதுவும் தெரியாமல் இரண்டுங்கெட்டானாகப் புறப்பட்டு வந்த என் முட்டாள்தனத்தை நொந்து கொண்டேன்.
ஆஞ்சநேயரை நினைத்துக் கொண்டால் பயம் போய்விடும் என்று அம்மா அடிக்கடி சொல்வார். அவரை நினைத்துக் கொண்டு சாலை ஓரமாக நடக்க ஆரம்பித்தேன். ஷூ வேறு பின் பாதத்தை ரணகளப்படுத்திக் கொண்டிருந்தது. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வீட்டில் எல்லோரும் ஒரு க்ரீமைப் பூசிக் கொள்வார்கள். அதை அழகு சாதனம் என்று நினைத்து நான் பூசுவது கிடையாது. விளைவு, கையிலும் காலிலும் பாம்புச் சட்டை போல் தோல் உருமாறியிருக்கின்றது. முதுகில் இப்போது ஒரே சொறி. சொறியவும் முடியாது. கோட், ஷர்ட், பனியன் தாண்டி என் நகத்துக்கு எட்டாது. இத்தனை உபாதைகளுடன் முடி திருத்தும் நிலையத்தைக் கண்டுபிடிக்க இந்த நவீன கொலம்பஸ் இறங்கி விட்டேன்.
மழைத்துளி மேலே விழுந்தது. கையில் குடை இல்லை. வானத்தைப் பார்த்தால் மழை எந்த நேரத்திலும் கொட்டலாம் என்பது போல பயமுறுத்தியது. மழையில் நனைந்து காய்ச்சல், கீய்ச்சல் வந்தால் எந்த டாக்டரைப் போய்ப் பார்ப்பது? இந்தியாவிலிருந்து க்ரோசின் கொண்டு வந்திருந்தாலும் காய்ச்சல் அதில் தீரும் என்று உறுதியாகக் கூற முடியாதே. இது பெருமழையாக விழவில்லை. ஐஸ்கட்டியாக விழுகின்றது. கேஸ் ஸ்டேஷனில் ஒதுங்கி நின்றேன். கொலம்பஸ் தன் முயற்சியில் தோற்று விட்டான்.
வீடு போய்ச் சேர வேண்டும். கேஸ் நிரப்ப யாராவது தெரிந்தவர்கள் வருவார்களா என்று பார்த்தேன்.
'ஸார்' என்று யாரோ கூப்பிட்டார். திரும்பிப் பார்த்தேன். இளைஞர் ஒருவர் என்னிடம் வந்தார். 'ஐயா வணக்கம். நீங்கள் மணி சார்தானே!' என்று கேட்டுக் கொண்டே. "ஆமாம்" என்றேன். "நான்தான் கந்தசாமி. உங்கள் மாணவன். கலைக் கல்லூரியில் தமிழ் கற்றுக் கொடுத்து உனக்குச் சிறந்த எதிர்காலம் உண்டு என்று வாழ்த்தினீர்கள். இங்கே 'டெல்'லில் வேலை செய்கிறேன். வாருங்கள். என் வீட்டுக்குப் போகலாம். பின்னர் உங்களை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்" என்றான். கடவுளுக்கு நன்றி கூறி கந்தசாமியுடன் புறப்பட்டேன்.
அமெரிக்காவில் எப்படி வேண்டுமானாலும் தலைமுடி வைத்துக்கொள்ளலாம். யார் கேட்கிறார்கள்!
பேரா. ஆர்.எச்.எஸ். மணி, ஆஸ்டின், டெக்ஸாஸ் |