ஒரு பிடி சிரிப்பு
தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல

இவை எல்லாம் இருந்தும்
எழுதுகோலும் தாளும் இல்லாமல் போனதால்
சொல்லாமல் போன கவிதைகள் பலப்பல

போகிற போக்கில் பொழிகிற மேகம்போல்
மழலை இனம் மட்டும்தானே
நினைத்தவுடன் சிரிப்புக் கவிகளை உதிர்த்து
நிலமெல்லாம் கொட்டமுடியும்

மரங்களால் காற்று சுத்தமாகிறது - அறிவியலுக்கு.
மழலைச் சிரிப்பால், காற்று சுத்தமாகிறது - கவிஞனுக்கு.

சுற்றும் பூமி சுலபமாய்ச் சுற்ற
மசை போடுவதே மழலையின் சிரிப்புதானே!

இத்தனை பாவம் செய்தும் - இயற்கை
மனிதனை விட்டு வைத்திருப்பது
மழலையாய்க் கொஞ்ச காலம்
அவன் இருந்ததனால் தானோ?

பூமியைச் சிலிர்க்கச் செய்பவை இரண்டு!
தரையைத் தொட்டுத் தெறிக்கும் மழை!
தரையில் குதித்து சிரிக்கும் மழலை!

சூரியன் குளிரும்!
மழலையின் சிரிப்பில் மயங்கி நின்றால்.
மிளகாய் இனிக்கும்
குழந்தையின் சிரிப்புடன் குழைத்துத் தின்றால்.

மழலைப் பேச்சு - கவிதைகளின் தொகுப்பு.
மழலைச் சிரிப்பு - அந்த கவிதைத் தொகுப்பின் தலைப்பு.

அதுவரை மழலிய கவிதைகளை எல்லாம்
ஒரு தலை(சிரி)ப்புடன் தொகுப்பாய் வெளியிட்டு விட்டு
அடுத்த கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது
சிரித்துவிட்டுப் பேசும் குழந்தை!

இரண்டு வயதுக்குள் இருநூறு இதிகாசங்களை
இப்படித்தானே குழந்தைகளால் எழுத முடிகிறது.

பொக்கை வாய் வழியே ஒரு பிடி சிரிப்பு.
மரண பூமி மறுபடி உயிர்ப்பு.

எப்போதெல்லாம் கவிதை படிக்கத் தோன்றுகிறதோ
அப்போதெல்லாம்
பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்.
அங்கேதான்,
விளம்பரம் இல்லாத கவியரங்கங்கள்
விளையாட்டாய் நடந்துகொண்டிருக்கும்.

லெனின்,
பாஸ்டன்

© TamilOnline.com